நம் மனம், நாம்

வணக்கம் சார்,

சார் என்னோட பெயர் க. நான் வசிக்கிறது கோயம்புத்தூரில். சார் எனக்கு ரொம்ப வருஷமா மனசு ஒரு விஷயத்துல focus பண்ண முடியல சார். நான் புத்தகம் வாசிப்பேன் சார். ஆனா மனசு ஒருநிலைப்படுத்த முடியல சார். இந்த பிரச்சனைக்கு ஒரு 13 வருடமாக இருக்கிறது சார். முன்னாடி எல்லாம் படிக்கிறப்ப தான் சார் இந்த மாதிரி மனசு ஒருநிலைப்படுத்த முடியாம இருந்துச்சு. ஆனா இப்ப யாராச்சும் ஏதாவது பேசும்போதும் கூட என்னால கூர்ந்து கவனிக்க முடியல சார். மனசு எங்கே ஏங்கியோ அலைபாயுது சார்.

ஒரு படம் பாக்கும்போது அப்படித்தான் சார். இது நாளுக்கு நாள் இன்னும் அதிகமாயிரும் அப்படின் பயமா இருக்கு சார். எனக்கு ஒரு மெடிக்கல் கண்டிஷன் இருக்கு சார். ஏழாவது படிக்கிறப்போ பிட்ஸ் வந்துருச்சு சார். அதுக்கு இப்ப வரைக்கும் மருந்து சாப்பிட்டு இருக்கேன் சார். இதுல்லாம் எனக்கு மூளையும் மழுங்கடிக்குதா இல்ல ஒரு மனசு ஒருநிலைபடுத்த முடியல அப்படின்னு சொல்லி தெரியல சார் இதெல்லாம் ஒரு காரணமா இருக்குமோ நினைக்கிறேன் சார்.

இப்போ உங்களுக்கு இதை சொல்லும் போது கூட மனசு எங்கெங்கே போய் கடைசில ஒரு பாட்டு ஓடிட்டு இருக்கு சார் மைண்டுக்குள்ள. ஒரு நிதானம் இல்லாம இருக்கேன் சார். இதுக்கு எனக்கு சரி பண்ற மாதிரி உங்க கிட்ட என்ன   courses இருக்குன்னு சொல்லுங்க சார்.  நான் அதுல இணைஞ்சுக்கிறேன்.

மேலும் விவரங்கள் தெரிஞ்சுக்க நான் காத்துக்கொண்டிருக்கிறேன் சார்.

நன்றி.

அன்புள்ள க,

உங்கள் பிரச்சினை வாசிப்பு மட்டுமா என்பதை முதலில் நீங்கள் உறுதிசெய்துகொள்ளவேண்டும். வாசிப்பில் கவனம் குவிவதற்கான பயிற்சியை நாங்கள் அளிக்கிறோம். ஆனால் அது வாசிப்புச்சிக்கலுக்கு மட்டுமானது. பொதுவான கவனக்குவிப்புக்குரிய பயிற்சி தில்லை செந்தில்பிரபு அளிப்பது.

இன்றைய சூழலில் மிகக்கடுமையான கவனச்சிதறல்கள் நமக்கு நிகழ்கின்றன. நம்மைச்சூழ்ந்துள்ள சமூக அமைப்பு அப்படிப்பட்டது. செய்திகள், விளம்பரங்கள், கேளிக்கைகள், ஊடகங்கள் எல்லாம் இணைந்து நம் கவனத்தை சிதறடிக்கின்றன. நம்மால் எங்கும் ஒருங்கு குவிய முடிவதில்லை. சிறு குழந்தைகளின் நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே செல்கிறது. கைக்குழந்தையாக இருக்கையிலேயே தாய்மார்கள் செல்பேசியை கையில் கொடுத்து அக்குழந்தை எதையுமே கவனிக்கமுடியாதபடி ஆக்கிவிடுகிறார்கள். இணையமும் சமூகவலைத்தளமும் போதைபோல அடிமைப்படுத்துகின்றன. துளித்துளியாகச் செய்திகள், காணொளிகளில் மூழ்க்கிக்கிடக்கிறோம். அரசியல்வாதிகள் நம் காழ்ப்புகளைத் தூண்டுகிறார்கள். வியாபாரிர்கள் நம் ஆசையை கிளப்புகிறார்கள். விளைவாக எந்நேரமும் கொந்தளிப்பு நிலையிலேயே இருக்கிறோம். இது ஒரு சமூகமனநோய் என்னும் அளவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது.

ஆகவே உங்கள் நிலைமை இன்று பொதுவாகக் காணக்கிடைப்பதுதான். சாதாரணமாக அனைவருமே இந்நிலையில்தான் உள்ளனர். அதற்கு தில்லை செந்தில்பிரபு நடத்தும் கவனக்குவிப்புப் பயிற்சி உதவிகரமானது. ஏனென்றால் அது முறையான ஆய்வுகள், தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் வழியாக உருவானது. ஆனால் அது இயல்பான நிலையில், கொஞ்சம் கவனச்சிதறல் கொண்டவர்களுக்கு உரியது. நீங்கள் சற்று முயன்றால் அப்பயிற்சிகள் வழியாக மீண்டுவிடலாம். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், அதை முழுமையாகப் பயிற்சிகொள்ளச் செய்வதற்கான வழிகளை மட்டுமே அந்த வகுப்புகள் அளிக்கும்.

மிக அரிதாக சில தீவிரநிலைகளுக்கு உளவியல் நிபுணரின் முறையான சிகிச்சையே தேவைப்படும்.  ஒருவர் பேசும்போதும் உங்களால் கவனிக்கமுடியாத நிலை என்றால் அதற்கு மருத்துவ உதவி தேவை. (ஆனால் ஃபிட்ஸுக்கு மருந்து எடுத்துக்கொண்டது எல்லாம் காரணம் அல்ல என்றே நினைக்கிறேன்). நீங்கள் ஒரு முறையான உளவியல் மருத்துவரை கலந்தாலோசிக்கலாம். இப்பயிற்சிகள் உங்களுக்கு உதவாது என்பதுடன் சில சமயம் எதிர்மறையாகவும் செயல்படலாம். இவை உங்கள் கற்பனைகளைப் பெருக்கி சிதறல்களை அதிகரிக்கக்கூடும்.

உளவியல் ஆலோசனை என சொல்லும்போது என்னவோ ஏதோ என நினைக்கவேண்டாம். அது மிகமிக எளிய, சாதாரணமான ஒரு சிகிச்சைதான். பலசமயம் வெறும் ஆலோசனைகள்தான். உளவியலாளர் உங்களை அவதானித்து ஒரு சில ஆலோசனைகளை வழங்குவார் அவ்வளவுதான். நீங்கள் ‘அப்நார்மல்’ என்றெல்லாம் அதற்குப் பொருள் இல்லை. ஒரு சிறு ஆலோசனை வழியாகச் சீரமைக்கப்படக்கூடிய ஒன்றை நாமே சிக்கலாக்கிக் கொள்ளவேண்டாம் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசுவையின் பாதை
அடுத்த கட்டுரைஅன்றாட வாழ்வில் தியானம்