
மதிப்பிற்குரிய ஜெயமோகன் சார் அவர்களுக்கு வணக்கம்!
வாழ்நாள் அனுபவத்திலிருந்து வாழும் நாள் வரை அன்றாடத்தின் ஒரு பகுதியாகவே, ஆகும் பறவை பார்த்தல்.
எங்கள் மகனுக்கு ஒன்பது வயது, நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறான். புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, அட்டைப்பெட்டிகளைப் பிரித்து வெட்டி ஏதாவது செய்வது அவன் பொழுதுபோக்கு. கடந்த ஒரு வருடமாக அவன் அதிகமாக பேசியது வகுப்பில் உள்ள தோழர்கள் பலர் வீடியோ கேம் விளையாடுவதைப் பற்றியும் play station வைத்திருப்பதைப் பற்றியும் தான். நாமும் வீடியோ கேம் play station எல்லாம் வாங்க வேண்டும் என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தான்.
இந்த தசரா விடுமுறையில் உனக்கு ஒரு surprise என்று சொல்லி அவனை பறவை பார்த்தல் வகுப்புக்கு அழைத்து வந்தேன். வந்தவுடனேயே புதிய நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். வகுப்பில் ஆர்வமுடன் கலந்து கொண்டான். மற்ற நேரங்களில் நண்பர்களுடன் பேச்சு விளையாட்டு என்று இருந்தான். அங்கிருந்து அவன் அப்பாவுடன் ஃபோனில் பேசும்போது “I m having a life time experience, நீயும் வந்திருக்கலாம்” என்று சொன்னான். என்னிடம் “எனக்கு இங்கே எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு, பேசாம இங்கேயே இருந்துடலாம்” என்றான். நான் புத்தகம் வாங்கப் போகும்போது வெள்ளி நிலம் (அவன் பாஷையில் பனிமனிதன் part 2), வகுப்பில் சார் சொன்ன விசும்பு இருந்தால் கண்டிப்பாக வாங்கச் சொன்னான். யானை டாக்டர் புத்தகமும் சேர்த்து வாங்கினேன்.

ஊர் திரும்பினோம். வழக்கம் போல பள்ளிக்குச் சென்றான். ஒரு வாரம் கழித்து ஒரு நாள் என்னிடம் வந்து “thank you very much அம்மா, நீங்க ஏன் எனக்கு வீடியோ கேம் வாங்கித் தர மாட்டிங்கன்னு இப்போ தெரியுது. என் கிளாஸ்ல எல்லாருக்கும் வீடியோ கேம் விளையாடத் தெரியும், பலர் தனி மொபைல் ஃபோன் play station எல்லாம் வெச்சிருக்காங்க.புத்தகம் படிக்கிறவங்க கூட மூணு பேர் இருக்காங்க, ஆனா யாருக்கும் பறவை பார்த்தல்ன்னா என்னன்னே தெரியல, எனக்கு மட்டும் தான் தெரியும் ” என்று மகிழ்ச்சியோடு சொன்னான்.
அவனுக்காக வகுப்பில் கேள்விப்பட்டிருந்த பறவைகள் எழுத்தாளர் ரோஹன் சக்கரவர்த்தியின் புத்தகங்கள் இரண்டு வாங்கியிருந்தேன். சனி ஞாயிறு விடுமுறையில் படித்து முடித்துவிட்டான். அக்டோபர் 11 – wild birds day அன்று பறவை பார்க்கப் போனோம். நிறைய பறவைகளை சரியாக கண்டுபிடித்து சொன்னான்.இப்போதெல்லாம் காரில் போகும்போது ஃபோன் கேட்பதில்லை, வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகிறான், பறவையை பார்த்து அடையாளம் காண்கிறான். காய்கறிகள் நிறைய போட்டு சாம்பார் வைத்திருந்தால் கூட “ஐ! நித்யவனம் சாம்பார், my favourite” என்று சொல்கிறான். நான் ஒரு பறவையை பார்த்து drongo என்றால், இப்படி சொல்லக்கூடாது, எந்த மாதிரி drongo என்று தெளிவாக அடையாளத்தோடு பெயர் சொல்ல வேண்டும் என்று சொல்கிறான். கடந்த ஒரு மாதமாக வீடியோ கேம் பற்றி பேச்சே இல்லை.

பறவை பார்த்தல் வகுப்புக்கு முன் எனக்கு தெரிந்த பறவைகள் – புறா குருவி காக்கை கருடன் மட்டுமே. ஆனால் பறவை பார்த்தல் வகுப்பிற்கு பின் எங்கள் பகுதியிலேயே 10 – 15 விதமான பறவைகள் இருப்பதை அறிந்துகொண்டேன், ஆச்சரியமாக இருந்தது. மகனுக்கு துணையாகத் தான் வகுப்பில் அமர்ந்தேன். ஆனால் வாய்த்தது வாழ்நாள் அனுபவம் என்று இரண்டாம் வகுப்பிலேயே உணர்ந்தேன். வகுப்பு முடிந்த போது எனக்கும் அங்கிருந்து கிளம்ப மனசே இல்லை. காரணம்,
மூன்றாம் நாள் காலை நடை முடிந்து திரும்பும் வழியில் ஒரு மரத்தின் கிளையில் தெரிந்த நீள வால் பறவை ஒன்றை காட்டி இது என்ன பறவை சார் என்று கேட்க, சார் உடனே அனைவரையும் அமைதியாக கவனிக்கச் சொல்லி இது paradise flycatcher – அரசவால் ஈப்பிடிப்பான் என்று சொல்லி, தன்னுடைய சிலவருட பறவை பார்த்தல் அனுபவத்தில் இப்போது தான் இந்த பறவையை இரண்டாவது முறை பார்ப்பதாகவும் ஒரு பறவையின் தரிசனம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சொன்னார். அதற்கு முந்தைய நாள் வகுப்பில் “you get to watch as long as it lets you” என்று கேட்டது உடனே நினைவுக்கு வந்தது, நெகிழ்ந்து போய்விட்டேன்.
வகுப்பு முடிந்து ஊருக்கு திரும்பிய பின் ஒரு வாரம் தினமும் கவனித்ததில் எங்கள் வீட்டைச் சுற்றியே பல விதமான பறவைகள் உள்ளன என்று தெரிந்து கொண்டேன். வகுப்பில் சார் சொன்னது போல காலையில் முதல் குரல் எழுப்பும் பறவை எது என்று கண்டு கொண்டேன் – எங்கள் பகுதியில் அது சின்னான்( Red vented Bulbul). இப்போதெல்லாம் காலை ஆறு மணி முதல் ஏழரை மணி வரை நான் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் காதுகளை மட்டும் வெளியே வைத்துவிடுகிறேன். ஓசையைப் பொறுத்து இது சின்னான் (Red vented bulbul), இது தையல் சிட்டு (common tailor bird), இது ஊதா தேன்சிட்டு (purple sunbird), இது குயில் (cuckoo) என்று மனதிற்குள் tick போட்டுக்கொள்கிறேன்.
மிகவும் சாதாரணமாக மின்கம்பியின் மீது அமர்ந்திருக்கும் ஒரு சிறிய பறவை தன் ஒற்றை இருப்பின் மூலம் நாம் வானம் சூரியன் காலை/மாலைப்பொழுது இளவெயில் மழை காற்று இனிய கீதம் என்று இயற்கையின் பல பரிமாணங்களோடு இணைவதை நிகழ்த்தி விடுகிறது. பறவைகள் எந்த முன்முடிவும் இல்லாமல் அந்தந்த கணத்தில் வாழ்கின்றன. பறவை பார்த்தலின் போது நாமும் அப்படியே ஆகிவிடுகிறோம் என்று தோன்றுகிறது.
பரபரப்பான நகர வாழ்க்கையிலும் இயற்கையோடு இணைய விரும்புபவர்களுக்கு பறவை பார்த்தல் ஒரு சிறந்த வழி.அதை 3 நாட்களுக்குள் சிறியவர் பெரியவர் அனைவரும் பயிலக்கூடிய வகையில் எளிமையான அதே நேரம் செறிவான, ஆர்வமூட்டும் அமர்வுகள் (sessions), களப்பயிற்சி, வகுப்புகள் முடிந்த பின்னரும் இதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு வழிகாட்டுதல் என பல்வேறு விஷயங்கள் ஒன்றிணைத்து “பறவை பார்த்தல் வகுப்பு” நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
பறவை பார்த்தலை வாழ்நாள் அனுபவத்திலிருந்து வாழும் ஒவ்வொரு நாள்தோறும் அன்றாடத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து செய்யும் அளவுக்கு எங்களுக்கு பயிற்சி அளித்து வழிநடத்திக் கொண்டிருக்கும் விஜயபாரதி சார், ஈஸ்வரமூர்த்தி சார் மற்றும் செல்வி.அன்பரசி ஆகியோருக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கற்றலில் கவனம் குவியும் வண்ணம் மற்ற அனைத்தையும் பார்த்துக்கொண்ட மணி அண்ணன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். குழந்தைகளுக்கு முழுமையறிவோடு ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
இளமதி குறள்முரசு
ஹைதராபாத்.











