அன்புள்ள ஜெ,
உங்களை இந்த கடிதத்தின் வாயிலாக சந்திப்பது மகிழ்ச்சி.
இலக்கியம் வாசிக்க ஆரம்பித்து சுமார் இரண்டு அல்ல மூன்று வருடம் இருக்கும். ஆனால் உங்களை மட்டும் கிட்ட நெருங்க விடாமல் ஜாக்கிரதையாக இருந்தேன் காரணம் உங்களை பற்றி உள்ள overhype நிலை தான். எங்க பார்த்தாலும் உங்க புத்தகங்களைப் படிக்கில-னு சொன்னா ஏதோ ஒன்னும் தெரியல போல நினைக்கிறாங்க. youtube- யில் ரசிகர் ஒருத்தரின் காணொளியைப் பார்த்தேன் அப்போது உங்களின் படைப்பு பற்றியும் அதனால் ஆனா பாதிப்பு பற்றியும் கூறிக்கொண்டிருந்தார். அதனால் கொஞ்சம் ஈர்ப்பு வந்தது ஆனால் உங்களை உள்வாங்குவது கஷ்டம் என தெரிந்தும் அந்த ஈர்ப்பை மூட்டை கட்டி வைத்து விட்டேன்.சரி, நீங்க நமக்கான ஆளு இல்ல என்று நினைத்து அஜிதனின் மைத்ரி நாவலைப் படித்தேன், கற்பனையில் தொலைந்துவிட்டேன், இறகு போல மனம் லகுவானது.
இனியாவது ஆரம்பிக்கலாம் என உங்களின் masterpiece என்று கூறப்படும் அறம் தொகுப்பை வாங்கினேன்.இன்னும் முழு தொகுப்பு படிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு கதையும் மனதில் வந்தே வண்ணம் இருக்கின்றன. அதில் முக்கியமான யானை டாக்டர், சோற்று கணக்கு,வணங்கான்.
வணங்கான் – ஒருவரின் பெயர் வைப்பதன் மூலம் தன் வரலாற்றைச் சொல்லாமல் சொல்கிறார்.அதற்கு அவர் படும் போராட்டம் எல்லாம் படிக்கும் போது நாம் இப்போது படும் கஷ்டம் எல்லாம் ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு தள்ள வைக்கிறது.
சோற்று கணக்கு – சாகிப்பு கடைக்குள் இரண்டு வரிகளில் சென்று விட்டேன் பின்பு கண்ணீர் மட்டும் தான் கரை சேர்த்தது. இப்படியும் மக்கள் இருப்பார்களா என எனக்குள் கேள்வி கேட்டதும் உண்டு
யானை டாக்டர்- உணர்வு வழியாக ஒரு மிருக ஜீவனை தொட முடியும் . காடு என்பது யாது? இயற்கை யாருக்கானது? என்ற எல்லா கேள்விக்கும் பதில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையாக வாழ்ந்திருக்கிறார் யானை டாக்டர்.
இதை படித்த பிறகு உங்களை நெருங்க விடாமல் நான் எப்படி தடுக்க முடியும். பின்பு நான் உங்களைப் பின்தொடர்ந்தேன்.
எனக்கு இருக்கும் ஒரே கேள்வி அ- புனைவு படைப்புகளை எப்படி சுவாரசியமாக படிப்பது மற்றும் எப்படி மனதில் ஏற்றி கொள்வது என்பது தான்
நீங்கள் நடத்தும் வாசிப்பு பயிற்சி வகுப்பில் சேர ஆவலாக உள்ளேன். அடுத்த வகுப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று சொல்ல முடியுமா?
இப்படிக்கு
குருநாதன்