ஆலயம், கடிதம்

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்.

நான் வெண்முரசு ஆரம்பகாலத்திலிருந்து உங்கள் வாசகி. இது எனது முதல் கடிதம். முந்தைய தலைமுறையைச் சேர்ந்த முதியவள். உங்களது தளங்களில் வரும் கடிதங்களைப் படிக்கும்போதெல்லாம் நான் உணர்வது வியப்பும் மகிழ்ச்சியுமே. ஒரு கடிதமாவது எழுதி விடவேண்டும் எனும் உந்துதல் இருந்து கொண்டேயிருக்கும். நீங்கள் ஒருங்கிணைக்கும் பயிற்சி வகுப்புக்களுக்கான அறிவிப்புகளைப் பார்க்குந்தோறும் ஓர் ஏக்கம். குறிப்பாக ஆலயக் கலை மற்றும் பிரபந்த வகுப்புகள். மார்ச் இறுதியில் நடைபெற்ற ஆலயக்கலை பயிற்சிக்கான அறிவிப்பு தளத்தில் வெளிவந்ததும் பதிந்து விட்டேன். என்னுடன் என் நெருங்கிய உறவினர் ஒருவரும் இணைந்து கொண்டார்.

28ஆம் தேதி வியாழனன்று வாடகைக் காரில் சென்னையிலிருந்து கிளம்பினோம் . எங்களுடன் மனோபாரதியும் இணைந்து கொண்டார். அன்றிரவே மேலும் சில நண்பர்களும் நித்யவனம் வந்து விட்டார்கள்.

29ஆம் தேதி புத்தர், வாக்தேவி வழிபாட்டுடன் முதல் அமர்வு தொடங்கியது. தௌலி வேழம் வெளிப்படும் slide பல படிவங்களைப  தோற்றுவித்த கிளர்ச்சியான தருணம்அவ்வளவுதான், ராஜகோபுரமெனத் திரிந்து விட்ட ராயகோபுரத்திலிருந்து தொடங்கியது எங்களது பயணம்; ஒரு மாபெரும் பண்பாட்டு பரப்பினூடே.

ஒரு கோயிலை எப்படிநோக்குவது” , நோக்குஎன்றால் என்ன, வாஸ்து புருஷனும் நின்ற கோலமே விமானம், விமான வகைகள், அவற்றை எவ்வாறு இனங்கண்டு கொள்வது, விமானத்தின் பகுதிகள் எவ்வாறு மஹாபுருஷனின் உடற்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளன போன்ற விவரங்களையும், ஒவ்வொரு பகுதியிலுமுள்ள நுணுக்கங்களையும்  நடத்துனர் ஜெயகுமார் எனும் இளைஞர்! சலிப்பின்றி நகைச்சுவை இழையோட  விளக்கியது மிகச் சிறப்பு. நடு நடுவே வெண்முரசு , கொற்றவை, சிலப்பதிகாரம் படிக்காதவர்கள் யார், யார் எனும் மிரட்டல்கள் வேறு!. சரப்பொளி எனும் புதிர் விடுபட்டதும்  இங்குதான்.

பின்னர் வந்த இரண்டு நாட்களிலும் கலை, இலக்கியம், வரலாறு, வழிபாட்டிற்கப்பாலுள்ள ஆன்மீகம் ஆகிய தளங்களில் எங்களை வழிநடத்திச் சென்றார் ஜெயகுமார். குடைவரைக் கோயில்கள், செங்கல், மரம், உலோகம் கொண்டு எழுப்பட்டவை, பின் கற்றளிகளாக நிலை கொண்டவை என்கிற கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியில் புராண இதிகாசங்கள், இலக்கியம், குறிப்பாக பக்தி இலக்கியம், பெருங்காப்பியங்கள், சோழ, பல்லவ, பாண்டிய, நாயக்க அரசுகளின் செல்வாக்கு ஆகியவை எவ்விதம்  ஒன்றையொன்று சார்ந்து கொண்டும், ஊக்குவித்து கொண்டும் கலைஞர்களின் கலையையும் கற்பனையையும் வளர்த்தன என விளக்கிய தருணங்கள் தொண்டைக் குழியில் சொற்கள் கட்டுண்ட தருணங்கள்.

இந்நாட்களை இனிமையாக்கியவை ஜெயகுமார் இசைத்த பாசுரம் தேவாரம் மற்றும் சனிக்கிழமை கச்சேரியில் ஒலித்த இளங்குரல்கள்;

புகைப்படங்களாகவும் பெயர்களாகவும்

 மட்டுமே அறிந்திருந்தவர்களை நேரில் சந்தித்த தருணங்கள் மொழிக்கு அப்பாற்பட்டவை

நன்றியுடன்

லக்ஷ்மி

முந்தைய கட்டுரையோகக் கொண்டாட்டம்
அடுத்த கட்டுரைமருத்துவம், கடிதம்