குருபூர்ணிமா நிகழ்வு

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

குருபூர்ணிமா நிகழ்வு பற்றிய செய்தியைக் கண்டேன். அந்நாளை வெண்முரசு நாளாகக் கொண்டாடுவது பற்றியும் அறிந்துகொண்டேன். அத்தகைய ஒரு விழா மிக அண்மைக்காலமாகத்தான் நிகழ்கிறது. பள்ளிகளில் ஆசிரியர்களின் கால்களை கழுவி வழிபடுவது போன்ற சடங்குகள் நிகழ்கின்றன. இந்த வகையான மூடநம்பிக்கைகளை இந்த நிகழ்வின் வழியாக ஊக்குவிக்கக் கூடாது என்னும் எண்ணம் எனக்கெல்லாம் உள்ளது.

பால் ஆசீர்

அன்புள்ள பால்,

விழாக்கள் ஏதோ ஒரு வரலாற்றுப் புள்ளியில் தொடங்கி தன்னியல்பாக காலத்தில் கைமாறப்பட்டு பண்பாட்டில் நீடிக்கின்றன. குருபூர்ணிமா என்பது ஒரு ‘பொதுப் பண்டிகை’ அல்ல. அது பல நூற்றாண்டுக்காலமாக குருகுலங்களுக்குள் மட்டுமே கொண்டாடப்பட்டது. ஆசிரியர்- மாணவர் உறவுக்கான ஒரு விழா அது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவை உறுதிசெய்வதற்குரியது. அதை நீங்கள் வேண்டுமென்றால் தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர்தினம் போல ஒன்றாகக் கொண்டாடலாம். இப்படித்தான் கொண்டாடவேண்டும், இன்னின்னவகையில் சடங்குகள் இருக்கவேண்டும் என்னும் எந்தக் கட்டாயமும் இல்லை.

ஆசிரியர்களின் ஆசிரியரான வியாசரை வணங்குதல், அவர் நூலாகிய மகாபாரதம் மற்றும் அதன் வழிநூல்களை வாசித்தல், வியாசரின் வடிவாக தன் சொந்த ஆசிரியரைக் கண்டு அவரை வணங்குதல் ஆகியவை மட்டுமே இந்த நாளுக்குரிய கொண்டாட்டங்கள். விஷ்ணுபுரம் குழுமம் அதை வெண்முரசு நாளாகக் கொண்டாடுகிறது. அந்நாளில் வெண்முரசு விவாதங்கள், வெண்முரசு சார்ந்த கலைநிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.

ஜெ

முந்தைய கட்டுரைகுரு நித்யா ஆய்வரங்கம், இடம்
அடுத்த கட்டுரைஉயிர் எத்தன்மைத்து?