வாக்னர் குறித்த ஓர் இசை– தத்துவ வகுப்பு தமிழில் நிகழ்வது அரிய விஷயம். அனேகமாக அப்படி ஒரு நிகழ்ச்சி இதற்கு முன் தமிழில் நிகழ்ந்ததில்லை என நினைக்கிறேன். முக்கியமான முன்னெடுப்பு. அஜிதனுக்கும், முழுமையறிவு அமைப்புக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் வாக்னர் பற்றி அறிய ஆரம்பித்தது 1990 நார்வேயில் குடியேறியபோதுதான். எனக்கு இசையார்வம் உண்டு. அதை விடவேண்டாமே என ஒரு பயிற்சிக்குப் போனேன். அங்கேதான் அறிமுகம். ஆனால் வாக்னருக்குள் நுழைவது அவ்வளவு எளிமையானது அல்ல என்று அவரை அறியத்தொடங்கியபோதுதான் உணர்ந்தேன். வாக்னரின் உலகம் இன்றைக்கு வரைக்கும் எனக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
வாக்னருக்கு பல உள்ளோட்டங்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது. வாக்னர் ஒரு உலகக் கலைஞர் அல்ல. அவர் ஒரு ஜெர்மானியத் தேசியக்கலைஞர். ஜெர்மானியப் பண்பாட்டுடன் பிரிக்கமுடியாதபடி இணைந்தவர். ஜெர்மானிய மனநிலை, ஜெர்மானிய அழகியல் ஆகியவற்றுடனும் ஜெர்மானிய தத்துவத்துடனும் நெருக்கமான உறவு இருந்தாலொழிய அவரை நம்மால் அணுகமுடியாது. அதற்கு நாம் புலம்பெயர்ந்து வாழும் சூழலில் உடனடியாக வாய்ப்பு இல்லை. நாம் ஒட்டுமொத்தமாக அறியவேண்டும். நிறைய உழைப்பைச் செலுத்தியாகவேண்டும்.
வாக்னரில் ஐரோப்பியப் பண்பாட்டில் உள்ளே ஆழத்திலுள்ள அவர்களின் பழங்கால தொன்மங்களும் நம்பிக்கைகளும் உள்ளன. அவருடய இசையில் ஐரோப்பியச் செவ்வியலிசையும் கூடுதலாக புதியதாக அதில் இணைந்துகொண்ட பல்வேறு கூறுகளும் உள்ளன. அவர் ஐரோப்பாவின் காவியமரபிலே வருபவர். எனக்கு வாக்னரை அறிமுகம் செய்தவர் பின்னிஷ் காவியமான கலேவலாவைக்கூட வாக்னரை புரிந்துகொள்ள பயன்படுத்தலாம் என்று சொன்னார்.
இத்தனை நுணுக்கமானதும் இன்னொரு பண்பாட்டின் உச்சமாக கருதப்படுவதுமான ஒரு கலைஞரை சம்பந்தமே இல்லாத சூழலில் இருந்துகொண்டு அறியமுயல்வதும், சேர்ந்து அமர்ந்து கற்பதும் ஆச்சரியமானவை. ஐரோப்பாவில்கூட மிகச்சிறிய வட்டத்திற்குள்தான் வாகனர் கற்கப்படுகிறார். ஏனென்றால் அவரை கற்கவேண்டுமென்றால் ஐரோப்பிய இசை, தொன்மம், காவியங்கள் எல்லாமே கற்கவேண்டும். அதற்கு இன்றைய வாழ்க்கைமுறை ஒத்துழைப்பதில்லை. இந்தியாவிலே இப்படி நிகழ்வதென்பது மிக அருமையான ஒரு விஷயம். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
க.செல்வநாயகம்