அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
எனக்கு தமிழ்ப்பண்பாடு பற்றி அறிந்துகொள்வதில் மிகுந்த ஈடுபாடுண்டு. சைவம் பற்றியும் வைணவம் பற்றியும் சித்தமருத்துவம் பற்றியும் அறிந்துகொள்ள ஆசைப்படுபவன். சிலப்பதிகாரத்தை கஷ்டப்பட்டு படிக்க முயன்றேன். கண்ணதாசன் கவிதைகளைக்கூட என்னால் ரசித்துப் படிக்கமுடியவில்லை. நான் நவீனக்கல்வி அடைந்தவன். இன்றைக்கு பொறியியல்பணியில் இருக்கிறேன். மரபிலக்கியத்தை அறிந்துகொள்ளும் பயிற்சி நடத்தப்படுவதாக அறிந்தேன். அது எப்படி கற்பிக்கப்படுகிறது என அறியவிரும்புகிறேன்.
செல்வராஜ் மாணிக்கம்.
அன்புள்ள செல்வராஜ்
இன்றைக்கு எந்த ஒரு நவீனக்கல்விகற்ற தமிழராலும் மரபுக்கவிதையுலகுக்குள் நுழைய முடியாது. நம் தமிழ்க்கல்வி அந்த வகையானது அல்ல. இப்படியே சென்றால் ஒரு நூறாண்டுக்காலத்தில் நம் மாபெரும் மரபுசார்ந்த இலக்கியங்கள் எல்லாம் முழுமையாகவே பொருளிழந்துவிடும். அவற்றை சில தொல்லியலாளர்கள் மட்டுமே ஆய்வுசெய்வார்கள். சுவைக்க எவருமிருக்க மாட்டார்கள்.
மரபிலக்கியத்தை ஒரு பாடமாகக் கற்பித்தால் அதன் உள்ளடக்கம் மட்டுமே அறிமுகமாகிறது. இலக்கணமாகக் கற்பித்தால் அதன் வடிவம் மட்டுமே தெரியவருகிறது. அவை இரண்டும் சரியான வழிமுறைகள் அல்ல. மரபிலக்கியத்தை ரசிக்கக் கற்றுக்கொடுக்கவேண்டும். ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அந்த சுவை வழியாகவே நாம் மேலும் மேலும் கற்றுக்கொள்வோம். அதன் வழியாக நம் மரபுக்குள் செல்லமுடியும்.
தமிழ்ப்பண்பாட்டு ஆய்வு, தமிழ் வரலாற்று ஆய்வு, தமிழ்ச் சமய ஆய்வு அனைத்துக்குமே மரபிலக்கியப் பயிற்சி அவசியமானது. அதை ரசனை வழியாக மரபின்மைந்தன் கற்பிக்கிறார். மிக எளிய அண்மைக்கால மரபுக்கவிதைகள் வழியாக மரபின் சொல்லழகு, சந்தம் ஆகியவை கற்பிக்கப்படும். மெல்ல மெல்ல ஒரே வகுப்பிலேயே பழைய கவிதைகள் வரை இயல்பாகச் சென்றடையச் செய்கிறார். இது ஒரு திறப்பு. இந்த வழி பிடிகிடைத்தால் செல்வது மிக எளிது. பங்கேற்றவர்கள் அனைவருமே பெரிதும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட வகுப்பு இது
ஜெ