அன்புள்ள ஜெ,
வெள்ளிமலையில் கடந்த பல மாதங்களாக பல்வேறு தலைப்புகளின் கீழ் பல்வேறு துறையைச் சார்ந்த ஆளுமைகளைக் கொண்டு “முழுமையறிவு” வகுப்புகள் நடந்து வருவதை சரியாக கவனித்து வருகிறேன்.. இந்த வகுப்புகள் தொடங்கப்பட்ட பொழுது, எத்தனை நாட்களுக்கு இதுபோன்ற வகுப்புகள் தாக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லையே என்கின்ற கேள்வி எனக்குள்ளும் இயல்பாகவே எழுந்தது.ஆனால் அதைப் பொய்யாக்கும் வகையில் அனைத்து வகுப்புகளும் இன்று சாதனை வகுப்புகளாக மாறியிருப்பதை யாவரும் அறிவர்.
இந்த வகுப்புகளின் வரிசையில் நான் “உருது இலக்கிய அறிமுக வகுப்பை” நடத்துவேன் என்பதைக் கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை. நண்பர் கொள்ளு நதீம்தான் இதற்காக என்னை விடாமல் உற்சாகப்படுத்தியவர். இந்த வகுப்பிற்கு எந்த வகையிலான வரவேற்பு கிடைக்கும் என்பது தெரியாத காரணத்தால் முதலில் நான் தயங்கவே செய்தேன், அதற்குத் தகுந்தாற்போல் உங்களது பக்கத்தில் வாசகர் ஒருவர் “இங்கே எவர் உருது இலக்கிய வகுப்புக்கு வருவார்கள்?” என்ற வினாவையும் எழுப்பியிருந்தார். ஆனால் இந்த பிம்பங்களையெல்லாம் உடைக்கும் வண்ணமாக வகுப்பில் இருபத்து ஏழு பேர் கலந்துகொண்டது மட்டுமின்றி மகுடமாகத் தாங்களும் இந்த வகுப்பில் கலந்து கொண்டது நான் எதிர்பாராதது. அதிலிருந்து நான் உங்களுடைய கற்கும் வேட்கையையும் பணிவையும் இன்னும் ஆழமாக அறிந்துகொண்டது மட்டுமின்றி இது போன்ற புதிய வகுப்புகளைத் தொடங்கி நீங்களே அதற்கு முன்னுதாரணமாகவும் இருப்பதைக் கண்டு வியந்தேன்.
2025 ஏப்ரல் 4,5,6 ஆகிய தேதிகளில் வெள்ளிமலையில் நடைபெற்ற உருது இலக்கிய அறிமுக வகுப்பின் வெற்றிக்கு என்னைப் பொறுத்தவரை அந்த வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்களே காரணம்.ஏனென்றால் தற்போதைய பரபரப்பான உலக வாழக்கைக்கிடையே வெள்ளிமலை போன்ற ஓர் இடத்திற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து (சென்னை,கோவை, திருச்சி,மதுரை, நாகர்கோவில்,கடலூர்,நாமக்கல், ஒசூர், ஈரோடு, கோபி, காரைக்குடி,கொடைக்கானல் ) வருகை தந்து கிட்டத்தட்ட நான்கு நாட்கள் கவணச்சிதறலின்றி தொடர்ந்து வகுப்புகளில் அமர்வதென்பது “முழுமையறிவு” வகுப்புகளைத் தமிழக இலக்கிய வரலாற்றில் மட்டுமின்றி இந்திய இலக்கிய வரலாற்றிலும் பதிவு செய்யப்பட வேண்டிய வகுப்புகளாக மாற்றிவிடுகின்றன. இந்த வகுப்பில் கலந்துகொண்டவர்களில் (முழுமையறிவின் பிற வகுப்புகளைப் போலவே) மருத்துவர்களும், வழக்கறிஞர்களும், தனியார் துறைகளில் முக்கிய பணியில் இருப்பவர்களும் இளம் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டதில் மிக்க மகிழச்சி. ஒரு சகோதரி சிங்கப்பூரிலிருந்து இந்த வகுப்பில் கலந்துகொள்வதற்காக வந்திருந்ததைக் கண்டு வியந்தேன்.
தமிழகத்தின் உருது இலக்கிய வரலாற்றில் இந்த வகுப்பு ஒரு மைல்கள். இத்தகைய வகுப்பிற்காகத் தளம் அமைத்துத் தந்த உங்களுக்கும் உங்களைச் சார்ந்து முழுமையறிவுக்காக இயங்கும் அனைவருக்கும் என் சார்பாகவும், உருது இலக்கிய உலகின் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வகுப்பு இத்தோடு முடிந்து விடாமல் உருது– தமிழ் மொழி, இலக்கிய உரையாடலுக்கும் பரிமாற்றத்திற்கும் வழி வகுக்கும் என்று நம்புகிறேன்.
நன்றியுடன்
ஃபைஸ் காதிரி
7-4-2025