அன்புள்ள ஜெயமோகன்,
அனேகமாக ஓராண்டுக்கு முன்பு நான் அருகமர்ந்து கற்றல் ஏன் முக்கியம் என்று நீங்கள் பேசிய குறிப்பைப் பற்றி ஒரு நையாண்டியுடன் முகநூலில் எழுதினேன். நண்பர்களிடம் பேசவும் செய்தேன். இன்றைய நவீனத்தொழில்நுட்ப யுகத்தில் நடைமுறை தெரியாதவராகப்பேசுகிறீர்கள் என்று சொன்னேன். ஆனால் நானே இந்த வகுப்புகளுக்கு வந்தேன். கழுத்து- இடுப்பு வலி இருந்ததனால் யோக வகுப்புக்கு வந்தேன். அதன்பின் இரண்டு வகுப்புகள். இன்றைக்கு உறுதியாகச் சொல்வேன். சரியான ஆசிரியரின் அருகே அமர்ந்து கற்காமல் உண்மையாக எதையுமே கற்றுக்கொள்ளமுடியாது. சரியான இடம் என்பது கல்வியை பலமடங்கு கூர்மையானதாக ஆக்கிவிடுகிறது
இன்றைக்கு பார்க்கையில் நான் முழுமையறிவு அமைப்பிலே கற்றுக்கொண்ட எல்லாமே அந்த ஆசிரியரின் முகத்துடனும் குரலுடனும்தான் நினைவில் நிற்கின்றன. அந்த முகம் இல்லாவிட்டால் அவை வெறும் சொற்களே. அந்த உணர்ச்சிகளும் மிக முக்கியம். நாம் ஒரு மனிதரிடம் உரையாடுகிறோம் என்பதுதான் கல்வியின் அடிப்ப்டை. அவருடன் நாம் மானசீகமாக உரையாடிக்கொண்டே இருக்கிறோம் என்பதுதான் உண்மையில் முக்கியம். அருகமர்தல் மட்டும்தான் கல்வி என்று இன்றைக்குச் சொல்வேன்.
நன்றி
செந்தில்குமார்