அன்புள்ள ஆசிரியருக்கு,
2025, ஜூன் மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் பௌத்தம், விபசனா வகுப்பிற்குச் சென்றிருந்தேன். அதன் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
என்னைப்பற்றி சில வரிகள். எனக்கு தியானம் பற்றி தெரியும். அதை முறைப்படி கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் தியானம் பற்றி ஓர் ஈர்ப்பு என்னுள் இருந்தது.
என்னுடைய ஏழு வயதில் அப்பாவை இழந்தேன்.முப்பது வயதில் கணவரை இழந்தேன். உறவுகள் தேவைப்படும் அந்த பருவத்தில் இழக்கக்கூடாத முக்கிய உறவுகளை இழந்தேன். விளைவு, சிறு வயதில் திருமணம், பெரிய அளவில் படிப்பறிவு இல்லை. படித்தது பன்னிரண்டாவது வரை தான்.
ஒரு மகன் இருக்கிறான். அவனுக்காக வாழ்க்கைப் பயணத்தைத் தொடர ஆரம்பித்தேன். பொறுப்பு அதிகம் ஆனது. அவனுக்கு அப்பாவும் நான் தான், அம்மாவும் நான் தான். என்னுடைய உலகம் சிறியது. அம்மா, மகன், இவர்களோடு எப்போதும் மனச்சோர்வோடு எதிர்காலத்தை எண்ணி கனவில் வாழ்ந்துகொண்டிருக்கும் அண்ணன். இவர்களுடன் என் வாழ்க்கை நகர்ந்தது.
பல சுமைகளுடனும், துயரங்களுடனும் பயணித்து இப்போது சமுதாயத்தில் வீடு, வாசல், மகனுக்கு ஒரு வேலை என நிம்மதி அடைந்தாலும் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையில் பயம், பதட்டம் இருந்தது. நானும் ஒரு அரசு வேலையில் இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லாமல், மனதில் நிறைய கேள்விகள் இருந்தன.
தினமும் எனது வாழ்க்கை பரபரவென இருக்கும். வீட்டு வேலைகளைப் பார்ப்பது, அம்மா, அண்ணன், மகன், இவர்களுக்குத் தேவையானவற்றை செய்வது, வீட்டைப் பற்றி மட்டும் சிந்திப்பது என்று போகும். கொஞ்ச நாள் முன்னால்தான் எனக்கு வேலை கிடைத்தது. எந்திரம் மாதிரி போகும் நாள் முழுதும்.
என்னுடைய மகன் விபசனா வகுப்பிற்குச் சென்று வந்தான். பயனுள்ளது என்று அவன்தான் என்னையும் பிடிவாதமாக அனுப்பி வைத்தான். அந்த இடத்தின் அமைதியும், அமைப்பும், கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. நான் குடும்பத்தை விட்டு தனியாக இப்படி ஒரு இடத்துக்குப் போனது புது அனுபவமாக இருந்தது. முக்கியமாக சமயல் கூடம் – அது எனக்கு வியப்பைத் தந்த இடம். ஒரே அம்மா எத்தனை பேர் வந்தாலும் ருசியாக, திட்டமாக சமைத்து வைத்து விடுகிறார்கள்.
நாங்கள் பயிற்சியை முடிக்கும் முன்னதாகவே பசிக்க ஆரம்பித்துவிடும். பசித்து புசிப்பதால் சுவை அள்ளும். நமக்குப் பிடித்ததை நாமே எடுத்து பரிமாறி சாப்பிடுவது, எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவது, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது,பிறகு எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையில் தங்கி ஓய்வெடுப்பது, அதன்பின் பயிற்சி நடக்கும் இடத்திற்குச் செல்வது. அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பிறகு அங்கு வந்திருந்த பலவிதமான மனிதர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
இதை எல்லாம் ஏன் விரிவாக எழுதுகிறேன் என்றால் என் வாழ்க்கையில் 7 வயதில் அப்பா இறந்த பிறகு அம்மா எங்கேயும் வெளியே அனுப்பியது இல்லை. பள்ளி செல்லும்பொழுது கூடவே வருவார்கள். பின்னர் மாலையில் வந்து கூட்டிச் செல்வார்கள்.திருமணத்திற்குப் பிறகும் இந்த செயல் தொடர்ந்தது. நபர் தான் மாறினார்கள். அம்மாவிற்கு பதிலாக கணவர் அவ்வளவுதான். எங்கவும் அனுப்பமாட்டார்; கோயில் உட்பட. அம்மா வீட்டிற்கு எப்போதாவது போனாலும் கூடவே வந்துவிடுவார். இல்லாவிட்டால் மாலையில் வந்து கூட்டிப் போய்விடுவார். அவர் என்னை விட்டு மறைந்த பின்னர் சமுதாயம் விதவை என ஒதுக்கிவைத்தது. விசேஷ வீட்டிற்குப் போனால்கூட முன்னால் போகாமல், தயங்கி பணிந்து, மொய் எழுதும் இடத்தில் கூட்டமில்லாமல் இருக்கும் நேரம் பார்த்து எழுதிவிட்டு விருந்தில் கூட உட்காராமல் வந்த காலம் உண்டு.
பொறுப்பு, கடமை என எந்திரம் மாதிரி வாழ்ந்த எனக்கு, நித்யவனம் செவிக்கு, புலனுக்கு, மனசுக்கு, வயிற்றுக்கு ஒரு அரு மருந்தாகவே தெரிந்தது. அங்கு வரும் பலதரப்பட்ட மனிதர்களின் கருத்து, வாழ்க்கை முறை, பாவனை பிரமிப்பாகவும் இருந்தது.
முதல் நாள் தியான வகுப்பில் கொஞ்சம் பயமாகவும் சற்று பதட்டமாகவும்தான் நான் போனேன். தியானம் பற்றி எனக்கு இருப்பதெல்லாம் கேள்வி ஞானம் மட்டும் தான். அதைப் பற்றி துளி அளவுகூட அனுபவம் இல்லை. காலிப்பலகை என்று சொல்வார்கள். அது மாதிரிதான் வந்து அமர்ந்தேன்.
இங்கு ஆசிரியர் அமலன் ஸ்டேன்லி பற்றி சொல்ல வேண்டும். பயிற்சி செய்பவர்களுக்காக அமரும் இருக்கை, விரிப்பு எல்லாம் தயார் செய்து கொண்டுவந்தார்கள்.
எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான, நேர்த்தியான முறையில் எளிமையாக புரியும்படி வகுப்பை ஆரம்பித்தார். உட்காரும் முறை முதற்கொண்டு சொல்லிக்கொடுத்து வகுப்பைத் தொடர்ந்தார். முதலில் ஓரிடத்தில் நேராக அமர்ந்து தியானம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டேன். கீழே அமர்ந்து உடம்பைப் பழக்கவில்லை. தியானத்தின் மீது ஓர் அலாதியான ஈர்ப்பு இருந்தது. அதனால் அதை தொடர்ந்து செய்ய விருப்பப்பட்டேன். எங்களை தொடர்ந்து தியானத்தில் அமரச் செய்ய ஆசிரியர் அருமையான புத்தர் கதைகளையும் தியான வகுப்பில் இலகுவாக ஈடுபட தேவையான வழி முறைகளையும் எடுத்துக் கூறி எங்களுக்கு சோர்வு ஏற்படாமலும், தியான வகுப்பில் ஆழ்ந்து ஈடுபடவும் வழி செய்தார்.
தியான வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென மழை பெய்தது. மழை சத்தத்தில் கண் மூடி தியானம் பண்ண சொல்லிக் கொடுத்தார். நாங்கள் அனைவரும் தியானத்தில் மூழ்கி இருந்தோம். எங்களுக்கு மேலே இருந்த மேற்கூரை மேல் மழைநீர். ஆனால் மழையில் நனையாமல் அந்த சத்தத்தை காதில் உணர்ந்து, உடம்பு மழையில் நனைந்ததுபோல் காட்சிப்படுத்தி தியானம் பண்ணினோம். அது நல்ல அனுபவமாக இருந்தது.
பின் தியான வகுப்பில் இருந்தபோது கண்மூடி அமர்ந்த நிலையில் மயில் அகவும் சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்டவுடன் மயிலின் அழகான தோற்றம் கண் முன்னே வந்தது. அப்போதும் ஆசிரியர் வழிகாட்டியபடி தியானத்தில் ஈடுபட முடிந்தது.
இரண்டாம் நாள் தியான வகுப்பில் உடற்கூராய்வு தியானம் சொல்லிக்கொடுத்தார். போர்டில் படம் வரைந்து செய்முறை விளக்கத்தை 8 வடிவில் விளக்கி சொல்லிக்கொடுத்தார். அது பசுமரத்து ஆணி போல் மனதில் நின்றது. இதனால் மகிழ்ச்சியோடு பயிற்சியில் ஈடுபட முடிந்தது. இதன் மூலம் எனக்கு ஓர் அருமையான அனுபவம் ஏற்பட்டது. உடற்கூராய்வு தியானம் செய்யும்போது அனைவரும் தியானத்தில் ஈடுபட்டு இருந்தோம். ஆசிரியர் தியானத்தில் அமர்ந்து குறிப்புகள் கொடுத்துக்கொண்டிருந்தார்.
அர்ஜுனன் குருகுல வாசம் போயிருந்தபோது மானவர்களை நிற்கவைத்து மரத்தில் இருக்கும் குருவியின் கண்ணை மட்டும் குறிபார்த்து அடிக்கச் சொன்னர் குரு. ஒவ்வொருவரிடமும் என்ன தெரிகிறது எறு கேட்டதற்கு ஒருவர் மரக்கிளை தெருகிறது என்றும் இன்னொருவர் குருவி தெரிகிறது என்றும் சொன்னார்களாம். அர்ஜுனனிடம் கேட்டபோது குருவே எனக்கு குருவியின் கண் மட்டும் தெரிகிறது என சொன்னாராம் அதுபோல எனது முன் ஆசிரியர் தியான வகுப்பு நடத்தும் போது கண்மூடி ஒவ்வொரு உறுப்பாக உன்னிப்பாக பார்க்க சொல்லும் பொழுது எனக்கு அந்த உறுப்பு அந்த பாகம் மட்டுமே தெரிந்தது.
அப்போது 8 வடிவ உடற்கூராய்வு தியானம் செய்யும்போது ஒரு உறுப்பில் இருந்து மற்றொரு உறுப்பிற்கு உற்று நோக்கி நகரும்போது மெய் சிலிர்த்து சின்ன பரவசம் அனுபவித்தேன். இது புது அனுபவமாக இருந்தது. தொடர்ந்து அசையாமல் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவது எனக்கு சவாலாக இருந்தது. முயற்சியைக் கைவிடவில்லை. பயிற்சியுடன் ஒன்றியிருந்தேன். ஆசிரியருடன் நான் மட்டும் இல்லை, வந்த அனைவரும் பயிற்சியில் ஒரு மனதுடன் லயித்து ஈடுபட்டார்கள். அது எனக்கு ஊக்கம் தந்தது.
அடுத்து முக்கியமாக நடைத் தியானம் பற்றி அறிந்துகொண்டேன். மிகவும் அருமையாகவும் வித்தியாசமாகவும் ஒரு புது அனுபவத்தை எனக்கு தந்தது. பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் விழிப்புடன் செய்ய வேண்டியது. நடைபயிர்சிக்கு பழகி இருப்போம். அதை விட கொஞ்சம் மெதுவாகவும் மூச்சுடன் சேர்ந்தும் லயத்துடன் மெதுவாக அடிவைக்க வேண்டும். இதனை காலையில் எழுந்ததும், இதமான குளிர்காற்றும் விடிந்த நிலையின் வெளிச்சமும் கொஞ்சம் இருளும் சூழ்ந்த வேளையில் நாம் சற்று விழிப்புடன் மென்மையாக நடை தியானம் செய்யும்போது, மனதிற்கு அமைதியான, தெளிந்த எண்ணமும், உடலுக்கு அமைதியாக மென்மையான இயக்கமும் ஏற்படுவதை அறிந்தேன். இந்த வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததில் இருந்து எனது காலை பழக்கத்தில் இதுவும் ஒன்றாகிவிட்டது. நடை தியானத்திற்குப் பிறகு அமைதியான அமர்ந்த தியானம் என ஈடுபாட்டுடன் செய்து வருகிறேன்.
வகுப்பு முடிந்து முதல் 3 நாள், 4 நாள் சரியாக தியானத்தில் ஈடுபட முடியவில்லை. பிறகு ஆசிரியர் சொன்னதை நினைவுக்குக் கொண்டுவந்து பயிற்சியைத் தொடர்கிறேன். காலையில் 7 மணிக்கு வேலைக்குச் செல்கிறேன். ஆனாலும் இரு வேளையும் பயிற்சி செய்தேன்.
இன்னொரு சின்ன பகிர்தல். சுவாசம். மூச்சை கவனிக்க கவனிக்க என்னுள் இருந்த பரபரப்பு அடங்கி அமைதியான நிதானமான ஒழுங்கு, வாழ்க்கை நடைமுறையில் வருவதை கண்கூடாக பார்த்தேன். உதாரணமாக காலையில் வேலைக்கு செல்வதால் சமயல் வேலை, அம்மாவின் உணவு, மருந்து மாத்திரை, எனக்கு தேவையான உணவு இவைகளை எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்லும்போது வண்டியை எடுத்துச் செல்வேன். அப்போது பைத்தியக்காரிபோல வண்டி ஓட்டுவேன். ஏனெனில் இரண்டு பஸ் பிடித்து வேலைக்குச் செல்ல வேண்டும். அந்த அவசரம் தான்.
தியானத்தில் இரண்டு வேளையிலும் ஈடுபடுவதால் தற்போது என்னால் நிதானமாக வண்டி ஓட்ட முடிகிறது. அன்றாட வேலைகளில் தெளிவாகவும் பதட்டம் இல்லாமலும் செயல்பட முடிகிறது என்பதை கண்கூடாக உணர்கிறேன்.
வேலை செய்யும் இடங்களில் எனக்கு கொடுக்கும் வேலையை இரண்டு மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்துவிடுகிறேன். இதனால் மன மகிழ்ச்சியும் தெளிவும் கிடைக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது. இன்னொரு வழக்கம் இருந்தது. என்னவென்றால் ஃபோன் பார்ப்பது. ஓய்வு நேரங்களில் ஒரு மணி நேரம் கூட இடைவெளி விடாமல் பார்ப்பேன். இப்போது அதனைப் பயன்படுத்தும் செயல் வெவாக குறைந்துவிட்டது. இப்படி நிறைய மாற்றங்களை அனுபவிக்கிறேன்.
மேலும் சில விசயங்களைக் கவனித்தேன். ஒரு நபர் ஒரு விசயம் பேச வருகிறார் என்றால் உடனே நான் நினைத்த கருத்தைச் சொல்லுவேன். இப்பொழுது உற்று நோக்கி என சொல்ல வருகிறார் என்பதை கவனிக்கிறேன். தேவை என்றால் மட்டும் பதில் பேசுகிறேன். இல்லையென்றால் மௌனத்தாலும் சிறு புன்னகையாலும் கடந்து செல்கிறேன். கொஞ்ச நாட்களே தியானத்தில் ஈடுபட்டாலும் நிறைய மாற்றங்களிக் காண்கிறேன். ஆனால் தியானம் என்பது ஆழ்கடலில் முத்து எடுப்பதைப் போல.
என்னுடைய அனுபவத்தில் கண்டது இந்த தியான வகுப்பிற்குப் பின் மனதில் இட்ட பயிர் செழித்து வளர தேவையற்ற களைகளைப் பறிக்க வேண்டும். என்னுடைய நடைமுறை வாழ்க்கையில் தேவையில்லாத பழக்கங்களை நீக்கி வாழ்க்கையை செம்மைபடுத்த முயலுகிறேன் என்பதைக் கண்கூடாக பார்க்கிறேன். மனிதர்களின் மனம் பழக்கத்திற்கு எப்படி அடிமை ஆகிறது என்பதையும் இடைவிடாத பயிற்சியால் பழக்கவழக்கங்களை எப்படி மாற்றுவதற்கு முடியும் என்பதையும் கற்றுக்கொள்ள முடிந்தது. மேலும் தொடர்வேன்.
உடற்கூராய்வு தியானம் எனக்கு மிகவும் பிடித்த விசயமாக மாறிவிட்டது. ஏற்கெனவே சொன்னது மாதிரி இரண்டு பஸ் மாறி வேலைக்குப் போவேன். ஏறி உட்கார இடம் கிடைத்தால் போதும். ஒரு சுற்று முடித்துவிடுவேன்.
இதை அனுபவித்தால் உணர முடியும். அவ்வளவு இனிமை நிறைந்தது. இன்னொருவரின் அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.
உங்களிடம் பகிர்ந்து கொண்டதினால் எனது மகிழ்வு இரட்டிப்பு ஆனது உண்மையே. நன்றி.
லதா,
திருமங்கலம், மதுரை.