ஆலயக்கலை அனைவருக்கும்…

ஆசிரியருக்கு,

எனக்கு பதினைந்து வயதாக இருக்கும்போது கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சென்றிருந்தேன். எனது சகோதரி அங்கிருந்த ஒரு ஓவியத்தை கையால் மறைத்தபோது யானை காட்சியளித்தது. கையை எடுத்துவிட்டு அதே ஓவியத்தின் கீழ்பகுதியில் மறைத்தபோது குதிரை காட்சியாகியது.

  2016 கொல்லிமலையில் நடந்த புது வாசகர் சந்திப்பின்போது நீங்களும்  ,ஈரோடு கிருஷ்ணனும் அங்கே தரையில் இருந்த கற்சிலையை பார்த்துஇது ஆறாம் நூற்றாண்டை சார்ந்ததுஎன சொன்னீர்கள் 

   திருவாட்டார் கோயிலுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தபோது.நண்பர் ராஜமாணிக்கம் அங்கிருந்த சிலையை கிருஷ்ணன் எனவும் அர்ஜுனன் எனவும் அடையாளம் காட்டினார். அதை அறிந்து கொள்ளும் அறிவு எனக்கு இல்லையே எனும் குறை இருந்தது.

      எழுத்தாளர் ஜெயமோகனின் முழுமையறிவு வகுப்புகளில் ஆலயக்கலை வகுப்பை இந்தியாவின் சிறந்த ஆசிரியர் ஜெயக்குமார் நடத்த துவங்கியதும் நண்பர்கள் பலரும் அதில் கற்று அவருடனே அஜந்தா,எல்லோராவிற்கு பயணம் செய்து அவற்றை என்னுடன் பகிர்ந்தபோது நானும் ஆலயக்கலை வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென்ற ஆர்வம் அதிகமானது.

 இம்முறை விடுமுறையில் வந்ததும் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் கடந்த வாரம் வெள்ளிமலையில் நடந்த வகுப்பில் கலந்து கொண்டேன்.ஆசிரியர் ஜெயக்குமார் சில்பம்,மற்றும் ஆலயங்களின் அடிப்படைகளை தெளிவாக படங்களுடன் விளக்கினார். வாஸ்து சாஸ்திரம்,சில்ப சாஸ்திரம் ஆகம சாஸ்திரம் என துவங்கி இரண்டரை நாள் வகுப்பில் நகைச்சுவையுடன் மாணவர்களை கண்டித்து வகுப்புக்கு வெளியே செல்ல விடாமல் ஒரு ஆலயத்தின் அடிப்படைகளை மனதில் பதிய செய்து பின்னர் சில ஆலயங்கள் மற்றும் சிற்பங்களை காட்டி எங்களிடமே கேட்டு பயிற்சியளித்தார்.

   நமது பலன் நம்மை  சுற்றியிருக்கும் ஆலயங்கள்தான்.கற்றதை மேம்படுத்தி கொள்ள அருகிலிருக்கும் ஆலயங்களுக்கு செல்வதுதான் வழி.

    வகுப்பு முடிந்து முத்து அவர்களுடன் காரில் வரும்போது இரவுணவுக்காக நின்ற உணவு விடுதியின் முன் இருந்த விநாயகர் சிலையின் ஹஸ்தம் என்ன என்று அடையாளம் கண்டு கொண்டோம்.

  உப பீடம்,ஆதிஷ்டானம்,பிட்டி ப்ரஸ்தாரம்,சாலை,கூடு,க்ரீவம்,சிகரம்,கலசம் என முதல் முறையாக காதில் விழுந்த வார்த்தைகள். ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ளவேண்டிய அடிப்படையான விசயங்கள் இவ்வகுப்பில் எனக்கு கிடைத்தது. இதை பயில்வது மூலம் ஆன்மீகமாக நான் அடுத்த கட்டத்திற்கு நகர்வது உறுதி என்பது தெரிகிறது என ஆசிரியர் ஜெயக்குமாரிடம் சொன்னேன்.

   முழுமையறிவு கல்விநிலையம் மூலம் இதை சாத்தியமாக்கிய ஆசிரியர் ஜெயமோகனுக்கும்,வெள்ளிமலையில் தங்குமிட உணவு ஏற்பாடுகளை செய்து தந்த அந்தியூர் மணி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 ஷாகுல் ஹமீது,

முந்தைய கட்டுரைசமூகவலைத்தளங்களின் நஞ்சு
அடுத்த கட்டுரைபகுத்தறிவு, பெரியார், தமிழ் உள்ளம்