
அன்புள்ள ஜெ!
உங்கள் முழுமையறிவு காணொளிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அருமையாகவும் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் கூறி வருகிறீர்கள். படிப்பதன் அவசியத்தையும் பற்றிய காணொளியாகட்டும், சமஸ்க்ரிதம் மற்றும் தமிழ் வெறியர்கள் பற்றிய காணொளியாகட்டும், உங்கள் கருத்துக்கள் அருமை.
நீண்ட நாளாக எனக்கு இந்தக் கேள்வி மனதில் இருக்கிறது.
இன்றைய தொழில் நுட்பத்த்தில் முன்னேற்றம் அடைந்த நவீன காலத்தில் கூட நம்மால் (தமிழர்கள் மட்டுமில்லை) ஒரு சிறந்த பாலத்தையோ ஒரு திட்டமிட்ட நகரத்தையோ அல்லது ஒரு சமூக ஒழுங்கையோ செய்ய முடியாத நாம், எப்படி மதுரை , தஞ்சை மற்றும் திருஅரங்கம் போன்ற கோவில்களை கட்ட முடிந்தது?நாம் அப்படி என்ன இழந்து விட்டோம் ? (சில நேரங்களில் நாம் தான் அவற்றை எல்லாம் கட்டினோமா என்று கூட எனக்குத் தோன்றும் )
நன்றி ,
ஆஸ்டின் சத்ய நாராயணன் .
அன்புள்ள சத்யா
நான் இதைப்பற்றி விரிவாக ஒரு காணொளியில் பேசுகிறேன். என் சுருக்கமான பதில் இதுவே. நாம் நிலவுடைமைக்கால வரலாறு கொண்டவர்கள். சென்றகாலகட்டத்தில் அந்த நிலவுடைமைக்காலத்தின் அமைப்புகள், ஒழுங்குகள், மனநிலைகள் இருந்தன. நிலவுடைமைக்கால சுரண்டலும், அடிமைத்தனமும் இருந்தது. நாம் நிலவுடைமைக்கால சுரண்டல், அடிமைத்தனத்தை ஒழிக்கும்பொருட்டு அந்த அமைப்புகளை, ஒழுங்குகலை, மனநிலைகளை அழித்தோம். ஆனால் அடுத்த காலகட்டத்தைச் சேர்ந்த நவீன முதலாளித்துவத்திற்குரிய அமைப்புகளை, ஒழுங்குகளை, மனநிலைகளை உருவாக்கிக்கொள்ளவில்லை.ஆகவே நாம் எந்த முறையான அமைப்பும், ஒழுங்கும், சமூகமனநிலைகளும் இல்லாத வெற்றுக்கும்பலாக இருக்கிறோம். இதுதான் நம் பிரச்சினை.
பழங்காலத்தில் தொழில்குழுக்கள் இருந்தன. அவை சாதிகளாகச் செயல்பட்டன. அவற்றுக்கு கறாரான நெறிகளும் பயிற்சிகளும் இருந்தன. ஆகவே சேர்ந்து செயல்பட முடிந்தது. ஊர்க்கட்டுப்பாடு போன்ற பல விஷயங்கள் சமூகத்தின் ஒழுங்கை நிலைநாட்டின. 100 ஆண்டுக்கு முன் ஆற்றில் குப்பையை போடமுடியாது. ஊர்விலக்கு உண்டு. (இன்றும் ‘முன்னேறாத‘ மலைப்பகுதிகளில் அந்த ஊர்க்கட்டுப்பாடு உள்ளது). இன்று ஒருவர் தன் சாக்கடையை ஆற்றில் கலக்கலாம். அவருக்கு மனத்தடை இல்லை. சமூக உணர்வு உருவாகவில்லை. எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சட்டம் மட்டுமெ ஒரே கட்டுப்பாடு. அவர் அதை ஏமாற்றிவிடலாம். ஆகவே நாம் எந்த குடிமையுணர்வும் இல்லாத வெறும் கும்பலாக இருக்கிறோம்.
ஜெ