அன்புள்ள ஜெ
சைவப் பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சைவதத்துவம் கற்பிக்கப்படுகின்றது என அறிகிறேன். சைவம் பலவகையாக உள்ளது. இதில் எந்தப் பிரிவு கற்பிக்கப்படுகிறது? சைவ ஆலயங்களிலுள்ள மரபுகளும் வழிபாடுகளும் கற்பிக்கப்படுகின்றனவா? இன்றைக்கு சைவத்தை பார்ப்பனியம் கைப்பற்றியுள்ளது. அதிலிருந்து தூய சைவத்தை மீட்பது பற்றிய வகுப்புகள் உண்டா?
நாக.ஆவுடையப்பன்
அன்புள்ள ஆவுடையப்பன்,
சரியான சைவ வகுப்புகள் ஏன் தேவை என்பதற்கு உங்கள் கடிதமே சான்று. நீங்கள் எழுதியிருப்பது சைவம் அல்ல சைவத்தின் பெயரால் நிகழும் அரசியல். ஒரு சைவனுக்கு சைவத்தையும் சிவனையும் காப்பாற்றுவது அல்ல முதன்மைப்பொறுப்பு. சைவத்தை கற்பதும் ஒழுகுவதும் சிவபதம் அடைவதும்தான். அவ்வாறு மெய்யாகவே பலர் சைவத்தை ஏற்று ஒழுகும்போது சைவம் வாழும்.
சைவத்தை வாழவைக்க முயல்பவர்கள் சைவத்தை அறிய முயல்வதில்லை. அவர்கள் அதை ஒரு சமூக- பொருளியல் அதிகாரமாகவே பார்க்கிறார்கள். அந்த அதிகாரத்தைக் கைப்பற்றவே முண்டியடிக்கிறார்கள். அறியாமையுடன் அதிகாரவெறி இணைகையில் அது ஓர் அழிவுச்சக்தியாக ஆகிவிடும்.
நாங்கள் சைவத்தின் அடிப்படைகளைக் கற்பிக்கிறோம். அதிலிருந்து மேலே சென்று சைவத்தின் எந்தக்கிளையை ஏற்பது என்பது கற்பவரின் தெரிவு. நாங்கள் கற்பிப்பது சித்தாந்த சைவம். சைவத்தின் மறைஞானப்பிரிவுகளை அல்ல. ஆலயவழிபாட்டை நாங்கள் கற்பிப்பதில்லை. ஆசாரங்களையும் கற்பிப்பதில்லை. சைவ மெய்யியலைக் கற்ற ஒருவர் ஆலயங்களை அதனடிப்படையில் மேலதிகமாகப் புரிந்துகொள்ள முடியும்.
சைவத்தை நாங்கள் சைவர்களுக்குக் கற்றுத்தரவில்லை- சைவர்கள் உட்பட அனைவருக்கும் கற்பிக்க முயல்கிறோம். அனைத்து மெய்யியல்களையும் அவ்வாறே கற்பிக்கிறோம்.
ஜெ