குரு நித்யா ஆய்வரங்கம், இடம்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

குரு நித்யா ஆய்வரங்குக்கு விண்ணப்பித்திருந்தேன். இடமில்லை என்னும் தகவல் வந்தது. நிகழ்வு சிறப்பாக இருந்தது என்னும் செய்திகளைக் கேட்டேன். எழுத்தாளர்கள், சகவாசகர்களுடன் தங்கி உரையாடுவது என்பது என்னைப்போன்ற ஒருத்திக்கு மிக அபூர்வமான வாய்ப்பு. ஏனென்றால் இங்கே பெண்கள் சென்று தங்கி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு ஒழுங்காக நிகழும் இலக்கிய நிகழ்ச்சிகள் மிகக்குறைவு. குடி போன்ற பிரச்சினைகள் உண்டு. சண்டை சச்சரவுகளும் உண்டு. முழுமையறிவு நிகழ்ச்சிகளில் இருக்கும் ஒருங்கிணைவும் பாதுகாப்பும் என்னைப்போன்ற ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமானது.

நானெல்லாம் இப்போதுதான் குடும்பத்தின் எல்லையை கடந்து வெளியே கால்வைத்து சில இடங்களுக்குப் போய்வர ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் மீதான நம்பிக்கையால்தான் அங்கே வருவதற்கு எனக்கு குடும்பத்தில் அனுமதி கிடைக்கிறது. குடும்பத்தின் அனுமதி இல்லாமல் வேண்டியதைச் செய்யும் சூழல் எல்லாம் இங்கே பெரும்பாலான பெண்களுக்குக் கிடையாது என அறிந்திருப்பீர்கள். இந்த வாய்ப்பைத் தவறவிட்டதில் வருத்தம் உண்டு.

பிரபா

அன்புள்ள பிரபா,

குரு நித்யா நிகழ்ச்சிக்கு பங்கேற்பாளர்கள் அதிகபட்ச எண்ணிக்கையை அடைந்துவிட்டார்கள். ஏறத்தாழ நூறுபேர். அதுவே அதிகம். அங்கே தங்குமிடத்தின் வாய்ப்பை ஒட்டித்தான் ஆட்களை அனுமதிக்கிறோம். சுமார் 20 பேருக்கு வரை இடமில்லை என்று சொல்ல நேர்ந்தது. அடுத்தமுறை இன்னும் விரிவான நல்ல ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என நினைக்கிறேன்.

ஜெயமோகன்

 

முந்தைய கட்டுரைஐரோப்பிய இசை,வாக்னர்- ஓர் அறிமுகப்பயிற்சி