அன்புள்ள ஜெ
அண்மையில் வெளிவந்த தொடர்ச்சியான நாலைந்து காணொளிகள் என் வாழ்க்கையின் கோணத்தையே மாற்றியமைத்தன. நாமே சிந்தித்திருக்கலாமோ என்னும் அளவுக்கு நேரடியான எளிமையான கருத்துக்கள் அவை. ஆனால் நாம் சிந்தித்திருக்காத அளவு தெளிவுடனும் அழுத்தத்துடனும் முன்வைக்கப்பட்டவை. அத்துடன் சொல்பவர் அச்சொற்களின்படியே வாழ்பவர் என்பதும் முக்கியமான ஒன்று.
நான் நீண்டநாட்களாக உங்கள் பயணங்களை, நட்புச்சூழலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த வாழ்க்கையை நானும் வாழவேண்டும் என்று தோன்றியதே இல்லை. கடுமையாக உழைப்பது என்பதே உயர்ந்த வாழ்க்கை, பெரியவர்கள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்தார்கள், சாதனைகளைச் செய்தார்கள் என்றுதான் எனக்குச் சின்ன வயதிலேயே சொல்லப்பட்டுள்ளது. நான் அப்படித்தான் என் நினைவறிந்த நாள்முதல் வாழ்ந்தும் வந்திருக்கிறேன். படிப்பு, வேலை எல்லாமே கடுமையான உழைப்புதான்.
இந்த நாற்பத்திரண்டு வயதில் சட்டென்று நான் வாழவே இல்லை என்ற எண்ணத்தை அடைந்தேன். நான் எனக்குப் பிரியமான எதையும் செய்ததே இல்லை. எங்கிருந்தாலும் ஏதோ வேலைகள் அழைக்கின்றன என்ற பிரமையிலேயே இருந்தேன். அடுத்தநாளைப் பற்றி சிந்தனை செய்தபடியே ஒவ்வொரு நாளையும் செலவிட்டிருக்கிறேன். அந்தப் பைத்தியக்காரத்தனம் சட்டென்று உறைத்தது இந்தக் காணொளிகளில்
நான் இயற்கையை ரசிப்பதே இல்லை. அதற்கான மனநிலையே இல்லை. வேலைகளை முடிக்கவேண்டும், அதன்பின் பார்ப்போம் என்ற எண்ணமே இருந்தது. அத்துடன் நான் பயணம் செய்யும்போது என்னைப்போன்ற நண்பர்களையே கூட்டிச்செல்கிறேன். ஆகவே எனக்கு எதுவுமே தென்பட்டதில்லை. இயற்கையை அறியாத வாழ்க்கைபோல வீணாகும் வாழ்க்கை இன்னொன்றில்லை.
தாமதமானாலும் இனியும் வாய்ப்புண்டு என்று சொல்லிக்கொள்கிறேன்
ரா.கிருஷ்ணராஜ்