மலையுச்சிப் பொன்

வணக்கம் j

நலம் தானே

நான் ஈஷா யோக மையம் வந்திருக்கிறேன். வருவதற்கு முன் தங்கப்புத்தகத்தில் இரண்டு அத்தியாயங்கள் வாசித்திருந்தேன். இப்போது இங்கே வந்து அறைக்குள் நுழைந்து இந்த தங்கத் திருவோடு வாசித்தேன். அனைத்தும் குரு நித்தியாவோடு ஆனது. வியப்பு, வெள்ளை ஆந்தை, இறகுகள், காகங்கள் அனைத்தும் ஒரு வகை கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொற்களும் நினைவுகளும் ததும்புகின்றன. சொல்லிச் சொல்லி சிலாகிக்க மனம் ஏங்குகிறது. அனைத்தையும் கொட்டிவிட்டு ஒரு ஏகாந்த நிலை கொண்டுவிட ஆசை கொள்கிறது மனம். அது சாத்தியமா ? சொற்களோடே பிரளும் நாம் அதனை அடைய முடியுமா?

உங்களுக்கு அப்படி ஆசை இருக்கிறதா? ஏகாந்தம் அவ்வப்போது வந்து வந்து போவது தான். ஆனால் அதில் நாம் நிலை கொள்ள முடியுமா? ஒவ்வொரு முறை ஏகாந்தம் தொடும் போதும் மீண்டும் மீண்டும் அந்த மகிழ்வை சொற்களாலேயே நிரப்பவும் பரப்பவும் செய்கிறோம். எனில் நிலை கொள்ளுதல்…..சாத்தியமா ?

ராணி சம்யுக்தா

திண்டுக்கல்

அன்புள்ள சம்யுக்தா

உள்ளம் அமையும் நிலைகளை அதீதமாக ‘ரொமாண்டிஸைஸ்’ செய்யக்கூடாது. எட்டமுடியாதபடி ஒரு எவெரெஸ்டை கற்பனைசெய்துகொண்டு எப்போதுமே பள்ளத்தாக்கில் இருப்பதுபோன்றது அது.

அமைதியின் பொன் உறைந்த எவரெஸ்டை நானும் கனவு காண்கிறேன். ஆனால் நான் எப்போதுமே மலையேற்றத்தில் இருப்பவன். சிறு குன்றுகளின் உச்சிகளிலேயே எவெரெஸ்டின் ஒரு துளியை அடைய என்னால் முடிந்துள்ளது. அவை எவெரெஸ்டின் அனுபவத்தின் ஒரு பகுதியை எனக்கு அளித்துள்ளன.

அன்றாடமென நிகழாத ஒன்று என்றும் நிகழப்போவதில்லை. அன்றாடத்தில் அதன் துளி இருக்கும். நாம் அதை அடையாளம் கண்டு ஒவ்வொரு செயல் வழியாகவும் வளர்த்துக்கொள்ளவேண்டும். அதுவே ஒரே வழி

ஜெ

முந்தைய கட்டுரைஇந்திய ஆலயக்கலை ரசனைப்பயிற்சி
அடுத்த கட்டுரைதியானமும் அதன் வழிமுறைகளும் | தில்லை செந்தில்