இந்திய ஞானத்துள் நுழைதல்

இந்தியஞானம் வாங்க

அன்புள்ள ஜெ

நான் ஒரு இந்துவாக பிறந்து ,அதன் ஆச்சாரங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டவன். இன்று வரைக்கும் ஒரு இந்து நம்பிக்கையாளனாகவே தொடர்கிறேன். கோயில்களுக்கு செல்லும் வழக்கம் உண்டு .சைவ மதநம்பிக்கையும் அதில் பற்றும் உண்டு. நான் ஒரு சைவன் என்றே சொல்லிக்கொள்வேன்.

உங்களுடைய இந்திய ஞானம் என்ற நூலை நான் கோவை புத்தக கண்காட்சியில் வாங்க நேர்ந்தது. என்னுடைய நண்பர் ஒரு புத்தகம் வாங்கினார் .நானும் ஒன்று வாங்குவோம் என்று சுற்றிப் பார்த்தபோது இந்த புத்தகம் கண்ணில் பட்டது .இதன் அட்டை படைத்தால் கவரப்பட்டு இதை வாங்கினேன். எனக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கிடையாது ,அது தேவையில்லை என்று எண்ணம் இருந்தது. என்னுடைய தொழில், குடும்பம், மற்றும் ஆன்மீகமான வாழ்க்கை ஆகியவையே போதுமானவை என்று எண்ணம் இருந்தது. ஆகவே அந்த புத்தகத்தை கஷ்டப்பட்டுதான் படித்தேன். பாதிக்கும் மேலேதான்  விரைவாக படிக்கும் பழக்கம் வந்தது.

அதைப் படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வு என்பது நான் எதை பக்தி என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ அது பக்தி அல்ல என்பதுதான். அது ஒரு சடங்கிதான். பக்தி என்பது அறிவில் இருந்தே வரமுடியும். ஒருவரை தெரிந்து அவர் மேல் பிரியம் கொள்வதுபோன்றது அது. தெரியாமல் உருவாவது ஒரு பற்று மட்டும்தான்.

இந்து மதத்திலேயே மிகப்பெரிய ஒரு ஞான மார்க்கம் உண்டு என்பதும், அதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை என்பதும் தெரிந்தது. நான் ஒரு பக்தி மார்க்கி, ஆகவே எனக்கு ஞான தேவை இல்லை என்று என்னை சமாதானம் செய்து கொள்ள முயன்றேன். ஆனால் என் பக்தியை பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. கோவில்களின் வரலாறு ,கலை எதைப் பற்றியும் அறிமுகமே இல்லை. சும்மாவே கோவிலுக்குச் சென்று கும்பிட்டு திரும்பி வருவதைத்தான் செய்து கொண்டிருந்தேன். அதன் வழியாக நான் ஒருபோதும் ஒரு நல்ல பக்தனாகக் கூட ஆக முடியாது. அதை இந்த நூலை வாசித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்.

ஏற்கனவே எனக்கு அந்த ஏமாற்றம் இருந்து கொண்டேதான் இருந்தது. ஒவ்வொரு முறை கோவிலுக்குச் சென்று வரும் போது ஒரு பரவசம் வரும். வெளியே வந்ததுமே உடனடியாக லவ்கீகமான கவலைகளும் வந்து மொய்ப்பது வழக்கம். கோவிலுக்குள் போகும்போது மட்டுமே வரும் ஒரு உயர் நிலைக்காக மட்டும்தான் கோவிலுக்குள் சென்று கொண்டிருந்தேன். ஏனென்றால் கோயில் எனக்கு புரியவில்லை. எழுதப் படிக்கத் தெரியாத ஒருவன் புத்தகத்தை கையில் எடுப்பது போலத்தான் நான் கோயில்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதை உரையில் சொன்னீர்கள்.

நான் அவற்றின் கலையையும் அவற்றின் குறியீடுகளையும் தெரிந்து கொள்ளத் தொடங்கிய போது பக்தியிலேயே மிகத் தீவிரமாக என்னால் செல்ல முடிந்தது என்று உணர்ந்தேன். சைவத்தையும் வேதாந்தத்தையும் அறிய அறிய என் பக்தி இன்னும் தர்க்கபூர்வமானதாகவும் ஆழமானதாகவும் ஆகியது. என்  பக்திக்கு தடையாக இருந்த்து ஏராளமான சிறிய சந்தேகங்கள்தான். எனக்கு நிறைய சந்தேகங்கள் இருந்ததனால் நான் பக்தி சார்ந்த எந்த விவாதங்களிலும் முன்பு ஈடுபடுவதில்லை. யாராவது என்  பக்தியை கேள்வி கேட்டால் கூட மழுப்பலாக ஏதாவது சொல்லி நகர்ந்து விடுவேன் .பக்தி இல்லாதவரிடம் பேசக்கூடாது என்பதாக ஒரு சமாதானம் சொல்லிக் கொள்வேன். இப்போதும் நான் விவாதிப்பதில்லை. ஆனால் எவரேனும் ஏதேனும் கேட்டால சுருக்கமான தெளிவான ஒரு பதிலைச் சொல்ல என்னால் முடிகிறது. காரணம் நான் வாசித்த உங்கள் நூல்கள்.

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் நூலைப் படிப்பதற்கு நான் நீங்கள் நடத்தும் இந்திய தத்துவ அறிமுக வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று என் நண்பர்கள் சொன்னார்கள் .நீங்கள் அந்த வகுப்பை தொடங்கும் காலுக்காக காத்திருக்கிறேன்.

மா. கார்த்திக்ராஜ்

முந்தைய கட்டுரைகுழந்தைகளும் தாவரங்களும் நானும்- லோகமாதேவி
அடுத்த கட்டுரைவைணவ இலக்கிய அறிமுக வகுப்புகள்