குருகுலக்கல்வி, புரிந்துகொள்ளல்

அன்புள்ள ஜெயமோகன்,

வழக்கம்போல குருகுலக்கல்வி என்னும் பதிவை குலக்கல்வி என்று திரித்து முகநூலில் வம்பு பேசிக்கொண்டிருக்கிறார்கள். குருவுக்கு அடிமையாக இருப்பது என்னும் பழைய முறையை நீங்கள் சொல்கிறீர்கள் என்று திரிக்கிறார்கள்.

ஆர்.ராகவ்

 

அன்புள்ள ராகவ்

அவர்கள் திரிக்கவில்லை, அவ்வளவுதான் அவர்களுக்குப் புரியும். மதம் மற்றும் அரசியலின் மாயம் அப்படிப்பட்டது. நான் மதம் மற்றும்அரசியலைத் தவிர்க்கவேண்டும் என்று சொல்வதே இதனால்தான்.

இன்று அரசியல் என்பது அதியுக்கிரமான பிரச்சாரத்தால் பரப்பி நிலைநிறுத்தப்படுவது.  அதில் எளிய உள்ளங்கள் இளமையிலேயே சிக்கிக்கொள்கின்றன. கூடவே அவர்களின் சாதி-மதச் சார்புகளும் இணைவதனால் அது ஆழமாகப் பதிந்துவிடுகிறது. வேறுவகையில் சிந்திக்கவே முடியாதபடி ஆகிவிடுகிறது. அரசியல் அளிக்கும் ஒற்றைவரிகள் மட்டுமே மண்டைக்குள் இருக்கின்றன. எங்கும் எதுவும் அதன்படித்தான் தென்படுகின்றன. அப்பால் எதையுமே உள்வாங்கவோ புரிந்துகொள்ளவோ முடியாமலாகிறது. அது ஒரு மூளைக்குறைபாடு அளவு சென்றுவிடுகிறது. மதமூடர் அளவுக்கே அரசியல் மூடர்களும் பரிதாபத்துக்குரியவர்கள்.

நான் அந்த காணொளியில் பொதுக்கல்வி என்பதுதான் முக்கியம், அதுவே மையமானது, அதை உருவாக்கியவர்கள் மேதைகளான முன்னோடிகள் என்றே சொல்கிறேன். அதுவே ஜனநாயகத்தின் அடிப்படை என்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் மெக்காலே மேல் மிகப்பெரிய மதிப்புண்டு. கல்வி மற்றுமல்ல சட்டம் சார்ந்தும் அவருடைய பங்களிப்பு மிகமிக முக்கியமானது. அவர் இந்தியச் சிற்பிகளில் ஒருவர். விரிவாக அவரைப்பற்றி எழுதியுமிருக்கிறேன்.

ஆனால் பொதுக்கல்வியில் விடுபடுவது மாணவருக்கு ஆசிரியருடனான தனிப்பட்ட உறவு, அவருடன் இணைந்து வளரும் வாய்ப்பு. அதை மேலைநாடுகளில் உருவாக்கியிருக்கின்றனர், இங்கும் தேவை. இவ்வளவுதான் அந்தக் காணொளியில் உள்ளது. நாங்கள் கிறிஸ்தவ இஸ்லாமியக் கொள்கைகளைக் கற்கவும் அந்த முறையே உகந்தது என நடைமுறைப்படுத்துகிறோம். அதுவே நான் சொல்வது சாதி, மதம் சார்ந்தது அல்ல என்பதற்கான சான்று. நான் சிங்கப்பூரில் அந்த அரசு நடைமுறைப்படுத்தி, என்னை அழைத்து செய்யவைத்த அதே கல்வியைத்தான் இங்கே தேவை என எண்ணி முயல்கிறேன் என்றும் அந்தக் காணொளியில் சொல்கிறேன்.

இன்றும்கூட எந்தத் துறையிலும் தனிப்பட்ட பயிற்சியை அடையும் ஒருவர் அதை ஒரு தனிநபரிடமிருந்தே அடைந்திருப்பார். அவரையே குரு என கருதுவார். திராவிட இயக்க இதழாளர்களே சின்னக்குத்தூசியை குரு என சொல்வதைக் காணலாம். அப்படித்தான் கல்வி நிகழும். அது சின்னக்குத்தூசி ‘சொன்ன’ கருத்துக்களால் நிகழும் கல்வி அல்ல, அவருடைய ஆளுமை மாணவர்களிடம் செலுத்தும் செல்வாக்கால் நிகழும் கல்வி. நான் சொல்வது அதை மட்டுமே. பௌத்த மெய்யியல் ம்ரபை நீங்கள் நூல்களில் இருந்து கற்க முடியாது, அமலன் ஸ்டேன்லியிடமிருந்தே கற்க முடியும், இவ்வளவுதான் சாரம

இங்கிருந்து பழைய கல்விமுறைக்குச் செல்வதைப் பற்றி நான் பேசவில்லை, தனிநபர் சார்ந்த ஒரு கல்வியை தேவையானவர்களுக்கு மட்டும் அளிப்பதைச் சொல்கிறேன். குறிப்பாக, சிந்தனை மற்றும் கலைகளை அவ்வாறுதான் கற்றுக்கொள்ள முடியும்.

நான்  திரும்பத் திரும்பச் சொல்வதே இதுதான், கருத்துக்களையும் கொள்கைகளையும் புரிந்துகொள்வதில் நம் சூழலில் திகைப்பூட்டும் அளவுக்கு திறமையின்மை உள்ளது. எந்தக் கருத்தையுமே துல்லியமாகப் புரிந்துகொள்பவர்கள் அரிதினும் அரிதானவர்கள். நம் கல்விமுறையின் மிகப்பெரிய பிரச்சினை இது, நான் சொல்வதற்கு இந்த சின்ன கருத்தை இவர்களெல்லாம் இப்படி அபத்தமாக, நேர்தலைகீழாகப் புரிந்துகொள்வதே நேரடியான சான்று.

இந்தக்குறைபாடை எப்படிக் களைவதென்பதையே பேசிக்கொண்டிருக்கிறேன்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைவேதாந்தம் செயலின்மையை அளிக்குமா?
அடுத்த கட்டுரைபறவை பார்த்தல், கடிதம்