ஆலயப்பயிற்சி,தேர் – கடிதம்

இருவேறுலகம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

தங்களின் கடிதத்தைக் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி. தற்செயல்களின் பின்னுள்ள பெருந்திட்டத்தை எண்ணி வியக்கிறேன். நேற்று அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வு மிகவும் கனமாக மனதை அழுத்திக் கொண்டிருந்தது. உங்கள் கடிதத்தைப் படித்த கணம் மனம் லேசானது. ஆசிரியரின் வரிகளின் மகிமையை உணர்கிறேன். அது ஒரு சூழ்நிலைக்காகச் சொல்லப்படுவதல்ல, என்றைக்கும் பொருத்தமாக இருக்கும் ஒரு வழிகாட்டுதலாகவே தோன்றுகிறது.

முழுமையறிவு பயிற்சிகளின் வழியே எனக்கான வெளியைக் கண்டடைய முயன்றுகொண்டு இருக்கிறேன். கலையின் வழி என்னை என்னிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று நம்புகிறேன். சென்ற வாரம் நடந்த இரண்டாம் ஆலயக்கலை வகுப்பிற்கு நானும் என் கணவரும் சென்றிருந்தோம். நம் மரபார்ந்த ஆலயங்களை ஆவணப்படுத்துவதில் தங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை JK கூறியவுடன், இந்த மாபெரும் அறிவியக்கத்திற்காக நம்மால் முடிந்த சிறிய பங்களிப்பாற்ற ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது என்று உற்சாகமாக இருந்தோம்.

வகுப்பில், திருத்தேரின் கட்மைப்பு பற்றி சிற்பி முருகேசன் அவர்கள் எங்களுக்கு விளக்க, தேர் என்பது இறைவன் விமானத்துடன் இறங்கி வீதியில் வருவதாகவும், தேர் என்பது ஏன் தன்னளவில் ஒரு பிரபஞ்சம் என்னும் அதன் பின் உள்ள ஆழமான  தத்துவத்தை ஆசிரியர் JK விளக்கவும்,  நம் மரபின் படிமங்களை எண்ணி மெய்சிலிர்த்திருந்தேன். இத்தகைய அறியப் பண்பாட்டுச் செல்வங்களை பேணிக்காகாமல், அதைப் பற்றி அக்கறையே இல்லாமல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் இந்த சூழலை நினைக்கையில் வருத்தமாகவே இருக்கிறது. எனினும் கற்றவற்றைக் கொண்டு வரைந்து ஆசீர்யர்க்ககுளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றெண்ணி ஒரு தொண்டைமண்டல சோழர் பாணி தேர் வரைய முயன்றேன். அது ஒரு “perfect” கோட்டோவியமாக இல்லாமல் தாளமான பிழையுடன் இருந்தாலும், ஒரு சிறுகுழந்தை முதன்முதலில் கோணலாக “அ” என்று எழுதிவிட்டு தாயிடம் ஓடிசென்று காட்டுவதுபோல, மகிழ்ச்சியுடன் குழுவிடம் பகிர்ந்துகொண்டேன்.

மேலும் நேற்று திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று எங்கள் ஆவணப் படுத்தும் பணியைத் தொடங்கினோம் உடன் எங்கள் மகனுக்கும் ஆலய கட்டிடப் பகுதிகளைப் பற்றிச் கற்றுக்கொடுக்க தொடங்கிருக்கிறோம். இத்தகைய தளங்களில் செயல்புரிவதன் வழியே இந்த சராசரி வாழ்கையில் இருந்து விடுபட்டு என் கனவினை நோக்கி என்னை செலுத்திக்கொண்டுகிறேன், அல்லது முயற்சி செய்துக்கொண்டுகிறேன். எனக்கும், என்னைப் போலப் பல்லாயிரம் பேருக்கும் இத்தகைய அறிய வாய்ப்பை ஏற்படுத்திய தங்களுக்கு என் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுள்ளேன்.

வகுப்பிற்கு பிறகு வரைந்த ஓவியத்தயும் எழுதிய குறிப்பையும் கீழே இணைத்துள்ளேன்.

“சலாசலம்!

காலத்திற்கு அப்பாற்பட்டு இயங்கி கொண்டிருக்கும் பிரபஞ்சத்தில், சில நூற்றாண்டுகளாக இயங்காமல் நிற்கும் பிரபஞ்சம்.

கைவிடப்பட்ட திருத்தேர்….”

என்றும் பேரன்புடன்,

ஜெய்ஸ்ரீ

முந்தைய கட்டுரைமுழுமையறிவு, ஒரு விளக்கம்
அடுத்த கட்டுரைஆலயக்கலைநூல்கள்- ஜெயக்குமார்