அவநம்பிக்கைவாதியின் பிரார்த்தனை

அன்புள்ள ஜெ,

உங்கள் இணையப்பக்கத்தின் தீவிரமான நம்பிக்கைவாதம் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. நான் அறிந்த உண்மைகளுடன் அது ஒத்துப்போகவில்லை. இந்த நம்பிக்கைவாதத்தின் உள்ளீடின்மை என்னை தொந்தரவு செய்கிறது

சுதீர்

அன்புள்ள சுதீர்,

சரி, நம்பிக்கை இல்லை. விலகிச்செல்லுங்கள். உங்கள் அவநம்பிக்கைச்சூழலில் உங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளுங்கள். நம்பிக்கைச் சூழலை உருவாக்கி, அதில் வாழமுற்படுபவர்களை ஏன் நீங்கள் தொந்தரவு செய்யவேண்டும்? ஏன் இதில் நீங்கள் அமைதியிழக்கவேண்டும்?

அவநம்பிக்கையாளர்கள் எப்போதும் ஏன் நம்பிக்கையாளர்கள் பக்கமே வருகிறார்கள்? ஏன் நம்பிக்கையாளர்களுடன் விவாதித்து அவர்களை உடைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்?

அந்த அவநம்பிக்கை அத்தனை ஆழமானது என்றால் அதில் நிலைகொள்ளவேண்டியதுதானே? (அது அவநம்பிக்கை மீதான ஆழமான நம்பிக்கை சரிதானே?)

அது எந்த அவநம்பிக்கைவாதியாலும் முடியாது. அவன் நம்பிக்கைவாதியுடன் பேசமுற்பட்டபடியே இருக்கிறான். ஏன்? 

காரணம், அவனுடைய அவநம்பிக்கை ஆழமானது அல்ல என்பதே. என் அவநம்பிக்கையை தயவுசெய்து உடையுங்கள். என்னை மீட்டுத்தாருங்கள் என்று அவன் நம்பிக்கைவாதிகளிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறான்

இந்தக் கடிதமும் அப்படிப்பட்ட ஒரு மன்றாட்டே. நண்பரே, உங்களுக்காகவும்தான் இவை எழுதப்படுகின்றன.

இவை வெறும் தர்க்கங்கள் அல்ல. ஆகவே இவற்றுடன் விவாதிக்கவேண்டாம். விவாதித்து இவற்றை தோற்கடித்தால் எனக்கு இழப்பேதுமில்லை. இவை சில நடைமுறை வழிகாட்டல்கள். செய்துபாருங்கள். 

உண்மையான தீவிரமான முயற்சிகள் பயனளிக்கும்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைசிருஷ்டியை வழிபடுதல்
அடுத்த கட்டுரைதேநீர் குடிக்கும் பயிற்சி