உயிர் எத்தன்மைத்து?

அன்புநிறை ஜெ,

முதல்நிலைப் பயிற்சி வகுப்பினால் கிடைத்த உடல் மற்றும் மனநிலையின் முன்னேற்ற அனுபவமும், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும் {ன் 6,7,8 தேதிகளில் வெள்ளிமலையில் குரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள என்னை வெள்ளிமலை நோக்கி செலுத்தியது. இந்தமுறை உடன் வருவதாகச் சொன்ன வழித்துணை நண்பர்நழுவிவிடதனியளாக என் பயணம் தொடர்ந்தது. புதுவைவெள்ளிமலை வழி தெரிந்து விட்டதால் போனமுறை இருந்த பயம் விலகிவிட்டது. வயது அறுபத்தியிரண்டு. இன்னும் போகவேண்டிய தூரம் எவ்வளவு எனத் தெரியாது. பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரைசேர ஏதேனும் ஒரு பற்றுக்கோடு வேண்டுமே! மகள், மகன் அவரவர்களின் குடும்பம் சார்ந்த பொருளாதாரத் தேவைக்களுக்கான இடப்பெயர்வுகளும், சூழ்நிலைகளும் என் போன்ற பெற்றோரை ஏதேனும் ஒன்றை இழந்தாற்போல எண்ணச் செய்கிறது. முகம் பார்த்துப் பேச, சிரிக்க, சிறுசிறு சண்டையிட பேரப்பிள்ளைகளை ஆரத்தழுவி முத்தமிட இனியில்லை என்ற எண்ணம் வாழ்க்கையை வெறுமை ஆக்குகிறது. வயதான காலத்தில் எல்லா கணவன்மார்களுக்கும்நம்மைப் பார்த்துக் கொள்ள ஒருத்தி இருக்கிறாள்என்ற எண்ணமே கவலையற்ற நிம்மதியான வாழ்வைத் தருகிறது. அதேநேரத்தில் எல்லா மனைவிமார்களுக்கும் நாம் யார்? நமக்கு என்ன வேண்டும்? நம்முடைய விருப்பம் என்ன? மற்றவர்களுக்காகவே வாழ்ந்திருக்கிறோமே, அவ்வளவு தானா வாழ்க்கை? என்ற கேள்வியே எழுகிறது. இப்படித்தான் நான் வெண்முரசுக் கூடுகைக்குள் வந்தேன். அங்கிருந்து வெள்ளிமலை. வாசிப்பு என்ற சுவாசம் காட்டிய வழி இது!  ஒரு வாசிப்பனுபவம் எனக்கு அளித்த பெருங்கொடை, உளக்குவிப்பு தியானப் பயிற்சி என்றே சொல்வேன்.

முதல்நாள் வெள்ளிக்கிழமையன்று புத்தர், வாக்தேவி வழிபாட்டு முறைமைகளுக்குப் பின் வகுப்பு தொடங்கியது. சுய அறிமுகம் முடிந்தப்பின் முதல்நிலைத் தியானப் பயிற்சியில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிரும்படிச் சொன்னார் குரு தில்லை செந்தில்பிரபு. இந்த முறையும் கணிசமானவர்கள் இளைஞர்கள். என் வயதுடையோர் நான்கைந்து பேரே இருந்தோம். மின்னனுக் கருவிகளின் பாதிப்புகளையும், அதனூடான அவர்கள் வாழ்க்கைமுறை, அவர்களின் உடல் மற்றும் மனநிலையில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், சமூக ஊடகங்களால்  ஏற்படும் பாதிப்புகளையும், முதல்நிலை வகுப்பில் அடைந்த பயன்களையும் இளைஞர்கள் பகிர்ந்தனர். பசியின்மை, தூக்கமின்மை, உளக்குவிப்பு சார்ந்த பிரச்சனைகளைக் கூறினர். இவர்களுக்கு நோய் என்ன எனத் தெரிந்திருக்கிறது. அதற்கான மருந்தைத், தீர்வை நாடியே இங்கு வந்திருக்கிறார்கள். இவர்களில் இருவர் மருத்துவர்கள். நோய் தீர்ப்பவர்களே இவர்கள்தானே? இவர்கள் எங்கே இங்கு என்று எனக்குள் ஒரு கேள்வி! ‘நாங்கள் நோய்க்கு மருந்து கொடுக்கிறோம்தான். ஆனால் அது அப்போதைக்கான தீர்வு மட்டுமே. நிரந்தரமான தீர்வு என்பது நோய்முதல் கண்டடைவதே. அது மனம் சார்ந்ததாக இருக்கிறது. மனதை சரிசெய்தால் நோய் தீரும் என்று சொன்னாலும் மக்கள் கேட்க மாட்டேன்கிறார்கள். உடனடி பலனே அவர்கள் எதிர்பார்ப்பதுஎன்றனர். அவர்களில் ஒருவர், ‘நோயாளியின் அனைத்து நிலைகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிற என்னுடைய மனப்பான்மையினால் அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. அதற்காகவே வந்தேன்என்றார். இளைஞர்கள் பலர் வயிறு சார்ந்த பிரச்சனைகள் முன்பைவிட இப்போது சரியாகி இருப்பதாக கூறினார்கள். அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட குருபார்த்துக்கலாம்என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு வகுப்பை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

மனம் அதன் செயல்பாடுகள், புருஷன், மூலபிரக்ருதி, புத்தி, அகங்காரம், ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், சத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்கள். அவற்றின் மூலமாக பிரபஞ்சத்தை அடைதல், மகத், ஐந்து தன் மாத்திரைகள், ஐந்து பருப்பொருட்கள், ஐந்து புலன்கள், மனம், புத்தி என இருபத்து ஐந்து தத்துவங்கள் அடங்கிய சாங்கிய தரிசனத்தில் சொல்லப்பட்டவற்றை விளக்கினார். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல்தான் இருந்தது. இந்த இருபத்து ஐந்து தத்துவங்களைப் பற்றி முன்பு ஒருமுறை நண்பர் அரிகிருஷ்ணன்பனிரெண்டாவது பகடை’ (புதுவை வெண்முரசு கூடுகை) பேசுபகுதியில் உரையாற்றியது நினைவுக்கு வந்தது. ஏதாவது புரிந்ததா என்றார் குரு. சிலர் இல்லையெனவும், சிலர் ஆமாம் எனவும் சிலர் ஏதுஞ் சொல்லாமலும் இருந்தனர். ‘புரிந்தால் மிக நல்லது, புரியாவிட்டால் மிக மிக நல்லதுஎன ஆசிரியர் சொன்னதும் வகுப்பில் நகைப்பொலி எழுந்தது. மதியம் உணவு இடைவேளையின்போது, இந்த தத்துவக் கருத்துகள் எனக்குப் புரியவில்லையே என நான் தோழியிடம் சொல்ல அவள்நீங்கள் ஒருமுறைஜெ வின் தத்துவ வகுப்புக்கு வாருங்கள் மிக மிக எளிமையாக புரியும்என்றாள்.

அன்றைய மாலை வகுப்பை நீங்கள் யார்? என்ற கேள்வியோடு துவக்கினார் ஆசிரியர். நாங்கள் அவரவர் பெயர்களோடு சொன்னதும் கேள்வியை  வேறொரு கோணத்தில் முன்வைத்து விவாதத்தைத் தொடங்கினார். இரு குழுவாக பிரிந்து பதில் அளித்தடன் ஒவ்வொன்றாக விளக்கி, ஒவ்வொன்றாக உடைத்து எது நிலைக்கும்? எது வாழும் எது வீழும் என தத்துவம் சார்ந்து விளக்கினார். “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து இரு கைகளிலும் பால் நிறைந்து பொங்குவதாக கற்பனை செய்யுங்கள்! இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் வழங்குவதாக நினையுங்கள்! உங்களின் கருணையும் அன்பும் பெருகிச் செல்வதை கற்பனை செய்யுங்கள் எதிர்மறை எண்ணங்களை நீக்குவதும், நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதும் நம் மனதைத் தூய்மைப்படுத்துகிறதுஎன்று கூறினார். “அறுகுளத்து உகத்தும் அகல்வயல் பொழிந்தும் வரையா மரபின் மாரிபோலஎன்ற பாடலை நினைத்துக் கொண்டேன்.

அடுத்த நிகழ்வில் நமது உடலின் ஆற்றல் மையங்களையும் விழிப்புணர்வு, தூக்கம் கனவு, துரியம் பற்றியும் விளக்கி, ஆற்றல் மையங்கள் சமநிலையில் இல்லாதபோது உடல்ரீதியான, மனரீதியான சிக்கல்கள் ஏற்படுதல், இவற்றை சமன் செய்யவே யோகா, தியானப் பயிற்சிகள் என்பதையும் விளக்கினார். ‘உங்களுக்குள் நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் உயிர்சக்தியின் ஒரு வெளிப்பாடுதான்என்று கூறினார். முதல்நாள் வகுப்பே சற்றுகனமானதாகஉணர்ந்தோம்.

இரண்டாம் நாள் வகுப்பு ஆரம்பகட்ட பிராணாயாமத்திலிருந்து இன்னும் மேம்பட்ட, ஆழ்நிலை கொண்ட பிராணாயாம வகுப்பாக அமைந்தது. கபாலபதி, ஷீத்தலி பிராயாணாமங்களையும், உடலும் மனமும் ஒரே நிலையில் ஒருங்கிணைந்து பிரபஞ்ச சக்தியை அடைவதற்கான படிநிலைகளைக் கொண்ட சில பிராணாயாமங்களையும் தியரிநிலையில் மட்டுமின்றி அவரே செய்து காட்டி விளக்கினார். பிராணன் செயல்படும் விதங்களையும், அதன் பலன்களையும் தெளிவாக விளக்கிக் கூறினார். அந்தந்தக் கணத்தில் வாழ்தல், நிகழும் அனுபவங்களை ஆராயாமல் அதனை உற்று நோக்குதல், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இருத்தல்  இவைகள் உணர்வுநிலையில் உங்களின் மேம்பட்ட தியானத்திற்கு வழியமைக்கும் என்றார்.

சற்றுநேர இடைவெளிக்குப் பின்னரான நிகழ்வில் மிகவும் சக்திவாய்ந்த சைதன்ய சொரூப தியானமுறையை (துரியநிலை தியானம்) கற்றுக் கொடுத்தார். முதல்நிலைத் தியானப் பயிற்சி வகுப்பில் கற்பித்த யோகா மற்றும், தியானப் பயிற்சியால் எங்களில் பலர் பலன் அடைந்திருந்தோம். இந்த முறை இத்தியானத்தின் சிறப்புகளையும், உடல்நிலையில் உணர்வு நிலையில், சக்தி நிலையில் இத்தியானம் எவ்வளவு ஆற்றலை எங்களுக்கு அளிக்கும் என்பதையும் கூறினார். புருஷன் என்ற விழிப்புணர்வை உணருவதற்கான படிநிலைகள் இந்த இரண்டு நாட்களும் கற்பிக்கப்பட்டது என்பதை இத்தியானத்தில் அமர்ந்தபோது உணர்ந்தோம்.

இதற்காக நாங்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். மூன்று குழுவினரையும் தனித்தனியாக அழைத்து அவரவர்களுக்கான மந்திரச் சொல்லை ஆலமரத்தடியில் அமர்ந்து உபதேசித்தார் குரு தில்லை செந்தில் பிரபு. யாரும், எதையும் யாரிடமும் பகிர்தல் கூடாது, கண்ணொடு கண் நோக்காமை, வாய்ச்சொற்கள் இலாமை என்ற கட்டளைகளை ஏற்று தியானத்தில் அமர்ந்தோம் நாங்கள். இத்தியானத்தின் அனுபவம் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. அமர்ந்த சில நிமிடங்களிலேயே உடல் என்ற பருப்பொருள் அங்கிலாததான, தன்னை மறந்த நிலை அது கனவா, இல்லை நினைவா என்று தெரியாத நிலையை அடைந்தேன். இனிப்பு சாப்பிட்ட பின்னும் நாக்கின் அடியில் ஓரு தித்திப்பு தங்கியிருக்குமே அது போல தியானம் முடிந்து கண்ணைத் திறந்த பின்னும் உடல் முழுவதும் ஒரு பரவசநிலை பரவியிருந்ததை அறிந்தேன். குரு அனைவரிடமும் பின்னூட்டம் கேட்டுக் கொண்டு என்முறை வந்தபோது நான் சொன்ன பதில்சுகமாயிருந்தது; என்பதே! யாரிடமும் பகிராத எங்களின் அகம் மட்டுமே அறிந்த அந்த மந்திரச்சொல் எங்களுக்கு மட்டுமானது. அச்சொல்லை விட மேலானது அந்த தியானம் எனும் பெரும் நிதியம். இரண்டாம் கட்ட இப்பயிற்சியைத் தவறவிட்டவர்கள் இப்பெரும் நிதியை தவறவிட்டவர்கள் ஆவர்.

இதில் சிறப்பாக நான் உணர்ந்த விஷயம் என்னவென்றால் இரண்டு கட்டப் பயிற்சிகளிலும் எங்களை உடற்பயிற்சி, யோகப் பயிற்சி, தியானப்பயிற்சி என அகமும் புறமும் தயார் செய்து, அந்நிதியைப் பெற எங்களைத் தகுதியுடைவர்களாக்கி விலை மதிப்பற்ற பொக்கிஷத்தை அளித்ததை என்னவென்று சொல்வது? பிராணாயாம நிலையில் உடலைத் தூய்மைப்படுத்தியும், உணர்வுநிலையில் மனதைத் தூய்மைப்படுத்தியும், சக்தி நிலையில் எங்களின் உள்சக்தியை மேம்படுத்தியதையும்  உணர்ந்து வியந்தோம். ‘சில பயிற்சிகள் செய்யும்போது எப்போது முடியும் என்றிருக்கும். இப்பயிற்சி மட்டுமே எப்போது ஆரம்பிப்போம் என எண்ண வைத்தது; எனப் பலரும் பின்னூட்டத்தில் கூறினார்.

மறுநாள் வழக்கம்போல் காலைநேர யோகா பயிற்சி, பிராணாயாமப் பயிற்சி, தியானம் என முதல் கட்ட நிகழ்வு முடிந்தது. இரண்டாம் கட்ட நிகழ்வில் அவரவர்கள் மூன்று நாட்களாக நடைபெற்ற அனுபவங்களைப் பகிர்ந்தனர். என் அனுபவங்களைக் கூறிய பின்னர் அங்கிருந்தவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். ‘உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களையும் குறிப்பாக உங்கள் வீட்டின் பெண்களையும் இந்த உளக்குவிப்பு தியானப் பயிற்சி வகுப்புக்கு அழைத்து வாருங்கள். அதுவே நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் மிகச் சிறந்த பரிசாக இருக்கும்’.

 

            யோக தரிசனத்தின் நோக்கம், அத்தரிசனத்தை உணர்த்துவதற்காக கற்பிக்கப்பட்ட படிநிலைகள் இத்தனையும் கற்று நாங்கள் அடைந்த சைதன்ய சொரூப தரிசனம் மாபெரும் நிதியம்! உயிர் எத்தன்மைத்து என்று கேட்டால் என்ன சொல்வோம்? ‘அது உணர்தல் தன்மைத்துஆம்! தியானமும் உணர்தல் தன்மைத்தே! அனைவருக்கும் வணக்கமும் நன்றியும்.

இராச. மணிமேகலை

 

முந்தைய கட்டுரைகுருபூர்ணிமா நிகழ்வு