பகுத்தறிவு, பெரியார், தமிழ் உள்ளம்

அன்புள்ள ஜெயமோகன்,

நான் என் வகுப்புகளில் மீண்டும் மீண்டும் சொல்லும் விஷயம் ஒன்றுதான். பகுத்தறிவு என்பது அறிவியல்பார்வை. அது வெளிப்படையான ஆதாரங்கள், அதை முன்வைக்கும் தர்க்கங்கள் ஆகியவற்றைச் சார்ந்த ஒன்று. அவை இல்லை என்றால் அது அறிவியல் அல்ல. அந்த ஆதாரங்கள் நம் தரப்பை ஆதரித்தாலும் சரி எதிர்த்தரப்புக்குச் சாதகமாக இருந்தாலும் சரி அவற்றுக்கு ஒரே மதிப்புதான். 

ஆகவே எதிர்த்தரப்பை கேட்டதும் கொந்தளிப்பவன் பகுத்தறிவுவாதி அல்ல. எதிர்த்தரப்பை வசைபாடுபவன், இழிவுசெய்பவன் பகுத்தறிவுவாதி அல்ல. பகுத்தறிவு பேசுபவனிடம் பற்று இருக்காது. மதம், இனம், மொழி, நாடு என்று எந்தப் பற்றை முன்வைத்தாலும் அது பகுத்தறிவு அல்ல.

ஆனால் இங்கே பெரியார்பக்தர்கள்தான் பகுத்தறிவு என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். மதவெறியர்களின் மொழிதான் அவர்களிடமும் உள்ளது. அறிவியல்மனப்பான்மைக்கு நேர் எதிரான சக்தி அவர்கள்தான்.  ஒரு பகுத்தறிவுவாதி தன் தர்ப்பைத்தான் இன்னும் அறிவியல்பூர்வமாக அணுகுவான். ஏனென்றால் அதுதான் உண்மையின்மேல் நின்றாகவேண்டும். அதுதான் இன்னொருவரின் நம்பிக்கையை கேள்விகேட்கும் தகுதியை வழங்குகிறது.

இங்கே பெரியாரின் வைக்கம் பங்களிப்பு உண்மையில் என்ன என்றுகேட்டால் வசைபாடுகிறார்கள். கதைகளை உருவாக்குகிறார்கள். ஒரு பகுத்தறிவுவாதிதான் தமிழ்தான் உலகத்தின் தொன்மையான மொழி என்று சொன்னால் அதற்கு முதலில் ஆதாரம் கேட்கவேண்டும். கீழடி அறிவியல்பூர்வமாகத்தான் ஆய்வுசெய்யப்பட்டுள்ளதா என்று அவன் தானே பார்க்கவேண்டும். இரும்பு தமிழகத்திலேதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கேட்டால் அறிவியல் ஆதாரங்கள் கொண்டுவா என்று அவன் தானே சொல்லவேண்டும். ஆனால் சொல்ல மாட்டார்கள். வடக்கர்களை திட்டுவார்கள். தங்களை புகழ்ந்துகொள்வார்கள்.

தமிழ்நாட்டில் அழிந்துவிட்ட ஒரு அறிவு என்றால் அது பகுத்தறிவு அல்லது அறிவியல் மனப்பான்மைதான். அதை ஆழமாகச் சொல்லியுள்ளீர்.

தங்க. ஞானசேகரம் 

முந்தைய கட்டுரைஆலயக்கலை அனைவருக்கும்…