ஊக்கத்தின் செயல்திட்டம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

எப்போதோ ஒருமுறை தங்களது உரையில் நேரமேலாண்மை குறித்த கேள்விக்கு தாங்கள் அளித்திருந்த பதிலில்ஒரு செயலை எவ்வளவு நேரம் செய்கின்றோம் என்பதல்ல, எவ்வளவு தீவிரத்துடன் செய்கின்றோம் என்பதில் அதன் செயல்திரன் இருக்கின்றதுஎன்று சொல்லியிருந்தீர்கள்

நானும் அந்த தீவிரத்தனத்தை அடைய முயல்கின்றோன் ஒருநாளும் முடியவில்லை. எங்கொங்கோ கவனம் செல்கின்றது. தீவிரம் சில நிமிடங்களில் நீர்த்துப் போய்விடுகின்றது. இதை எப்படி சரிசெய்வது

கண்ணன் அய்யாமுத்து

அன்புள்ள கண்ணன்,

இந்த கேள்வியுடன் அடிக்கடி பலர் தொடர்புகொள்கிறார்கள். இது இந்தக் காலகட்டத்தின் பிரச்சினை

இதற்கு நான் பதில் சொல்லலாம். ஆனால் அப்பதில் ஒரு மருத்துவக்குறிப்பு மட்டுமே. அப்பதிலை நீங்களே செயலாக்கவேண்டும். அன்றி தெரிந்துகொண்டால் மட்டும் எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை.

கவனமின்மைசிதறல் என்பது ஒரு குறைபாடு அல்ல. ஒரு நோய் அல்ல. அதற்கு மருந்து இல்லை.தீர்வு இல்லை. அது ஒரு வாழ்க்கைமுறை. ஓர் உளநிலை. அதில் இருப்பவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்

அந்த மாற்றத்தை ஒரே நாளில், அல்லது உடனடியாகச் செய்துவிடமுடியாது. முதலில் அதைக்குறித்த ஓர் உறுதிப்பாடு தேவை. நான் என்னை மாற்றிக்கொள்ளப் போகிறேன் என்னும்  உறுதி. அதன்பின் சீராக அதற்கான பயிற்சிகள். அப்பயிற்சிகளை விடாப்பிடியாக, தொடர்ச்சியாகச் செய்வதில்தான் வெற்றி உள்ளது.

நான் ஒவ்வொருவரிடமும் சொல்வது இது. தனக்குத்தானே ஆணைகளைப் பிறப்பித்துக்கொள்பவர்கள், அதை தானே கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே எதையாவது சாதிக்கிறார்கள். தனக்குத்தானே சால்ஜாப்பு சொல்லிக்கொள்ள முடியாது. தன்னை தானே ஏமாற்றிக்கொள்ள முடியாது.

செயலைசெய்தாகவேண்டியஎன்றும்செய்ய விரும்புவதுஎன்றும் நான் பிரித்துக்கொள்கிறேன். முதலில் உள்ளது வேலை. இரண்டாவது என் விருப்பப்பணி.இரண்டுக்குமான பொழுதுகளை வகுத்துக் கொள்கிறேன். அந்தப்பொழுதில் அவற்றைச் செய்தே தீர்வேன் என எனக்கே ஆணையிட்டுக்கொள்கிறேன். அதைச் செய்கிறேன்.

தொடக்கத்தில் அது கடினம். கவனம் சிதறும். தவிர்ப்பதற்கும் ஒத்திப்போடுவதற்குமான பல காரணங்களை அகம் கண்டுபிடிக்கும். அவற்றை வென்று முன்செல்லவேண்டும். எடுத்த எடுப்பிலேயே பெரிய அறைகூவல்களை ஏற்கவேண்டாம். பெரிய பணிகளைச் செய்யவேண்டாம். சிறு அறைகூவல்கள், சிறு பணிகள் போதும். சிறு வெற்றிகள் அளிக்கும் ஊக்கம் மேலும் மேலும் முன்னேறச்செய்யும்.

வேறுவழியே இல்லை. பிடிவாதமாக, மூர்க்கமாக செயலில் ஈடுபடுவதொன்றே ஒரே தீர்வு. நம்மை நாமே உந்தி திசைதிருப்பிக்கொள்வது. இயலவில்லை என பலர் சொல்வதுண்டு. 30 ஆண்டுக்காலம் சிகரெட் பிடித்தவர், சிகரெட்டை விட 30 முறை முயன்று தோற்றவர், சிகரெட் பிடித்தால் உடனே உயிர் ஆபத்து என்றதுமே அப்படியே அதை விட்டுவிட்டதை பலமுறை கண்டிருக்கிறேன். உயிர் போய்விடும் என்றால் செய்யமுடிகிறது அல்லவா?

அதே போல இதையும் எண்ணலாம். இதுவும் உயிர்போவதுதான். கொஞ்சம் கொஞ்சமாகப் போகிறது என்பதே வேறுபாடு. அந்த எண்ணம் இருந்தால்போதும்

ஜெ

முந்தைய கட்டுரைதுடுப்புவால் கரிச்சானின் நாட்கள்
அடுத்த கட்டுரைஉள்ளுணர்வு என்பது என்ன?