அன்புள்ள ஜெயமோகன்
தொல்லியல் தடையங்களை தேடி நீங்கள் செல்லும் கட்டுரைகளையும் கடிதங்களையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன் .இப்போது காணொளிகள் வழியாக நீங்கள் அங்கு சென்று தன்னை இயல்பாக தோன்றும் எண்ணங்களை பேசும் காணொளிகளையும் பார்க்கிறேன்.தொல்லியல் தடங்களை தேடி செல்வது என்பது ஆய்வாளர்கள் மட்டுமே செய்யும் ஒரு பணி என்ற எண்ணம் எனக்கு இருந்தது. தொல்லியல் சார்ந்த விஷயங்கள் வழியாக ஆன்மீகமான ஒரு பயணத்தை நிகழ்த்த முடியும் என்று உங்களுடைய பயணங்கள் வழியாக கண்டு கொண்டேன் ,அது எனக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுப்பதாக அமைந்தது.
அண்மையில் புகளூரில் உள்ள குடைவரை ஒன்றுக்கு சென்றேன். சமணர்களின் பழைய குடைவரை. அங்கு அமர்ந்து கண் மூடி தியானித்தபோது நூற்றாண்டுகளை கடந்து எங்கு சென்று ஏதோ ஒன்றை அறிந்து வந்த நிறைவை அடைந்தேன் .அங்கு இருந்தவர்கள் கற்ற கல்வியின் அதிர்வுகள் அனைத்து அங்கு இருப்பது போல் எனக்கு தோன்றியது .நன்றி
உங்களுடைய காணொளிகள் அனைத்துமே மதம் சார்ந்த ஆன்மீகத்திற்கு வெளியே ஒரு மெய்யான ஆன்மிகத்தை முன்வைக்கக் கூடியவையாக அமைந்திருக்கின்றன. அவை அளிக்கும் திறப்புகளுக்காக தனிப்பட்ட முறையில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டி இருக்கிறது. யோகம் தியானம் அனைத்தையும் முற்றிலும் புதிய ஒரு கண்களுடன் பார்க்க வைக்கிறீர்கள். நீங்கள் அத்வைதத்தை கூட ஒரு மதம் கடந்த மெய்ஞானமாக மட்டுமே வைக்கிறீர்கள் இதன் பொருட்டு தமிழகத்தில் நெடுங்கால் நீங்கள் நினைவு கூறப்படுவீர்கள்
எஸ்.சாம்பமூர்த்தி










