குழம்பிய இந்துவுக்கு ஒரு கடிதம்

இந்துஞானம் அடிப்படைக் கேள்விகள் வாங்க

 

அன்புள்ள நண்பருக்கு,

நீங்கள் எழுப்பி இருக்கும் விரிவான கேள்விகளை பார்த்தேன். அவை இன்று நவீன வாழ்க்கையின் அர்த்தமின்மை அலைக்கழிப்பு ஆகியவற்றில் சிக்கில் அவற்றில் இருந்து மீட்புக்காக இந்து மதத்தை நாடும் பெரும்பாலும் அனைவருக்குமே இருக்கும் சந்தேகங்களும் தடுமாற்றங்களும் மட்டுமே .

இந்த சந்தேகங்களும் தடுமாற்றங்களும் நம் சூழலில் இருந்து உற்பத்தி ஆகின்றன. ஒன்று, நமது சூழலில் நிகழும் அரசியல் மற்றும் சமூகவியல் சார்ந்த உரையாடல் இந்து மதத்தைப் பற்றிய மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சித்திரத்தை நமக்கு அளிக்கிறது .முற்றிலும் எதிர்மறையான ஒரு சித்திரம் அது. தமிழக அரசியல் என்பது அடிப்படையில் இந்து எதிர்ப்பு தன்மை கொண்டதுதான் .

அச்சூழலில்தான் நாம் நமது இளமைப் பருவத்தை கழிக்கிறோம், அதனுடாகவே நமது உள்ளம் வளர்ந்து வருகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த அரசியலும் சமூகவியலும் நமது வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கோ, நமது உள்ளத்தை வகுத்துக் கொள்வதற்கொ, நமது உணர்வுகளை ஒருங்கிணைத்து நம்மை ஒரு சரியான வாழ்க்கையை நோக்கி கொண்டு செல்வதற்கோ எந்த வகையிலும் உதவுவதில்லை என்றும்; அவை வெறும் அதிகாரப் பூசலுடன் மட்டுமே சம்பந்தப்பட்டவை என்றும் நமக்கு தெரிகிறது. அந்நிலையில் தான் நாம் மதத்தை நோக்கி வருகிறோம்.

மறுபக்கம் மதத்தின் சார்பில் இருப்பவர்கள் மேலும் பல மடங்கு அதை எளிமைப்படுத்த நமக்கு அளிக்கிறார்கள். வெறும் சடங்குகள், சம்பிரதாயங்கள், பரிகார பூஜைகள் ஆகிவை மட்டுமே மதமாக நாம் சூழலில் இருந்து நமக்கு கிடைக்கின்றன. சராசரித் தமிழன் இந்த இரண்டு எல்லைகளுக்கும் நல்ல நடுவே அலைக்கழிக்க விதிக்கப்பட்டிருக்கிறான்.

ஆகவே அவளுக்கு இரு பக்கத்தில் இருந்தும் ஏராளமான கேள்விகள் வருகின்றன. எளிய நாத்திகத்திற்கும் செல்ல முடியவில்லை, எளிய ஆத்திகத்திற்கும் செல்ல முடியவில்லை. இந்த சிக்கல்களை உங்களுடைய அத்தனை கேள்விகளும் காண்கிறேன். ஒவ்வொரு கேள்விக்கும் என்னால் விரிவாக விடை சொல்ல முடியும். இவ்வாறு என்னிடம் வெவ்வேறு காலகட்டங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் அனைத்தையும் தொகுத்து நான் ஒரு நூலாக ஆக்கியிருக்கிறேன். இந்து ஞானம் அடிப்படைக் கேள்விகள்

அந்த நூலை நீங்கள் படித்துப் பார்க்கலாம் .அது உங்களுக்கு அளிக்கும் தெளிவிலிருந்து நீங்கள் மேற்கொண்டு யோசித்துச் செல்லலாம். நாங்கள் தொடர்ச்சியாக இந்திய மெய்யியல் சார்ந்தும், ஆலய தலை சார்ந்தும் ,சைவம் மற்றும் வைணவம் சார்ந்தும் வகுப்புகளை நடத்தி வருகிறோம்.  அந்த வகுப்புகளுக்கு நீங்கள் வந்து கலந்து கொள்ளலாம் .அவை உங்களுக்கு தெளிவையும் மேலும் செல்வதற்கான பாதைச் சுட்டியையும் அளிக்கும். நன்றி.

ஜெ

முந்தைய கட்டுரைவைணவ இலக்கிய அறிமுக வகுப்புகள்
அடுத்த கட்டுரைவேதாந்தம் ஒரு கடிதம்