இன்றைக்கு சீமான் பேசும் தமிழ்த்தேசியம் ஒரு முக்கியமான அரசியல் தரப்பாக மாறியிருக்கிறது. அதை நம்பி தீவிரமாக உள்ளே செல்லும் ஒரு பெரிய இளைஞர்கூட்டமும் உருவாகியுள்ளது. சீமானுக்கு அரசியலில் உண்மையில் என்ன இடம் என்பது நம்மால் இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை என்பதே உண்மை.
சீமான் நேரடியாக அரசியலில் பத்து சதம் வாக்குகளைக்கூட வாங்கவில்லை. ஒரு பஞ்சாயத்துத்தேர்தலில்கூட ஜெயிக்கவுமில்லை. ஆனால் அவருடைய உண்மையான இடம் என்பது பிற அரசியல்கட்சிகளில் அவர் அழுத்தம் அளித்திருப்பதில்தான் உள்ளது. சீமான் பேசும் தீவிர தமிழ்த்தேசியத்தை அவரைவிட தீவிரமாக திமுக பேசியாகவேண்டியிருக்கிறது.
இந்தவகையான மொழிவழித்தேசியம், பண்பாட்டுத்தேசியம் எல்லாம் கம்யூனிஸ்டுக்கொள்கைகளின்படி நசிவுவாதம். ஆனால் இன்றைக்கு கம்யூனிஸ்டு எம்பி சு.வெங்கடேசன் பேசுவது சீமானைவிட தீவிரமான தமிழ்த்தேசியத்தைத்தானே.
சீமானால் தீவிரமாகப் பாதிக்கப்படாத எந்த அரசியல் தரப்பும் இன்றைக்கு இல்லை. இங்கே உள்ள இன்னொரு அரசியல்கொள்கை என்றால் இந்துத்துவம். ஆனால் அவர்கள்கூட சீமான் அரசியலைத்தான் பேசவேண்டியுள்ளது. இஸ்லாமிய அரசியல்கூட சீமானைப்போலத்தான் பேசப்படுகிறது.
சீமான் மட்டும்தான் இன்றைக்கு அரசியலைத் தீர்மானிக்கிறார் என்றுதான் நான் சொல்வேன். ஏனென்றால் இன்றைக்குள்ள உண்மையான அரசியல் சார்ந்த கருத்துத்தரப்பு அவர்தான். இன்றைய சூழலில் தமிழ்ப்பெருமிதம் பற்றி சீமான் முன்வைப்பது அவசியமாக உள்ளது இதனால்தான்.
தமிழ்ப்பெருமிதம் பேசுபவர்களுக்கு தமிழ் வரலாறும், பண்பாடும் தெரியுமா என்று கேட்கிறீர்கள். தெரியாமல் வளர்ந்துள்ளனர் என்பதுதான் உண்மை. தெரியப்படுத்தவே தமிழ்த்தேசிய அரசியல் முயற்சி செய்கிறது. தமிழ்ப்பெருமிதம் இருந்தால் தமிழர்களின் வெற்றிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவரும்.
தமிழர்களின் பண்பாட்டுத்தள வெற்றிகளைப்பற்றிய உங்கள் உரை அந்தவகையிலே முக்கியமான ஒரு பேச்சு. சுருக்கமாக அனைத்தையுமே சொல்லிவிட்டீர்கள். நாம் மிகைப்படுத்தக்கூடாது, எது உண்மையோ அதைச் சொல்லவேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
அரசியல்மேடைகளில் சிலசமயம் மிகைப்படுத்தல் நிகழும். ஆனால் தமிழ்த்தேசியர்கள் மிகைப்படுத்துவதில்லை. மிகைப்படுத்துபவர்கள் எவர் என்றால் தமிழ்த்தேசியத்தை தோற்கடிக்கவேண்டும், அதைவிடக்கூடுதலாக சொல்லவேண்டும் என்று நினைக்கும் மற்றத்தரப்பினர்தான்.
இரா. கவியமுதன்