“நன்றாக குரு வாழ்க ! . குருவே துணை ! “ என்று வணங்கி ஆசிரியர் அ.வே. சாந்திகுமார ஸ்வாமிகள் வகுப்பை ஆரம்பித்த போதே நாங்கள் ஒரு குருகுல வகுப்பில் அமர்ந்திருக்கும் மனநிலையை அடைந்து விட்டோம்.
ஆசிரியர் முதலில் மேற்கத்திய மற்றும் இந்திய தத்துவங்களைப் பற்றிய ஒரு பொதுப் புரிதலை ஏற்படுத்தினார். பின்னர் தத்துவம் என்பதை மெய்ப்பொருள் என்று விளக்கி
“ எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு “ என்ற குறளில் வள்ளுவர் கூறும் மெய்ப்பொருளே தத்துவம் என்று விவரித்தார்.
இந்திய தரிசனங்களான சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகியவற்றைப் பற்றி பழந்தமிழ் நூல்கள் கூறியிருப்பதை ஆசிரியர் கோடிட்டுக் காட்டினார். அருணகிரிநாதர் காலத்தில் துருக்க மதம் தமிழ் நாட்டில் இருந்ததைம், அவர் அதையும் ஏற்றுக்கொண்டு,
“ ………. நான் சலாம் செய்வேன் ராவுத்தனே …” என்று முருகனை முஸ்லீம் ஆக்கியதை ஆசிரியர் விவரித்த விதம் நன்றாக இருந்தது.
சாங்கியம் தந்த 24 பிரகிருதி தத்துவங்களை பின்னர் சைவம் எப்படி 36 தத்துவங்களாக வளர்த்தெடுத்தது என்பதை ஆசிரியர் விவரித்தார். இது இந்திய தத்துவங்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று உறவாடி தங்களை வளர்த்துக் கொண்டன என்பதைப் புரிய வைத்தது.
பௌத்தம், சமணம், பூர்வமீமாம்சம், உத்தரமீமாம்சம் ஆகிய தத்துவங்களில் இறைவன், உயிர், உலகம் ஆகியவற்றின் இடம் என்ன என்பதையும், அவற்றின் வினைக் கொள்கைகளையும் ஆசிரியர் விவரித்தார்.
இடையிடையே பௌத்த , சமணப் உட்பிரிவுகளைப் பற்றியும், வைணவத்தில் இறைத் தத்துவம் பற்றியும் அதை எப்படி ராமானுஜர் நடைமுறைச் சடங்குகளிலும் இணைத்தார் என்பதை நம்மாழ்வார் மோட்ச வைபவத்தின் போது நம்மாழ்வார் 24 ஆடைகளை ( பிரகிருதி தத்துவங்கள்) ஒன்றன்மீது ஒன்றாக அணிந்து வருவதை காட்டி விளக்கியது நன்றாக இருந்தது.
இப்படி மிகப் பரந்த இந்தியத் தத்துவப் பரப்பில், காலத்தால் பிற்பட்ட சைவ சித்தாந்தம் உருக்கொண்ட பாங்கை விளக்கிய விதம் மிக மிக அருமையாக இருந்தது. வேறு எந்த மரபார்ந்த குரு குலங்களை அணுகியிருந்தாலும் சைவசித்தாந்ததுக்கு இத்தகையதொரு அறிமுகம் கிட்டியிருக்குமா என்பது சந்தேகமே.
பிறகு ஆசிரியர், சைவ சித்தாந்தத்தின் மூன்று உண்மைகளான பசு, பதி, பாசம் ஆகியவற்றையும் வினைக்கொள்கையையும் சிவஞானபோதம், திருமந்திரம், சிவஞ்ஞான சித்தியார் ஆகிய நூற்பாக்களின் துணைகொண்டு நன்கு விளக்கினார்.
இறை வழிபாட்டின் மூலம் வினைப் பயனை அழிக்கலாம் என்று சைவ சித்தாந்தம் கூறுவதையும், அது சமணம் கூறும் “வினைப்பயனை அனுபவித்தே தீர்க்க வேண்டும்” என்ற கோட்பாட்டிலிருந்து எப்படி விலகியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். இது இந்தியாவில் சைவம், சமணத்தை வென்று மீண்டும் மக்கள் சமயமாக உருவானதற்கு ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
வேதாந்திகளும் விரும்பும் திருமந்திரத்தில்,
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அனாதி
பதியினை சென்றணு காப்பசு பாசம்
பதியணு கில்பசு பாசமிலாவே…….
என்ற மந்திரத்தில்
கடைசி வரியில் வரும் “பசுபாசம்” என்பதை வேதாந்திகள் உம்மைத் தொகையாகவும், (பசுவும், பாசமும்) சித்தாந்திகள் வேற்றுமைத் தொகையாகவும் (பசுவின் பாசம்) எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று விளக்கிய விதம் மிகவும் சுவையாக இருந்தது.
சித்தாந்த வகுப்பின் நடு நடுவே தமிழ் இலக்கிய, இலக்கணச் சுவையயும் ஊட்ட ஆசிரியர் மறக்கவில்லை.
“…. மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்“ என முடியும் பெரிய புராணக் கடவுள் வாழ்த்துப் பாடலில் மலர்சிலம்படி என்ற தொடரில் வல்லினம் மிகுமா என்று உவேசா கேட்டதற்கு, ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் கூறிய பதில் சிறப்பாக இருந்தது. மலர்சிலம்படியை, மலர் போன்ற மென்மையான திருவடி என்று உவமைத் தொகையாக பொருள் கொள்வதை விட எப்பொதும் மலர்ந்திருக்கும் திருவடி என்று வினைத் தொகையாக பொருள் கொள்வதே சிறந்தது; ஆகவே வல்லினம் மிகாது என்றாராம் ஆசிரியர்.
இவ்வாறு தத்துவமும் தமிழ்ச்சுவையும் நிறைந்ததாக வகுப்புகள் அமைந்தது நிறைவாய் இருந்தது. ஆசிரியர் வடமொழியையும் விட்டு வைக்கவில்லை .
“கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி “ என்ற வேத வாக்கியத்தில் “கப்யாசம்” என்பதற்கு குரங்கின் ப்ருஷ்தம் என்று தொன்றுதொட்டு வழங்கி வரும் அர்த்தத்திற்க்கு பதிலாக ராமானுஜர் கப்யாசத்தை, “ கம் பிபதி ஆசேத் “ என்று பிரிப்பதன் மூலம் “ நீரைக்குடிக்கும் சூரியனால் மலரும் தாமரை” என்று சிறந்த பொருள் தந்ததை ஆசிரியர் விளக்கிய விதம் அருமை.
இவை தவிர மாலைப் பேச்சுக்களில் அந்தியூர் மணியும்,, கடலூர் சீனுவும் செவிக் குணவளித்தார்கள்.
சுவையான உணவு வழங்குவதிலாகட்டும் மழை காரணமாக அந்தியூரிலிருந்து வெள்ளிமலை வர தடங்கல் ஏற்பட்ட போது மாற்று ஏற்பாடுகள் செய்வதிலாகட்டும் தாயினும் சாலப்பறிந்து செயல்பட்ட அந்தியூர் மணிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.
சைவர்கள், குருவிடமிருந்து திருநீறு பெறும்போது “பெருவாழ்வு வரும்” என்று கூறி அணிந்து கொள்வார்களாம். நானும் இந்த வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் அ.வே. சாந்தி குமார ஸ்வாமிகளுக்கும், வகுப்புகள் நடப்பதற்கு மூலகாரணமான ஜெயமோகன் அவர்களுக்கும் “பெருவாழ்வு வரவேண்டும்” என்று மனதாரப் பிரார்த்தித்தேன்.
ஒரு சிறிய வேண்டுகோள் : கல்வியைப் பெரும்போது குரு தட்சிணை கொடுக்க வேண்டும் என்று நமது மரபு கூறுகிறது. எனவே கடைசி நாளன்று ஒரு கவரை ஒவ்வொருவரிடமும் கொடுத்தால், அவரவர் விரும்பும் குரு தட்சிணையை அளித்து மகிழலாம்.
நன்றி
ஶ்ரீவத்ஸன்.