காணொளிகளை மறுக்கிறேனா?

Screenshot

அன்புள்ள ஜெ

நீங்கள் காணொளிகள் பற்றி கடுமையான கருத்துக்களை சொல்லி வந்தவர். இணையவழி ஊடகத்தையும் நிராகரித்தவர். இப்போது இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள். இது முரண்பாடா?

ஜான் கிறிஸ்டோ

அன்புள்ள ஜான்,

இலக்கியத்தையும் தத்துவத்தையும் புரிந்து கொள்வதற்கு இன்று எவ்வளவோ வாய்ப்புகளை இணையம் வழங்குகிறது. ஆனால் இணையம் தன்னுடைய பெருக்கத்தால் அதை மறைத்தும் விடுகிறது. எங்கே எதைப் படிக்க வேண்டும் ,எதை தொடர வேண்டும் என்பதை அறியாமல் இணையத்தில் உழல்வதனால் பயனில்லை. அதை ஒரு வகுப்பில் ஓர் ஆசிரியர்தான் சொல்ல வேண்டி இருக்கிறது. அதிலிருந்து ஒருவர் தனக்கான வழிகளை தானே கண்டடைய முடியும்.

இணையத்தில் தொடர்ந்து பயன்படுத்துபவன் என்ற முறையில் என்னுடைய உறுதியான கருத்து ஒன்று உண்டு. காணொளிகள் வழியாக கற்றுக்கொள்ள முடியாது .பெரும்பாலும் மங்கலான ,ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத செய்திகளே  நமக்கு வந்து சேர்கின்றன. அவற்றை நாம் கற்பனையுடன் இணைத்துக் கொள்கிறோம் .பெரும்பாலும் விவாதங்களில் நாம் காணொளியில் அங்கும் இங்கும் கேட்ட தகவல்களை அந்த தருணத்தில் தன்னிச்சையாக இணைத்துக் கொள்கிறோம். சிந்தனையை உருவாக்கிக் கொண்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அவற்றுக்கு எந்த மதிப்பும் கிடையாது .அவை நம்முடைய கற்பனை மட்டுமே. மிகச்சிறிய வட்டத்திற்குள் நண்பர்களிடம் பேசுவதற்கு மட்டுமே அவை உதவும். விரிவாக எதையும் அறியவோ ஆராயவோ முடியாது.

ஆகவே இன்று நமக்கு தேவையானது முதலில் ஒரு சரியான வகுப்பு, சரியான ஆசிரியர். அங்கிருந்து தொடங்கி மேலே இணையத்தை பயன்படுத்தி தொடர்ந்து படுத்தி செல்லலாம் .அப்போது கூட படிக்க வேண்டுமே ஒழிய் காணொளிகளை நம்பக்கூடாது. காணொளியுன் பயன் அல்லது இடம் என்பது ஓர் ஆசிரியரை நோக்கி மாணவர்களை இட்டு வருவது மட்டும் தான். ஏனெனில் இளைஞர்கள் அதிகம் காணொளிகள் தான் பார்க்கிறார்கள்.இன்றைய ஊடகங்களும் அச்சு வடிவ பதிவுகளை எங்கும் கொண்டு சேர்ப்பதில்லை. யூடியூபிலும் சரி பேஸ்புக்கிலும் சரி காணொளிகள் மட்டுமே அனைவருக்கும் சென்று சேர்கின்றன. ஆகவே காணொளிகளை ஒரு தொடக்கத்திற்கான தூண்டிலாக அல்லது வலையாக ப்யன்படுத்திக் கொள்ளலாம். அதையே செய்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைவாதாபியின் சிற்பங்கள்
அடுத்த கட்டுரைசைவம், ஒரு கடிதம்