அன்புள்ள ஆசிரியருக்கு ,
கடந்த 2023 மார்ச் மாதம் வெள்ளிமலையில் நடைபெற்ற முதல் ஆலயக்கலை வகுப்பில் கலந்து கொண்டதை ஒரு புள்ளியாக கொண்டு என் வாழ்வையே அதற்கு முன் பின் என்று பிரித்து விடலாம். உங்கள் பயண கட்டுரைகள் வழியாக தான் எனக்கு ஆலயக்கலை மீதான ஆர்வம் உண்டாயிற்று பின் ஆசிரியர் ஜெயக்குமாரின் வகுப்பும் அவருடன் மேற்கொண்ட தொடர் பயணங்களும் ஒரு பேரும் பாதையை என்னுள் திறந்து வைத்தது. இந்த வகுப்புகளாலும் பயணங்களாலும் எனக்கு கற்றலையும் தான்டி கிடைத்த இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் இனைமனம் கொண்ட நண்பர்கள் வட்டம் அமைந்தது தான், இன்று என் பள்ளி கல்லூரி தோழர்களை விடவும் உறவினர்களை விடவும் நான் அதிகம் உரையாடுவதும் பயணிப்பதும் இவர்களுடன் தான், இது இவ்வாறே தொடர வேண்டும்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இரண்டாம் நிலை ஆலயக்கலை முகாமில் கலந்து கொண்டேன், இதில் ஆசிரியர் மற்ற வகுப்புகள் போல் கற்றல் மட்டுமின்றி இதுவரை கற்றதை கொண்டு எவ்வாறு பங்களிப்பாற்றுவது என்று விளக்கினார். வகுப்பின் இறுதியில் ஆசிரியர் அவர்கள் எங்களிடம் நீங்கள் அனைவரும் கட்டாயம் ஒரு கோவில் குறித்து தமிழ் விக்கி பதிவு எழுத வேண்டும் என்று கூறினார், நண்பர்கள் என்னிடம் “நீ எந்த கோவில் குறித்து எழுத போகிறாய்?” என்று கேட்டதற்கு ஊர் பெருமை பிடித்த நான் மறுசிந்தனையின்றி லால்குடி சிவன் கோவில் குறித்துதான் என்று கூறினேன். பிறந்ததிலிருந்து பலமுறை சென்ற கோவில் தான் ஆனால் ஆவணப்படுத்தும் நோக்கில் சென்ற போது தான் உறைத்தது இதுவரை நான் அந்த கோவிலை சரியாக பார்த்ததே இல்லை என்று. பின்னர் பலமுறை அங்கு சென்று ஒவ்வொரு சிற்பத்தையும் புகைப்படம் எடுத்து, அக்கோவிலின் படியெடுத்து படிக்கபட்ட கல்வெட்டுகளை ரா.நாகசாமி அவர்களின் “உங்கள் ஊர் கல்வெட்டு துணைவன்” புத்தகத்தின் உதவியுடன் பல்வேறு தொகுதிகளிலிருந்து எடுத்தேன் அப்படியே கோவிலுக்கான ஒரு எளிய வரைபடமும் என் அண்ணன் உதவியுடன் தயாரித்து, இடையில் எழுந்த சந்தேகங்களை ஆசிரியரிடமும் நண்பர்களிடமும் கேட்டு தீர்த்து கொண்டு பல மாதங்கள் எடுத்து ஒரு தமிழ் விக்கி பதிவு தயார் செய்தேன். இரண்டு மூன்று முறை சரிபார்த்து பிழை நீக்கியுள்ளேன் ஆனால் முறையான வரலாற்று கல்வியோ தொல்லியல் பயிற்சியோ இல்லாததால் இப்பதிவில் பிழைகள் இருக்கலாம், சுட்டிக்காட்டினால் நீக்கி கொள்கிறேன் அடுத்தடுத்த பதிவுகலில் தொடராமல் பார்த்து கொள்கிறேன்.
கோவில்களை ஆவண படுத்துவது அறிவியக்க பங்களிப்பு என்பதை தாண்டி என்னளவில் ஏன் முக்கியம் என்றால், எனக்கு பிடித்த கோவில்களையும் சிற்பங்களையும் இன்னும் நுட்பமாகவும் முழுமையாகவும் இதன் மூலமாக பார்க்கிறேன் . இந்த பதிவு எழுதிய நாட்கள் அவ்வளவு சுவாரஸ்யமும் மகிழ்ச்சியும் நிறைந்தவை. நான் நம் நண்பர்களை தொடர்பு கொண்டு தமிழ் விக்கி கணக்கை துவங்கி இனி கோவில்கள் குறித்து பதிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இவையனைத்தையும் உருவாக்கி தந்த உங்களுக்கும் ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களும் நன்றி.
உங்கள் ஆசியை வேண்டும்
லால்குடி தினேஷ்
அன்புள்ள தினேஷ்,
மிக முக்கியமான முயற்சி. நேர்த்தியாக அமைந்துள்ளது. மிகச்சிறந்த ஒரு தொடக்கம்.
இந்த வாழ்க்கையை பொருளுள்ளவையாக ஆக்குபவை சிலவே. அதில் முதன்மையானது இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட அறிவியக்கத்தில் பங்கெடுத்தல். எந்த நோக்கமும் இல்லாமல், அதிலுள்ள இன்பத்தின்பொருட்டே பங்கெடுத்தல். அந்தப் பங்கேற்பு இரண்டு முகங்கள் கொண்டது. ஒன்று பெறுதல். இரண்டு அளித்தல். கற்றல், கற்பித்தல் இரண்டுமே ஒன்றின் இரண்டு பக்கங்கள். இரண்டாவதற்கும் வந்துவிட்டீர்கள். தொடர்க.
ஜெ