கலாச்சாரத்தைப் பயில்வது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

சமீபத்தில் என் 4 வயது மகளுடன் மனைவி , அம்மா என நால்வரும் ஒரு கோவில் பயணம் போகலாம் என திட்டமிட்டு தஞ்சை ,  ஸ்ரீரங்கம்  , கும்பகோணம் என மூன்று தளங்களுக்கு சென்றுவந்தோம். ஐந்து நாள் பயணம். இனிதே திட்டமிட்ட படி முடிந்தது. பெரிய கோவில் முதல் ரங்கநாதர் , தாராசுரம் என பழைய கோவில்கள் 13 ஐ பார்த்தோம்.

இந்த பயனத்தின் நோக்கம் என் மகளுக்கு இந்த நிலத்தினின்று உருவாகி வந்த அல்லது வந்துகொண்டிருக்கின்ற ஒரு மதத்தையும் அதனுள் உறைந்து கிடக்கின்ற மனித அறிவை , கலாசார படிமங்களை , தொன்மத்தை சிறுவயதிலிருந்தே அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே. பக்தியோ , இறையியலோ not my cup of tea. ஏற்கன‌வே கடந்த கடிதங்களில் என் இறைமறுப்பு , ஆசார மறுப்பு பாதை , அது என்னுள் வளர்ச்சி பெற்ற விதம் ஆகியவற்றை  உங்களுக்கு தெளிவாக‌ எழுதியுள்ளேன். ஆக பக்திக்கோ இறைதுதி அல்லது இறையியலுக்கோ எதிரானவன் இல்லை என்றாலும் என்னால் அதை போதிக்கவோ அதை இன்னொருவருக்குள் கொண்டு சேர்க்கவோ  இயலாது. am a handicap in this  sense.

anyway coming to the point.ஒரு நாலு வயது குழந்தைக்கு என்ன பெரிதாக அறிமுகப்படுத்த முடியும் என்றால் பின்வருவன செய்யமுடிந்தது,

வீட்டில் பார்த்த ராமாயன சீரியலை வைத்து என் மகள் அனுமாரை  சரியாக கண்டுபிடித்தாள்.

கோவில் உள்ள சிற்பங்களை  ரசித்தாள். யானை , குதிரை மேல் உட்கார்ந்தாள்.

ஓவியங்கள் , சிற்பங்களை காட்டி சில சாமி பெயர்களையும் ஓரிரு கதைகளையும் சொன்னேன் மனதில் பதிந்ததா தெரியாது ஆனால் நான ஓரளவு நல்ல கதை சொல்வேன் என்பதால் கவர்ந்தது என நினைக்கிறேன். புராண கதைகள்.

இதற்கு மேல் நாலு வயது குழந்தைக்கு எவ்வாறு சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்துவது எப்படி என‌ தெரியவில்லை .எனக்கே ஏதும் அறிவில்லை என்று இருக்கையில் குழந்தைக்கு புரியும் அளவுக்கு சொல்லித்தர தெரியவில்லை.

நோக்கத்தை நிறைவேற்றிய ஓரளவுக்கு வெற்றிகரமான பயணம் என்றாலும் . “ஓரளவுக்குமாத்திரமே. அடுத்தடுத்த கோவில் பயனங்களில் தேங்காது முன்னேற வேண்டும். அதற்கு கீழ்கண்ட எனது கவனிப்பு மற்றும் கேள்விகளுக்கு உங்களின் பதில் மிக பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பயனத்தில்  எனக்கு திரும்ப திரும்ப நடந்தது மூன்று விஷயங்கள்.

1. கோவில் ஓவியங்களில் சிற்பங்களில் புராண கதைகள் மாத்திரமே அதிகமாக கண்பட்டது அதன் பின்னர் இருக்கும் metaphours of human life / history of those times ஐ அறிய மிகுந்த சிரமமாக இருந்தது. உதாரணத்திற்கு ,

தசாவதார சிலைகளை பார்க்கையில்  மச்ச , கூர்ம , வராக அவதராங்கள் அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களை வழிநடத்திய தலைவர்களாக இருக்கலாம் என ஒரு எண்ணம் வந்தது. அவர்களது பிரதான பணி கடல் கடக்க உதவி செய்வது நிலத்தை செப்பனிடுவது போன்ற பணிகளாக இருந்து இருக்கலாம் . அல்லது ஒரு தலைவன் , மனிதன் என இல்லாமல் அக்கலாத்தைய பிரதான வேலைகளாக இவை இருந்திருக்கலாம். இவற்றை விஷ்னு என்ற காக்கும் தெய்வத்தோடு பிற்காலத்தில் உருவகப் படுத்தப்பட்டு இருக்கலாம்.  போலவே ஆதியவதாரமான மச்ச அவதாரத்தில் எதிரிகள் என யாரும் இல்லை. இயற்கையால் ஏற்பட்ட பேரிடரின் கதை அது. ஏனைய அவதாரங்களில் போர்கள் , சண்டைகள் உள்ளன. ஒரு வேளை அங்கிருக்கும் ஏனைய குடிகளுடன் இந்த விவகாரத்தில் வந்த சண்டைகள் பிற்காலத்தில் கதைகளாக  பேசப்பட்டு புராணங்களாக தொகுத்து இருக்கலாம். இந்த யோசனை தோன்றிய மாத்திரத்தில் மிக அறிவார்ந்த ஒரு மனிதாக உணர்ந்தேன். ஆனால் இது போல தருணங்கள் வேறு ஏதும் அமையவில்லை. சிற்பங்கள் பற்றிய அறிவு கிஞ்சித்தும் இல்லை. எல்லா கோவில்களிலும் இருக்கும் சிங்கமுகம் யானைஉடல் கற்பனையா இல்லை வாழ்ந்து மறைந்திருக்கும் மிருகமா என கூட தெரியவில்லை.  

2.ஒவ்வொரு கோவிலுக்கு பின் இருக்கும் வரலாற்று உண்மைகள் கண்டடைய முடிந்தது. இது எளிய விஷயம் , ASI கல்வெட்டுகளில் செதுக்கி இருந்தார்கள். இதை படிப்பதில் நேரம் செலவு செய்தேன் .

3.பக்தி, இது சற்று கடிணமான விஷயம் துளசி தீர்த்ததில் இருந்து கியூவில் நிற்பது வரை , சாமி கும்பிடும் பெருங்கூட்டத்துடன் ஒன்றாது தண்ணீரில் எண்ணை போல  கலந்தே இருந்தேன் . எனக்கு பெரிதாக பிரையோசனமில்லை. கூட இருக்கும் க்யூ பக்தர்கள் என்னை அவர்களுள் ஒருவனாக நினைக்ககூடும். அது ஒருவகை நம்பிக்கை துரோகம் எனவே பட்டது!! இந்த பயனம் முழுக்க குறுக்கே வந்த ஒரு விஷயம் இந்த  பக்தி மாத்திரமே. என்னால் அதை கடைபிடிக்கவோ அங்கிகரிக்கவோ முடியவில்லை. குழந்தைக்கும்  சொல்லித்தர இயலவில்லை. என் இயலாமை அவ்வளவே.

சீதாராமன்

தக்காணக் கல்லோவியம்

அன்புள்ள சீதாராமன்,

உங்கள் மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் நிலையில்தான் பெரும்பாலான இந்தியப்பெற்றோர் இன்று இருக்கிறார்கள்.

இதைச் சுருக்கமாக இப்படி வரையறை செய்கிறேன். ‘மதத்தில் இருந்து நம்பிக்கையையும் ஆசாரங்களையும் விலக்கி பண்பாட்டை மட்டும் எடுத்துக்கொள்ள முயல்வது’

அது இன்றைய தேவை. அதைத்தான் நானும் சொல்லிவருகிறேன். நீங்களும் முயல்கிறீர்கள் சரிதான். ஆனால் அதற்கு முறையான பயிற்சி வேண்டும் அல்லவா? இன்று அன்றாட வாழ்க்கையின் சாதாரண செயல்பாடுகளைக்கூட இன்றைக்கு ‘கோர்ஸ்’கள் வைத்து படித்து தேறுகிறார்கள். (அண்மையில் வீடு தூய்மைசெய்வதற்காபன பயிற்சிகளுக்காக மூன்றுநாள் கோர்ஸ் ஒன்று அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்). ஒரு முழுப்பண்பாட்டையும் புரிந்துகொள்ள உங்களுக்கு எந்த அறிவுசார்ந்த பயிற்சியும், வழிகாட்டலும் தேவையில்லை என நினைக்கிறீர்கள் இல்லையா?

பண்பாட்டை புரிந்துகொள்வதென்பது நமக்குத் தோன்றியபடி எளிமைப்படுத்திக்கொள்வது அல்ல. நாம் அப்படிச் செய்வதற்கான தகுதி கொண்ட நிபுணர்கள் அல்ல. பண்பாட்டின் இயக்கம் மிகச்சிக்கலானது. ஊடுபாவுகள் கொண்டது. அதை முழுமையாகவும் சரியாகவும் புரிந்துகொள்வது அவசியம். அதற்கு முறையான பயிற்சிகள் தேவை. அந்தப் புரிதலுக்குப்பின்னர் அதை அடுத்த தலைமுறையினருக்கு அவர்களின் வயது, புரிதல்திறன் சார்ந்து எளிமையாக விளக்கலாம்.

நீங்கள் தசாவதாரம் பற்றி சொன்னதை மட்டும் சுருக்கமாக விளக்குகிறேன். நீங்கள் சொல்வது ஓர் எளிமைப்படுத்தப்பட்ட இடதுசாரி ‘சமூகவியல்வாதம்’. அதெல்லாம் காலாவதியாகி நீண்டநாட்களாகிறது. டி.சி.கோஸாம்பி போன்ற அந்த மரபின் மேதைகளே இன்று பழையவர்கள் ஆகிவிட்டனர்.

பண்பாட்டுக் குறியீடுகள் என்பவை பல நிலைகளிலாக, பல சரடுகளாக பரிணாமம் அடைந்து வந்தவை. அவற்றுக்கு கற்காலம் முதல் வேர்த்தொடர்சி இருக்கும். எவராலும் அவை இன்ன காலகட்டத்தில், இன்ன காரணத்துக்காக உருவானவை என சொல்லிவிடமுடியாது. நிபுணர்களே சொல்வதில்லை. சாமானியர் சொல்லமுயல்வதென்பது வீண்செயல். அவற்றுக்கு எளிய சமூகவியல் விளக்கங்கள் அளிப்பதனூடாக நீங்கள் அடைவதுதான் என்ன?

உதாரணமாக, மச்ச அவதாரம். அதன் தொடக்கம் என்னவாக இருக்கும்? தமிழகத்தின் கற்காலத்து பாறைக்குடைவு ஓவியங்களில் மீன் இருக்கிறது. மந்தா-ரே (திரச்சி, திரண்டி, திருக்கை) போன்ற பெரிய மீன். அதுவும்கூட ஒரு பயன்பாடு கருதி வரையப்பட்டதாகத் தெரியவில்லை. பெரிய மீனுக்குள் ஏராளமான சிறு மீன்கள் இருப்பதுபோல வரையப்பட்டுள்ளது. அது குறியீடுதான். மந்தா-ரே ஏராளமான முட்டைகள் போடுவது. ஆகவே அது அன்னையாக எண்ணப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

கற்காலக் குடைவு ஓவியங்களில் பல்லி, பன்றி இருக்கிறது.மலைகளைவிடப் பேருருவம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். இன்றைய மதம் அந்த ஓவியங்களை உருவாக்கிய அந்த மனநிலையின் நீட்சிதான். அந்தக் குறியீடுகளே இன்றைய தெய்வ வடிவங்களின் தொடக்கம். ஆனால் அவை தொடக்கம் மட்டுமே. அதன்பின் பல ஆயிரமாண்டுகளாக அக்குறியீடுகள் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டன. தத்துவார்த்தமாக விளக்கப்பட்டன. அந்த விளக்கங்களும் முக்கியம்தான்.

நீங்கள் முறையாகக் கற்றுக்கொள்ளலாம் என்பதே என் எண்ணம். கற்பதற்குக் கொஞ்சம் தன்னடக்கம் தேவை. நம் சூழலில் அது பெரும்பாலானவர்களுக்குக் கடினம். ஏனென்றால் நாம் எதையும் எவரிடமும் விவாதிக்க முற்படும் இந்தியர்கள். Argumentative indians .

ஜெ

 

முந்தைய கட்டுரைபறவை பார்த்தல் ஒரு தியானம்
அடுத்த கட்டுரைஉளக்குவிப்பு- தியானம் பயிற்சி