மரபும் கொண்டாட்டமும்

இனிய ஜெயம்

விலகி சென்ற கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் நெடுநாள் கழித்து சந்தித்து கொண்டதை போல, அனைவரும் கூட, மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமுமான மூன்று நாள் என்று மரபிலக்கிய அறிமுக வகுப்பு அமைந்தது.

இங்கே மரபிலக்கிய அறிமுகம் இல்லாதோர், கொஞ்சம் அறிந்தோர், வெண்பா எழுத தெரிந்தோர் என்று மூன்று நிலையிலும் வாசகர்கள் இருக்கிறீர்கள். மரபு இலக்கிய நீச்சல் குளத்தில் நேரே மையத்தில் தள்ளி விடவா, அல்லது கை பிடித்து படி படியாக இறக்கி விடவா என்று மரபின் மைந்தன்  கேட்க, எல்லோரும் ஒரே தரத்தில் படி படியாக என்று குரல் எழுப்ப, வகுப்பு அவ்வாறே அமைந்தது.

இந்த மரபு கவிதைகள் என்றாலே இலக்கண கணக்கு வழக்குகளை தான் முதலில் நினைத்து கொள்வோம். அதை அப்படியே தூக்கி ஓரம் வைத்து விட்டு, எது மரபு இலக்கியத்தின் ரசனைக்கு உரிய மையமோ அதை கொண்டு மரபிலக்கிய வகையை ஒரு பருந்துப் பார்வை பார்ப்போம் என்று சொல்லி விட்டு, இன்றைய மரபு கவிஞர் ஆகாசம்பட்டு சேஷாசலம் துவங்கி ரசிகமணி என ஒவ்வொரு ஆளுமையாக தொட்டு தொட்டு வள்ளலார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், சிற்றிலக்கியம், கம்ப ராமாயணம், வில்லி பாரதம், பக்தி இலக்கியங்கள், நீதி நூல்கள் இரட்டை காப்பியங்கள் என்று பின்னே பின்னே சென்று கபிலரின் சங்கத் தமிழ் கவிதைவரை அவற்றின் சில பாடல்கள் வழியே நகை, ஈகை, அறம் காதல் என என்றும் காலாவதி ஆகாத  பலப் பல  ரசனை சுவை வழியே, பற்பல ஆளுமைகள் கொண்ட நகைச்சுவை தருணங்கள் வழியே சிரிக்க சிரிக்க இரண்டரை நாள் வகுப்பினை எடுத்து முடித்தார் மரபின் மைந்தன்.

பாரதிதசன், பாரதியார், வள்ளலார் வள்ளுவர் கம்பன் கபிலன் என்ற பெயர் கேட்டாலே நினைவில் எழும் பாடல்களை விட்டு விட்டு, பொது மனதுக்கு அறிமுகம் ஆகாத, ஆனால் அதே அளவு அற்புதமான வேறு பாடல்கள் வழியே வகுப்பினை முன்னெடுத்தார் மரபின் மைந்தன்

முக்கியமான பாடல்களை அவர் பாட பாட எங்களையும் சேர்ந்து பாட வைத்தார். அப்படி பாடும் போதுதான் தெரிந்தது, மரபின் முக்கிய மொழி அழகான சந்தங்கள் பலவற்றை உச்சரிக்கவே இயல வில்லை. பாகாக இளக வேண்டிய நாக்கு ஐஸாக உறைந்து விடுகிறது. மரபின் மீதான பயிற்சி இன்மை வழியே உருவான இன்றய நவீன இலக்கிய வாசகன் எல்லோரது நிலையும் இதுதான். கூடவே மரபை உதறி எழுந்த நவீன இலக்கியம் அதன் வாசகன் என்ற நிலையின் பின்னே உள்ளப்படிக்கே நாம் மொழி வழியே அடைய கூடிய சாராம்சமான எதை எல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும் உணர முடிந்தது. ஒரு நல்ல  ஆசிரியர் வசம் நேரடியாக அமர்ந்து கேட்டால் ஒழிய இதை உணரவே முடியாது.

கேள்வி பதில் நேரத்தில், மரபு இலக்கியம் வாசிக்க ஆசிரியர் ஒருவரின் தேவை மிக முக்கியம் போல தெரிகிறதே என்று கேட்டேன். பதிலாக சார் சொன்னது மிக முக்கியமானது. நான் பல மரபிலக்கிய அறிஞர்களை நேரில் அமர்ந்து கேட்டிருக்கிறேன். பல வற்றை நானேதான் தேடி வாசித்து பயின்றேன். ஆசிரியர் ஒருவர் உங்களுக்கு ரசனை சார்ந்து வழி காட்ட முடியும், தூண்டுகோலாக இருக்க முடியும், சந்தேக சூழலில் அவற்றை களைய முடியும். அனால் ஒருபோதும் உங்கள் சோம்பேறி தனத்துக்கு மாற்றாக ஒரு ஆசிரியரை தேட கூடாது என்று சொன்னார். கேள்விகளின் நாயகனான ஜெயராமை , எத்தனையோ பேரை நான் கண்டதுண்டு ஆனால் உன்னை போலஎன்று சொல்லி கண் கலங்கி விட்டார்.

வகுப்பின் புதிய வரவான இளைஞர் பொன்னமராவதி அருண் ஓதுவார் பயிற்சி பெற்றவர் என்பதால், திருமுறை பாடல்களை அவரது கணீர் குரலில் குறிப்பிட்ட பண்ணில் கேட்க முடிந்தது நல்ல அனுபவமாக இருந்தது. சமையல் கட்டுக்கே வந்த முயலை கறி சமைக்காமல் விட முடியுமா, வாங்க வாங்க என்று முத்தையா சார் அழைக்க, வகுப்புக்கு வந்திருந்த  திருக்குறள் திருமூலநாதன் அவர்கள் குறள் ஒரே சமயம் எவ்விதம் நீதி நூலாகவும் கவிதை நூலாகவும் இருக்கிறது என்று சில குறள்கள் வழியே அரை மணி நேரம் அருமையான வகுப்பு ஒன்றை எடுத்தார்.

காலையில் எல்லோரும் விஜய பாரதி உடன் பறவை பார்ப்பது, இரவில் திருமூல நாதன் அவர்களுடன் கவனகம் விளையாடுவது, இடைக்கிடை அந்தியூர் மணியுடன் சைவ மரபு குறித்து உரையாடுவது, எப்போதும் மரபின் மைந்தன் அவர்களின் அனுபவங்கள் வளியே கிடைக்கும் வெடி சிரிப்புகள் கேட்பது என வாழ்வின் மிக இனிய மூன்று தினங்கள். ஒரு மாதிரி பிரிய மனமே இன்றி தயங்கி தயங்கி நின்றோம். சரி சரி அடுத்த கதையை பார்ப்போம் என்று மணி எல்லோரையும் உசுப்பி வண்டி ஏற்றி அனுப்பி வைக்க, வெள்ளி மலை சார்ந்த இனிய நினைவுகளில் மேலும் ஒன்று கூட ஊர் வந்து சேர்ந்தேன்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைமருத்துவமுகாம் யாருக்கெல்லாம்?
அடுத்த கட்டுரைமதம், மரபு – கடிதம்