விபாசனா, கடிதம்

 

ஆசிரியரின் இரண்டரை நாள் தியான வகுப்பு காலை 10 மணிக்குத் தொடங்கியது. காலை வகுப்பு, புத்தத்தின் அடிப்படைகள் பற்றியது. பயணக் களைப்பில் சற்றே சோர்ந்து இருந்தது வகுப்பு. தன் அனுபவங்கள், கதைகள் என்று இலகுவாகத் தொடங்காமல் தீபாவளி ராக்கெட் போல் சரேலென மேலேறி தீவிரம் கூடியது வகுப்பில்.

மஹசி மற்றும் விபசனா தியான முறைகள் குறித்து விளக்கினார். முறையே தாய் மற்றும் பர்மிய தியான முறைகள் அவை. நான் புரிந்துகொண்ட வரையில் மஹசி முறையில் வேதனா எனப்படும் உணர்ச்சிகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. விபசனாவில் உணர்வுகள், எண்ணங்கள், உள நிலைகள் எல்லாம் உடலில் என்னவாக தங்கிச் செல்கின்றன என்று உற்றறிய வேண்டும். தமது ஆசிரியர் நிறை குறித்து சுருக்கமாக விளக்கினார்.

அப்போது மழை பிடித்துக்கொண்டது. மழையின் கூச்சல் அதிகமாகிக்கொண்டே சென்றது. வகுப்புக்குள்ளேயே சிலர் நடைத்தியானம் செய்யத் தொடங்கினோம். ஆனால் ஆசிரியர் அந்த மழையையும் தியானத்திற்குப் பயன்படுத்த எண்ணினார். சிலர் நின்றபடியும் சிலர் அமர்ந்தபடியும் மழைத் தியானத்தில் ஆழ்ந்தோம்.

முதலில் மழையின் பெரும் கூச்சலையே கவனிக்கச் சொன்னார். ஆசிரியரின் குரலுக்கும் மேலாக, பெரும் சத்தத்தோடு மழை வலுத்தது.

பின்னர் கூரையில் இருந்து வழியும் ஒற்றை நீர்ச் சரடைக் கவனிக்கச் சொன்னார். பூரணமாக கவனம் அச்சரடில் லயிக்கும்போது பிற யாவும் ஒரு கணமேனும் மறைந்துபோவதை விழிப்புக்குட்படுத்தினார். மழை நிற்கும்வரை இது தொடர்ந்தது.

ஒரு கணம் புற உலகம் மறைந்துபோகும் என்ற அவதானிப்பை அப்பயிற்சி முடிந்தபின்னரே கவனத்துக்குக் கொண்டுவந்தார். பயிற்சியின்போதே அப்பயிற்சியின் விளைவு, பலன், அடைவு குறித்து விளக்கி வழிநடத்துவதில்லை. அது அவரவருக்கான அனுபவம் அமைய வழி செய்கிறது. எனக்கு, ஆசிரியர் சொன்ன அனுபவம் அல்லாமல் வேறு அனுபவம் வாய்த்தது. நீர்ச் சரடைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க, அந்நீர்மையோடே மனம் ஒழுகிச்செல்ல, தியானத்தில் அமையும் முழு விழிப்பு சில கணங்களுக்கு வாய்த்தது.

மழைத் தியானமும் மழையின் இரைச்சலும் ஓய்ந்த பிறகு ஆசிரியர் பெரிதும் சோர்ந்திருந்தார். மாணவர்களோடு இயல்பான உரையாடல் நிகழ்ந்தது. ஆசிரியர் தம் அனுபவங்களைப் பகிர்ந்தார். பின்னர் தேநீர் இடைவேளை.

தேநீர் இடைவேளைக்குப் பிறகான நடைத்தியானத்தில் எல்லோரும் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

சிறிது நேர தியானப் பயிற்சிக்குப் பின் பௌத்தம் சார்ந்த கலைச் சொற்களைக் கற்பித்தார்.பயிற்சிக்குத் தேவையான சொற்களை, கருத்துக்களை மட்டும் விரிவாக விளக்கினார். காற்றில் வெவ்வேறு நறுமணங்கள் கலந்து கமழ்வதைப் போல் புத்த கொள்கைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பினைந்திருப்பதை விவரித்தார்.

அதைத் தொடர்ந்து சில கேள்வி-பதில் உரையாடலுக்குப் பின்னர் வகுப்பு கலைந்து சென்றது. மறுநாள் காலை 6.30-க்கு வகுப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இரவு உணவுக்குப் பின்னர் எல்லோரும் ஓய்வெடுக்கச் சென்றோம்.

இரண்டாம் நாள் விபசனா பயிற்சி தொடங்கியது. முதல் நாள் போல் வண்ணமயமாக இல்லாமல் நேரடியாகவே தீவிரப் பயிற்சியில் இறங்கியது. பயிற்சி, மீண்டும் பயிற்சி என்று அற்புதமாகச் சென்றது.

காலையில் வகுப்பைக் கூட்டிப் பெருக்கித் தயார்செய்தோம். வகுப்பு தொடங்கும் முன்பே அரைமணி நேரம் தியானம் செய்ய வாய்த்ததால் வகுப்பில் ஆசிரியர் அளித்த முதல் Guided Meditation-ஏ மிகச்சிறப்பாக அமைந்தது.

முதல் நாள் பயிற்சியிலிருந்தே தொடங்கியது. மூச்சின் பாதையை கவனிக்கச் சொன்னார். மூச்சைக் கவனிப்பதில் இருந்து உடல் விரிந்து சுறுங்குவதைக் கவனித்தலுக்குச் சென்றது. உடலில் கவனம் செலுத்தி, அதன்பிறகு Spacious Awareness நோக்கிச் செல்வதே தியானத்துக்கு ஏதுவாகிறது.

முந்தைய நாள் பயின்றவற்றை மீண்டும் நினைவுறுத்தினார். அமரும் முறை, மூச்சைக் கவனித்தல், மூச்சின் முழுப்பாதையைக் கவனித்தல், மூச்சு உடலில் மையம் கொள்ளும் இடத்தைக் கவனித்தல், உள்-வெளி மூச்சின் ஆற்றலைக் கவனித்தல் என்று கற்றவை எல்லாம் மீண்டும் பயிற்சியின் மூலமே நினைவுறுத்தப்பட்டது.

அதன்பிறகு நடைத் தியானம். நடைத் தியானத்தைத் தொடர்ந்து காலை உணவுக்குக் கலைந்து சென்றோம்.

ஒருவர் இந்தச் சுற்றை முழுமையாக முடிக்க இருபது நிமிடங்கள் ஆகலாம். அல்லது ஒவ்வொருவருக்கும் இது மாறுபடலாம். இதே பாதையில் பயிற்சி செய்வதை மீண்டும் மீண்டும் கற்பித்தார். இந்தப் பாதை மனப்பாடம் ஆகும் வரை மீண்டும் மீண்டும் பயிற்சித்தோம். ஒவ்வொரு முறை பயிற்றுவிக்கும்போதும் முடிவில் சற்றே வேறுபடுத்தி வழிநடத்தினார். அவை இப்போது நினைவில் இல்லாதது பேரிழப்பு தான். அடுத்த முறை வகுப்புகளைப் பதிவு செய்துகொண்டாலும் கூட தவறவிட்ட அந்த வழிகாட்டுதல்கள் மீண்டும் கிடைக்குமா?

ஆனால் அந்தப் பயிற்சியின் விளைவாக எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒரு மாதம் கழித்தும் நினைவில் இருக்கிறது. இரண்டை மட்டும் இங்கே குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது.  தியானத்தில் முழு விழிப்பு வாய்க்கும்போதெல்லாம் எப்போதும் இனிமையும் உடன் வரும். ஆனால் இரண்டாம் நாள் வகுப்பிலும் அதன்பிறகும் அந்த இனிமை சற்றும் இல்லாத விழிப்பு வாய்த்தது புது அனுபவம்.

மனத்திரை விலகும்போது சாத்தியங்கள் எல்லையற்று விரிகின்றன. அதையே விடுதலை என்கிறோம். ஆசிரியர் எப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடுகிறார் என்பது புரிந்தது. மனத்திரை என்றில்லாமல் மனதை ஒரு கருவியாக அவர் கையாள்கிறார்.

இரண்டாம் நாள் தம்ம உரையில் தாம் தியானம் நோக்கி வந்த வழியை விவரித்தார். தம் வாழ்வனுபவங்களை அவர் விவரிக்க விவரிக்க, அதைக் கேட்டவர்கள் அத்தனை பேருக்கும் அவர் மிக நெறுக்கமாக ஆகிவிட்டார். எனக்கோ கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றிருந்தது.

செழுமையான அனுபவத்தோடு, முதல் நாளை விடவும் ஆழ்ந்த அமைதியில் இரண்டாம் நாள் வகுப்பு முடிந்தது.

மூன்றாம் நாள் காலை சற்றே தாமதமாக வகுப்பு தொடங்கியது. வகுப்பின் இடையிலான உடற்பயிற்சிகள், அமர்ந்த நிலை தியானத்தால் இறுக்கமான உடலைத் தளர்த்துவதை உணர முடிந்தது. நடைத் தியானத்தைச் சமதளத்தில் பயில்வதை விட ஏறுபாதை அல்லது இறங்குபாதையில் பயில்வது உடலின் இயக்கத்தில் இன்னும் அதிக விழிப்பைக் கூட்டுவது தெரிந்தது.

ஜாக் கார்ன்ஃபீல்ட் எழுதிய “After the Ecstasy, The Laundry” என்ற புத்தகத்தை அறிமுகம் செய்தார். இந்த மூன்று நாட்களில் புத்தருக்கு அடுத்தபடியாக ரமணரும், ஜே.கே.வும், ஓஷோவும், பிக்கு போதியும், தனிஸ்ஸாரோ பிக்குவும், பேமா சோடனும், அருணகிரிநாதரும், ஔவையாரும் பேசப்பட்டனர்.  சித்தர் மரபில் குறிப்பிடப்படும் தியான அனுபவங்கள் குறித்து பேச்சினிடையே பலமுறை விளக்கினார். அந்த அனுபவங்கள் அன்றாடத்தில் என்னவாகத் திகழ்கின்றன என்பதே முக்கியம் என்றார்.

அதிவேக வாகனத்தை காலியான சாலையில் ஓட்டுவது போன்றது இந்த மூன்று நாட்கள்; அதே வாகனத்தை தி-நகரின் நெரிசலில் ஓட்ட முடிவது தான் இன்னும் முக்கியம் என்று அவர் அப்போது சொன்னது எத்தனை உண்மை என்று இப்போது புரிகிறது.

பன்னீர்செல்வம்

(சுருக்கப்பட்ட கடிதம்)

 

முந்தைய கட்டுரைசாதி
அடுத்த கட்டுரைஉளக்குவிப்பு -தியானம் அறிமுகப்பயிற்சி