பைபிளின் மெய்யியல் – கடிதம்

அன்புமிக்க ஜெ,

வணக்கம். பைபிள் வகுப்பினை முடித்து ஊருக்கு திரும்புகையில் நிச்சயமா கடிதம் எழுத வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டேன். எந்த மதநூலையும் வாசிக்காத எனக்கு உங்கள் தத்துவ வகுப்பிற்கு பிறகுதான் அம்மாதிரியான நூல்களை வாசிக்கவும், அதனை கற்றுக் கொள்ளவும் ஆர்வம் உண்டானது. முதல் பைபிள் வகுப்பின்  அறிவிப்பு வந்த பொழுது கலந்து கொள்ள இயலாத சூழலில் இருந்தேன் . இரண்டாம் வகுப்பு அறிவிப்பு வந்த உடன் பதிவு செய்து விட்டேன்.

வகுப்பில்  சிரில் சார்   பைபிள் நூலின் அமைப்புதொகுத்த விதம்,வரலாறு, நிலப்பரப்பு, இனக்குழுக்கள், தொன்மங்கள், என  விளக்கிக் கொண்டே சென்றார். பின் கதைகள், உவமைகள், கவிதைகள், என பைபிளை வாசித்து அதில் இறையியல் பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதை சுட்டிக் காட்டிக் கொண்டே வந்தார். மேலும் கதை கூறல் வழியே நடக்கும் தொடர்ச்சியையும், அதன் இடையே உள்ள இடைவெளிகளையும், முரண்களையும்  சுட்டி காட்டி விளக்கமும் அளித்தார். மேலும் நண்பர்கள் தர்க்க பூர்வமான விளக்கத்தை கேட்ட பொழுதும், தொடர்ந்து வரும் முரண்களை கேட்ட பொழுதும் பதில் அளித்த சிரில் சார் பதில் ஏற்றுக் கொள்ளும் படியாக இருந்ததா? எனவும் கேட்டுக் கொண்டார்வகுப்பு இடைவெளிகளிலும், காலை நடையின் போதும் சிரில் சாரிடமும், மணி அண்ணா, கவிஞர் வேணு மற்றும் பல நண்பர்களினுடாக நடந்த உரையாடல்கள்  இந்த நாட்களையும், கற்றலையும் மேலும் இனிமையாக்கின.

வகுப்பின் தொடக்கத்தில் சார் கொடுத்த முன்னுரையின் போது இவ்வளவு நீண்ட வரலாற்றையும், கிறிஸ்துவத்தின் மெய்யியலையும் இரண்டரை நாள் வகுப்பில் தொகுத்து கொள்ள முடியுமா என பிரமித்து போய் இருந்த எனக்கு வகுப்பின் இறுதியில்  சார் கொடுத்த குறிப்புகளையும், விளக்கங்களையும்  கொண்டு பைபிளை வாசித்தால் கிறிஸ்துவ மெய்யியலை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்ற திருப்தியை அடைந்தேன்பைபிள் வகுப்பினை இனிமையான கற்றல் அனுபவமாக அளித்த சிரில் சாருக்கு அன்பு கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது மாதிரியான அரிய வாய்ப்பினை தொடர்ந்து எங்களுக்கு அளித்து வரும் உங்களுக்கும் நன்றி சார்.

அன்புடன்,

மதுபாலா

முந்தைய கட்டுரைதிறமைக்கும் அறிவுக்கும் என்ன வேறுபாடு?
அடுத்த கட்டுரைமேற்கத்திய கலைமரபு (ஓவியம், புகைப்படம்) ஏ.வி.மணிகண்டன்  -அறிவிப்பு