குருபூர்ணிமா, கடிதம்

Screenshot

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

உளம் தாழ்ந்த குரு பூர்ணிமா வணக்கங்கள்வெகு தொலைவில் இருந்தாலும் அருகிலிருந்து வணங்கும் உணர்ச்சிகளுடன் இதுவரை அளித்த அனைத்து கற்பிதங்களுக்கும், ஞானத்திற்கும் கரம் கூப்பி நன்றிகள் பல 

என் முந்தைய கேள்விக்கு விரிவாக பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.. (ஞானமெனக் கனிதல் – https://www.jeyamohan.in/199944/)  . இன்றும் வாசித்து , சிந்தித்து எண்ணிக்கொண்டு இருக்கிறேன்

செயல்கள் எவையாயினும் யோகம் என செய்யப்படுகையில் அவை மெய்ஞானம் நோக்கிக் கொண்டுசெல்கின்றன. நாம் அறிந்தவை நம் ஆளுமையென ஆவதற்கு செயலே வழி. செயல் வழியாக நாம் நம்மை கண்டடைகிறோம், மேலும் மேலும் தெளிவடைகிறோம். ஓர் ஊருக்கான வழியை வரைபடத்தில் அறிவதற்கும் நேரடியாகச் செல்வதற்குமான வேறுபாடு.”

நீங்கள் கூறிய சொற்களை , அன்றாட செயல் தளத்தில் உணர முடிகிறது.. பல முறை மனதிற்கு பிடித்த செயலில் முழுவதுமாக ஆழ்ந்து விடுகையில், நம்மை சுற்றி நடப்பவை முழுவதுமாக நாம் அறிவதில்லை..நேரம் போவது முற்றாக தெரிவதில்லை. இந்த உணர்வு நிலையை அத்வைத தரிசனத்தை அடைவதை ஒட்டி பொருத்தி பார்க்க முயற்சித்து வருகிறேன். மிக மிக கடினம் என்று புரிகிறது…. 

இதை ஒட்டி உங்களது அடியடைவு பதிவில் (காசி பயண அனுபவ பதிவுகள் நான்குமே நான் மீண்டும் மீண்டும் வாசித்து வரும் பதிவுகள்..) வெண்முரசு மூலம் உங்கள் தந்தை பற்றி அடைந்த உணர்வை வாசிக்கையில் , இலக்கியம் ஒரு ஆன்மீக வழியாக அமைவது எப்படி என்பது லேசாக புரிவது போல உள்ளது.. “சட்டென்று நான் அவருக்கு அப்பாவாக நின்று அவரை அறிகிறேன்.” .. இப்படியான மன கனிவு தானாக அமைய முடியாது என்றே தோன்றுகிறது. வெண்முரசில் துரியோதனன்உபபாண்டவர்கள் உறவை சித்தரிக்கும் பகுதிகளை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் , அதன் பின் சக மனிதர்களை பார்க்கும் பார்வை மாறி இருக்க தான் செய்யும் என்றே உணர்கிறேன்.

நிறைவாக, பணி இடமாற்று காரணத்தால், இப்போது இந்தியாவில் இல்லை. இதனால் முழுமையறிவு வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. இது எனக்கு ஒரு இழப்பு தான். எல்லா வகுப்புகளிலும் பங்கேற்க ஆர்வம் இல்லையென்றாலும், சில வகுப்புகள் பற்றி அறிவிப்பு வரும்போது பங்கேற்க முடியாமல் இருப்பது வருத்தமாக உள்ளது

மீண்டும் மிக்க நன்றிகளும், குரு பூர்ணிமா வாழ்த்துகளும்.. 

அன்புடன்

வெண்ணி

முந்தைய கட்டுரைஉளக்குவிப்பு -தியானம் அறிமுகப்பயிற்சி 
அடுத்த கட்டுரையோகமும் தியானமும் ஒன்றா?