இஸ்லாம், கடிதம்

அன்புள்ள ஜெ,

ஜூலை 12-14  நிகழ்ந்த இஸ்லாமிய மெய்யியல் வகுப்பு இரண்டு முதன்மை காரணங்களால் எனக்கு முக்கியமானது. ஒன்று இஸ்லாமிய சூஃபி மரபு பற்றிய அறிமுகம். அதன் செல்வாக்கு இந்திய நிலத்தில், குறிப்பாக தமிழ் நிலத்தில் எத்தனை பரந்துபட்டது என்பதன் விரிவான வரலாற்று சித்திரத்தை வகுப்பின் வழி ஆசிரியர் நிஷா மன்சூர் கொண்டுவந்தார். இரண்டாவது இஸ்லாமிய மதத்தின் அழகியல் பார்வை. இரண்டு தளங்களும் எனக்கு முற்றிலும் பரிச்சயமற்றது. அறிமுகமே இல்லாதது.

நமக்கு இங்கே பிற மதங்களைப் பற்றிய அறிமுகம் என்பது அதன் வரலாற்று அல்லது அரசியல் பார்வையுடன் தொடர்புபடுத்தி மட்டுமே அறிமுகம் செய்யப்படுகிறது. சமீபத்தில் இந்து மதம் சார்ந்த நீங்கள் எழுதும் கட்டுரையிலும் இதன் பிரதிபலிப்பை காண்கிறேன். திரும்ப திரும்ப அரசியல் பார்வை சார்ந்து முன்வைக்கப்படும் மதப்பார்வைக்கு எதிராக உங்கள் குரல் எழுந்துக் கொண்டிருக்கிறது.

முழுமையறிவு நிகழ்வில் உங்கள் இந்திய தத்துவ வகுப்பு, சிறில் அலெக்ஸின் பைபிள் வகுப்பு, நிஷா மன்சூரின் இஸ்லாமிய வகுப்பு என மூன்றிலும் கலந்துள்ளேன். மூன்றிலும் முன் வைக்கப்பட்டது மதங்களிலிருந்து கிளைத்து வந்த தத்துவம் மற்றும் அழகியல் பார்வை மட்டுமே.  

ஆனால் இதற்கு நிகராக ஒவ்வொரு தரப்பிலும் இருந்த அதன் தனித்துவமான பார்வை ஒன்றும் கூடவே எழுந்து வருவதைப் பார்க்கிறேன். உதாரணமாக இஸ்லாமிய வகுப்பில் ஆசிரியர் சட்டத்திற்கும், தர்மத்திற்கும் ஆன ஊடாட்டம் எத்தகைய செல்வாக்கு செலுத்தியுள்ளது என நபிகள், நபி தோழர்கள் கதை வழி விளக்கினார். நபி தோழர் உமரின் மகன் செய்த தவறுக்கு அவர் அளித்த தண்டனை கதை ஒரு நவீன இலக்கிய வாசகனுக்கு முக்கியமானது. என்னால் அங்கிருந்து உங்கள் பத்துலட்சம் காலடிகள் கதைக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்த முடிந்தது. உண்மையில் அக்கதையின் ஆன்மீகமான சாரமே இவ்வகுப்பிற்கு பின் தான் புரிந்தது.

அதே போல் தங்கள் படையல் கதை. இஸ்லாமிய சூஃபி மரபை பற்றிய பரிச்சயம் நிகழும் போதே எறும்பு பாவா யார் என்ற தெளிவும் உடன் எழுகிறது. வைக்கம் முகமது பஷீரின்அனல் ஹக்சிறுகதையை வாசிக்கும் முன் சூஃபி மன்சூர் ஹல்லாஜ் வாழ்க்கை பற்றி ஓர் அறிமுகம் தேவையாகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வகுப்புகளுக்குள் உள்ள தொடர்பை பற்றி யோசிக்கிறேன். இங்கே நிகழும் வகுப்புகளில் எதுவும் தனி வகுப்பாக இல்லை. ஒரு தரப்பை பற்றிய அறிமுகம் ஏற்படும் போது ஏற்கனவே முந்தைய வகுப்பில் கற்ற தரப்போடு ஏற்படுத்தும் ஒற்றுமைகள் எனக்கு விந்தையாக உள்ளது. இங்கே இஸ்லாமிய வகுப்பில் ஆசிரியர் தொழுகை நேர தியானத்தின் சிறு பகுதியை செயல்முறையாக விளக்கினார். அதனை அவரை பின்பற்றி எங்களையும் செய்யச் சொன்னார். நீங்கள் உபநிஷத் வகுப்பில் செய்ய சொன்ன தனிமையில் அமர்ந்து செய்யச் சொன்ன தியான முறைக்கும் இதற்கும் எந்த வேறுபாடுமில்லை. இரண்டும் நம்மையும், நம் உள்ளத்தையும் பார்க்கும் பயிற்சியாகவே உள்ளது. விபாசனா வகுப்பிற்கு வந்த நண்பர் ஒருவரும் இதையே சொன்னார்.

இதைப்பற்றி இஸ்லாமிய மெய்யியல் வகுப்பு முடிந்த போது நண்பர் ஒருவர் ஆசிரியரிடம் கேள்வியாக எழுப்பினார். ”உங்கள் வகுப்பிற்கு பிறகு எல்லா மதத் தரப்புகளும் ஒன்றையே பேசுவதாக எனக்குப்படுகிறதுஎன்றார்.

அதற்கு ஆசிரியர் நிஷா மன்சூர் புன்னகையுடன் சொன்னார், “ஆமா எல்லாம் ஒன்று தான். நீங்கள் பார்ப்பது, சொல்வது எல்லாம் இங்கே மண்ணில் வளர்ந்து நமக்கு அறிமுகமான மதங்களின் தரப்பை. நான் சொல்வது ஞானத்தின் தரப்பை அது பூமியிலுள்ள எல்லா உயிர் குலங்களிலும் ஒன்றாக மட்டுமே இருக்கும் முடியும்என்றார்.

ஆம், கங்கை பூமியில் பலவாறாக களைப்பிரித்து ஓடலாம். ஆனால் ஆகாயத்தில் ஊற்றெடுக்கும் கங்கை ஒன்றாகவே இருக்க முடியும் என எண்ணிக் கொண்டேன்.

நன்றி,

நவின். ஜி.எஸ்.எஸ்.வி.

முந்தைய கட்டுரைவிபாசனா பயிற்சியில் அடைவது என்ன?
அடுத்த கட்டுரைஆசாரங்கள் எதுவரை தேவை?