அன்புள்ள ஆசிரியருக்கு,
இந்த வகுப்புகளை நீங்கள் ஒருங்கிணைத்து நடத்துவது மிகுந்த பயனுள்ளது. எதிர்மனநிலைகளைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். சென்ற ஒரு மாதகாலமாக நான் முழுக்கமுழுக்க தேர்தல் சார்ந்த அரசியலிலே ஈடுபட்டிருந்தேன். டிவியில் விவாதங்களைப் பார்த்தேன். செய்தித்தாள்கள் அனைத்தையும் வாசித்தேன். சமூகவலைத்தளங்களில் விவாதங்களில் ஈடுபட்டேன். முழுநேரமும் இதே நினைப்புதான். எப்போதுமே பதற்ற நிலை. ராத்திரி தூக்கமே கிடையாது. காலையில் எழுந்தால் முதல் நினைப்பு தேர்தல்தான். இவ்வளவுக்கும் எனக்கு பெரிய அளவிலே கட்சிச்சார்பெல்லாம் கிடையாது. திமுக, காங்கிரஸ் மீது ஈடுபாடுகூட இல்லை. மூப்பனாரை பிடிக்கும். அவர் என்னுடைய ஊர் என்பதனால் பிடிக்கும். ஆனால் இப்போது எப்படியோ திமுக சார்பு அரசியல் நிலைபாடு வந்து விட்டது. காரணம் இங்கே நிகழ்ந்த பிரச்சாரம்தான் என நினைக்கிறேன். மோடியை வெறுத்துக்கொண்டே இருந்தேன். மோடி தோற்கவேண்டும் என வாதாடினேன். மோடி தோற்றுவிடுவார் என்று நானே கற்பனை செய்துகொள்ள ஆரம்பித்தேன். அப்படிச் சொல்பவர்களை மட்டும் தேடித்தேடி நட்பாக்கிக்கொண்டேன். சமஸ் எழுதுவதை படித்தேன். மோடி தோற்பார் என உறுதியாக நம்பி ஏகப்பட்ட பேரிடம் சவடாலாக பேசினேன்.
ஆனால் நேற்று எக்ஸிட் போல் வந்தபோது சோர்வாக இருந்தது. செத்துவிடலாம் என்றுகூட தோன்றிவிட்டது. எந்த பிடிமானமும் இல்லை. ஆனால் உங்கள் வீடியோ பார்த்தேன். திகைப்பாக இருந்தது. இந்த எதிர்மனநிலையை நான் எதற்காக உருவாக்கிக்கொண்டேன் என்று யோசித்துப்பார்த்தேன். இதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. வெறுமே சலிப்பாக இருப்பதனால் இந்த ஆட்டத்தில் நுழைந்திருக்கிறேன். பொழுதுபோகவேண்டும் என்று ஆரம்பித்து தற்கொலை நினைப்பு வரைச் சென்று சேர்ந்திருக்கிறது. அரசியல் முக்கியம்தான். ஆனால் மோடி ஜெயித்தால் உலகம் அழியாது. தோற்றால் உலகம் அப்படியே சிறப்பாகவும் ஆகிவிடாது. வாழ்க்கையிலே அது ஒரு அம்சம். எல்லா அரசியல்வாதிகளும் ஏறத்தாழச் சமம்தான். ஒருவர் அழியவேண்டும், ஒருவர் வாழவேண்டும் என்ற வெறியெல்லாம் அபத்தமானது. ஆனால் ஒரே நாளில் இதை உணரமுடியாது. இதை யாரோ சில அரசியல்வாதிகள் உருவாக்குகிறார்கள். மீடியாக்காரர்கள் உருவாக்குகிறார்கள். அவர்களுக்கெல்லாம் லாபம் உண்டு. நல்ல வாழ்க்கையும் உண்டு. அவர்களை நம்பி இந்த ஆட்டத்தில் இறங்கும் என்னைப்போன்றவர்களுக்குத்தான் வாழ்க்கை அழிந்துவிடுகிறது. அந்த வீடியோ ஒரு பெரிய கண் திறப்பாக இருந்தது. நன்றி
செல்வக்கணபதி ராஜையா