அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் சரவணன். இதை உங்களுக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து எழுதுகிறேன். உங்களின் வாசகன்.உங்கள் கதைகள் வழியாகவும், கட்டுரைகள் வழியாகவும் ஏற்கனவே உங்களின் எழுத்தின் மேல் நல்ல பரிச்சயமுண்டு. சில மாதங்களுக்கு முன்பு உங்களுடைய ‘கலாச்சார இந்து‘ என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். பொதுவாக எந்த ஒரு புத்தகத்தையும் single stretch-ல் முடித்து விடுகிற பழக்கம் எனக்கு உண்டு. அனால், இந்த ‘கலாச்சார இந்து‘ என்கிற புத்தகத்தை என்னால் அப்படி முடிக்க இயலவில்லை . காரணம் , அந்த புத்தகத்தின் கருத்து அடர்த்தி. உங்களின் ஒரு, ஒரு பதிலுக்கும் பின்னால், எனக்கு எழ கூடிய சந்தேகங்களையும் , கேள்விகளையும் அவ்வளவு எளிதில் கடந்து போக முடியவில்லை. அதை எனக்கு நானே தெளிவு படுத்த, அதற்க்கு விடை தேட இன்னும் தீவிரமாக , நிறைய தேடுகிறேன். புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால் , நீங்கள் புத்தகத்தில் எழுதி இருந்த உங்களுடைய பதில்கள் நிச்சயமாக கடவுளை பற்றிய கருத்தில் நான் எங்கு இருக்கிறேன் என்பதை தெளிவு படுத்த உதவியது.மிகப் பெரிய புரிதலை கொடுத்தது . அதற்கு, நெஞ்சார்ந்த நன்றிகள்.
அந்த புத்தகத்தை புரிந்து கொள்வதின் நீட்சியாக , உங்களது You Tube – Unified Wisdom channel-ல் காணொளிகளையும் பார்த்து வருகிறேன்.உண்மையில் உங்களது ஒவ்வொரு காணொளிகளுமே, அதை ஒட்டிய கேள்விகளை மனதில் நிரப்புகிறது. மனம் மறுபடி, மறுபடி அதை சிந்தித்து பார்க்கிறது. ஒன்றில் இருந்து இன்னொன்று , அதில் இருந்து மற்றொன்று என மனம் பயணப்பட்டு கொண்டே போகிறது. இதை ஒரு முக்கிய அனுபவமாக பார்க்க வேண்டி இருக்கிறது. தொடர்ந்து உங்களின் காணொளிகளுக்காக காத்து இருக்கிறேன்.இத்தகைய சிந்தனைகளை என்னுடைய குழந்தைகளிடமும் கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறேன். அவர்களுக்கு புரியும் படியாக , எளிய உருமாற்றம் செய்து, அவர்களும் கேள்விகளுடன் வர வேண்டும் என்பது விருப்பம்.
இப்போது கேள்விக்கு வருகிறேன். உண்மையில் இந்த வாழ்க்கையின் உச்சம் அல்லது பிறவி பயன் என்பது கடவுளின் வழியாகவோ அல்லது தத்துவத்தின் வழியாகவோ மெய்ஞானம் அடைவதுதானா? இதைத்தான் மதங்கள் வெவ்வேறு வழிகளில் சொல்ல முயற்சி செய்கின்றனவா ? ஆனால் நாம் enlightment experience-ஐ விட்டுவிட்டு மற்ற சின்ன, சின்ன விஷயங்களில் மட்டுமே focus செய்கிறோமா ? மெய்ஞானம் தான் வாழ்வின் அர்த்தம் என்றால் , கடவுளை ஏற்று கொள்ளாத , வேறு எந்த இறை சார்ந்த தத்துவங்களையும் ஏற்று கொள்ளாத நாத்திக வாதிகளுக்கும் அது சாத்தியமா? எனில் அது எப்படி சாத்தியம்?
உங்களது இந்த சிந்தனையும் , கருத்து பரிமாற்றமும் தொடர்ந்து நடைபெற வேண்டும். தெளிவான புரிதல்களோடு ஒவ்வொருவரும் கடவுளையும் , வாழ்க்கையும் அணுக இது ஒரு பேருதவியாக இருக்க வேண்டும்.
நன்றி.
Regards,
Saravanan S.
அன்புள்ள சரவணன்,
வாழ்வின் இலக்கு என்ன? அதை அனைத்து மானுடருக்குமாகப் பொதுமைப்படுத்தி எவரேனும் சொல்லிவிடமுடியுமா? அப்படி ஒரு பதிலைச் சொல்லி அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளவைக்க முடியுமா? எத்தனை மதங்கள், எவ்வளவு கொள்கைகள்…
ஆகவே இது பிறருக்கான பதில் அல்ல. நான் எனக்கான பதிலை கண்டடைந்துள்ளேன் என்றால், அதாவது ஓரளவேனும் அதில் உறுதி இருக்குமென்றால் அது இதுதான்.
இந்தப் பிரபஞ்சம் நாமறியாத பிரம்மாண்டம். இதற்கு ஏதேனும் நோக்கம் உண்டா, இல்லையா என்பதையே நாம் அறியமுடியாது. நாம் அவ்வளவு சிறியவர்கள். அறியமுடியாமையே அதன் இயல்பு.
இங்கே வாழும் நாம் நமக்கென ஒரு தன்னுணர்வை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அது தன் முனைப்பாக ஆகி ஆணவம் என்னும் எல்லை வரை பெருகியுள்ளது. அது நம்மை பிரபஞ்சத்தில் இருந்து விலக்குகிறது.
விளைவாக நாம் நம் வாழ்க்கையை இப்பிரபஞ்சத்தை கணக்கிலெடுக்காமல் நம்மை மட்டுமே கொண்டு மதிப்பிட ஆரம்பிக்கிறோம். ஆகவே பதற்றமும் துயரும் வெறுமையுணர்வும் கொள்கிறோம். அவற்றை வெல்ல போகங்களில் திளைக்கிறோம். உறவுச்சிக்கல்களை உருவாக்கிக் கொள்கிறோம். உடைமைகளைப் பெருக்கிக் கொள்கிறோம்.
நாம் வெற்றி என சிலவற்றை கற்பனை செய்துகொள்கிறோம். அதன்பொருட்டு முட்டிமோதுகிறோம். போரிடுகிறோம். காழ்ப்பையும் கசப்பையும் பெருக்கிக் கொள்கிறோம். விளைவாகத் துயர்களில் மூழ்கியிருக்கிறோம்.
அந்த துயர்களில் இருந்து விடுதலை அடைவதையே நாம் மெய்யாக நாடுகிறோம். வாழ்வின் இலக்கு என வாழ்வுக்கு அப்பால் எதையும் நாம் நாடுவதில்லை. நாம் இங்கு வாழும் வாழ்க்கை பண்பாட்டின் ஒரு தொடர்ச்சி. நாம் வாழ்வது சமூகச் சூழலில், பொருளியல் சூழலில். ஆகவே தன்னிலை, ஆணவம் ஆகியவற்றிலிருந்து முழுமையாக விடுதலையடைவது நமக்கு இயல்வதல்ல. மிகமிகச் சிலருக்கு அது அமைகிறது.
ஆனால் தன்னிலையும் ஆணவமும் நீடிக்கையிலேயே கூடுமானவரை பிரபஞ்சப்பெருக்குடன் ஒத்திசைவது என்பதே நமக்கிருக்கும் ஒரே வழி. அதன் வழியாக அடையும் விடுதலையும், மகிழ்வுமே நாம் இலக்காகக் கொள்ளத்தக்கது. அப்படி பிரபஞ்சப்பெருக்குடன் இணைவதற்கான மிகச்சிறந்த வழி படைத்தல். அதாவது கலைகள், இலக்கியம், தன்னலம் முதன்மைப்படாத தொடர்ச் செயல்கள். அதையே நான் என் வழியென கண்டடைந்துள்ளேன்
அவ்வாறு பிரபஞ்சத்துடன் உரசிக்கொள்ளாமல், முடிந்தவரை இயைந்து வாழ்வதே வாழ்வின் ஒரே சாரம். முடிந்தவரை மகிழ்வாக, நிறைவாக இங்கு நாம் பெற்ற வாழ்க்கையை வாழ்வது. நாம் நம் ஆணவத்தால் உலகியலில் கொண்டிருக்கும் எந்த இடமும் எந்தச் செயலும் அம்மகிழ்வையும் நிறைவையும் அளிக்காது. இசைவு என நான் எண்ணுவது மட்டுமே அதை அளிக்கும். இசைவு என்னும் சொல்லின் வடமொழிதான் யோகம்.
கீதையின் சாரமென திகழ்வது அதுவே. யோகம். செய்க தவம் என பாரதி சொல்வது அதுவே. இங்கே செய்வதனைத்தும் யோகமென்றாதல். மகிழ்வையும் நிறைவையும் செயல்வழியாக அடைதல். வாழ்க்கையை மகிழ்ந்து நிறைந்து ஒவ்வொரு நாளுமென, பொழுதுமென வாழ்தல். நாம் நமக்கென கொள்ளத்தக்க ஒரே இலக்கு அது மட்டுமே. விடுதலை என்பது அது மட்டுமே. இங்கிருந்து சென்று அடையத்தக்க ஏதுமில்லை – இருந்தால் நாம் அதை அறியவே முடியாது. அதையே வள்ளுவர் சொன்னார் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்’.
ஜெ