ஆயுர்வேதம் நிகழ்த்திய ரசவாதம்

அன்புள்ள ஜெ,

நான், சுனில் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத வகுப்பிற்கு வந்திருந்தேன்

இந்த புத்தியல்பு வாழ்க்கையில் நாம் அனைவரும், சமன்வயப்பார்வை கொண்ட ஒருங்கிணைந்த மருத்துவத்தின் அவசியத்தை உணர்ந்த ஒரு மருத்துவரையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும், என நினைக்கிறேன். அப்படி நான் கண்டடைந்த ஒருவர், சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள். அறுவை சிகிச்சை அவசியமா? எந்த மருத்துவத்தை நாடலாம்? போன்ற கேள்விகள், எனக்கோ என் சுற்றத்தாருக்கோ வரும்போது அவரிடம் ஆலோசனை கேட்கத் தவறுவதில்லை. அவருக்குப்பிறகு, நான் பார்த்து வியந்த ஒரு மருத்துவர் சுனில் கிருஷ்ணன் அவர்கள்

நான் ஏற்கனவே எல்.மகாதேவன் அவர்களின்ஆயுர்வேதத்தின் அடிப்படைகள்புத்தகம் படித்து, திரிதோஷம் எனும் வாதம், பித்தம், கபம், ஏழு தாதுக்கள் போன்ற சில அடிப்படைகளை தெரிந்து வைத்திருந்தாலும் அவற்றை உணர்ந்து புரிந்து கொள்ள ஒரு ஆசிரியர் அவசியம் என்பதை வகுப்பில் உணர்ந்தேன்.

உடல் என்பதை, அலோபதி மருத்துவம் பார்க்கும் பார்வை வேறு, இந்திய மருத்துவம் பார்க்கும் பார்வை வேறு, இந்தியாவை பொறுத்தவரை, முக்தி அடைவதே வாழ்வின் நோக்கம். எனவே ஆத்மாவை சுமந்திருக்கும் இந்த உடம்பை கஷ்டப்படுத்தாமல் சரியாக பேணிக்காப்பது அவசியம் எனவும், உடலுக்கு, காயம்(அன்னத்தால் வளர்வது)-சரீரம்(தேய்வது)-தேகம்(வலிமை) என ஏன் இத்தனை பெயர்கள், எனவும் அவர் விளக்கியபோது இந்த வகுப்பு நம்மை வேறு தளத்திற்கு கொண்டு செல்லப்போகிறது, என்ற எண்ணம் தோன்றியது

ஆயுர்வேதத்தின் தொன்மம், வரலாற்றுப்பின்னணி, அடிப்படை மெய்யியல்கள் முதல், உணவுமூலிகைமருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் குறித்த மதிப்பீடுகள் என நம் அன்றாடங்களில் நிலவும் கேள்விகள் உட்பட அனைத்திற்கும் சரியான புரிதலை ஏற்படுத்தும் வகையில் வகுப்பெடுத்துமுழுமையறிவுஎனும் பெயருக்கு நியாயம் சேர்த்தார் ஆசிரியர்

ஆயுர்வேதம், ஒரு பெருந்தொற்று காலத்தில் இழந்த செல்வாக்கை இன்னொரு பெருந்தொற்று காலத்தில்(கொரோனா காலகட்டத்தில்) எவ்வாறு மீட்டெடுத்தது என்ற ஆசிரியரின் விவரிப்பு, ஆயுர்வேதத்தின் வரலாற்றில் உணர்வுபூர்வமான பகுதி. ஆயுர்வேதத்தின் எல்லைகள் என்ன? எந்த மாதிரியான நோய்க்கெல்லாம் கண்டிப்பாக வேலை செய்யும்? எதற்கெல்லாம் வேலை செய்யாது அல்லது  தரவுகள் இல்லை என்பதை மிக நேர்மையாக பதிவு செய்தார் ஆசிரியர்.

அதீத கற்பனையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக்கூட, கோபப்படாமல் தில்லுமுல்லு படத்தில் ரஜினி , “சிந்து பைரவி ராகத்த சிவரஞ்சனி ராகத்துல மிக்ஸ் பண்ணிஅட்டானா ராகத்த அவரோகணத்துல புடிச்சு, தொடைல ஆதி தாளம் போட்டாகிடைக்கற ராகம் கல்யாணியா, காம்போதியாகரகரப்பிரியாவா, சண்முகப்பரியாவா.. இல்ல ஸ்ரீப்ரியாவா..?” என்று கேப்பதைப்போல், கேட்கிறீர்களே சார்? என பதில் கூறி வகுப்பின் சமநிலை கெடாமல் பார்த்துக்கொண்டார், முக்குற்றங்களை கட்டுப்படுத்தும் நெல்லிக்கனியைப்போல !

உடம்பின் ஆரோக்கியத்தை காக்கவும் நோயை போக்கவும் ப்ரக்ருதியை (உடல் மனக்கூறு) பற்றிய அறிவு உதவுகிறது. வகுப்பின் மூன்றாம் நாளில், வாத பித்த கப ப்ரக்ருதிக்கான கேள்விகள் அடங்கிய அட்டவணைகளை ஒளிபரப்பி, ஒவ்வொருவரையும் மதிப்பெண் இடச்செய்து எந்த அட்டவணையில் அதிக மதிப்பெண் வருகிறதோ அந்த ப்ரக்ருதி என எடுத்துக்கொள்ளலாம், என்று கூறினார்

ஆசிரியர், விபாகம் பற்றி விளக்கினார். உணவில் நாம் உண்ணும்போது இருக்கும் குணம், உண்டு செரிக்கும் போது வேறு குணத்திற்கு மாறும். அதைப்பொறுத்து உணவு மற்றும் ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரை செய்யப்படும், என கூறினார். அதுபோல், வகுப்பில் செவிவழி வந்த செய்திகளை உண்டு செரித்தபின் மனதில் தங்கிய விபாகம்மதுரம்“. மொத்தத்தில் இந்த ஆயுர்வேத வகுப்பு எனக்குள் நிகழ்த்திய ரசவாதம்அற்புதம்“.

முழுமையறிவுக்கு நன்றி !

என்றென்றும் அன்புடன்

நடராஜன் பா 

பாண்டிச்சேரி

முந்தைய கட்டுரைஅருகமர்தல் , அனுபவம்
அடுத்த கட்டுரைஆலயங்களை அறிதல் அவசியமா?