நவீன உள்ளத்திற்கு கீதை

கீதையை அறிதல் வாங்க

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய ஹிந்து மதம் சார்ந்த நூல்களை வாசித்துக் கொண்டு இருக்கிறேன் .இந்த நூல்களில் பல நூல்களை தனித்தனி கட்டுரைகளாக எழுதி இருக்கிறீர்கள். ந்த கட்டுரைகளுக்கு ஒரு பொருத்தப்பாடு உருவாவது என்பது அவை உண்மையான கேள்விகளிலிருந்தும், இங்கே நிகழ்ந்த வெவ்வேறு விவாதங்களில் இருந்தும் உருவாகி வந்தவை என்பதனால்தான். ஆனால் ஒட்டுமொத்தமான ஒரு நூலாக எழுதப்படும் போதுதான் ஒரு குறிப்பிட்ட பார்வை அழுத்தம் கொள்கிறது என்று நான் நினைக்கிறேன்.

அவ்வகையில் சிறிய நூலாக இருந்தாலும் உங்களுடைய கீதை அறிமுக நூல் மிக முக்கியமானது .அது ஒரு உரையாக ஆக்கப்பட்டமையால் மிகுந்த வேகத்துடன் வாசித்து முடிக்க முடிந்தது. பகவத் கீதையின் வரலாற்றுப் பின்புலம், இந்திய தத்துவ சிந்தனையில் அதன் இடம், உலகசிந்தனையில் அதற்கு இருக்கும் இடம், அதன் அழகியல் ,அதன் தத்துவ உள்ளடக்கம் ஆக எல்லாவற்றைப் பற்றியும் தொட்டு சென்ற மிகப்பெரிய ஒரு உரை .

அந்த உரையுடன் ஒருவர் முரண்படக்கூடிய இடங்கள் இருக்கும் .ஏனெனில் இங்கே பகவத் கீதை என்பது ஒவ்வொரு மதத்தை சார்ந்தும்தான் அணுகப்படுகிறது. ஒவ்வொரு மதத்தினருக்கும் பகவத் கீதை சார்ந்த குறிப்பிடத் தகுந்த பார்வை உள்ளது .ஆனால் ஒரு தொடக்கம் என்ற நிலையில் இந்த நூல் பகவத் கீதையை வெறுமே பக்தி சார்ந்து அணுகாமல் வரலாறு சார்ந்தும் தத்துவார்த்தமான தர்க்கம் சார்ந்து அணுகுவதற்கான ஓர் அடிப்படையை உருவாக்கி அளிக்கிறது என்று தோன்றுகிறது .இந்த நூலின் வழியாக சென்று பகவத் கீதை அடையும் ஒருவர் தன்னுடைய மதத்திற்கு உகந்த ஒரு பார்வையை அதிலிருந்து உருவாக்கிக் கொண்டாலும் கூட தர்க்கபூர்வமான ஒரு அணுகுமுறையை கற்றுக்கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.

பகவத் கீதை மகாபாரதத்தில் ஓர் இடைச்செருகல்தான் என்ற பிற்கால வரலாற்று ஆசிரியர்களின் கருத்துக்களில் இருந்தும், பகவத்கீதை என்பது கடவுளான கிருஷ்ணராலேயே பலயிரம் பலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நேரடியாகச் சொல்லப்பட்டது என்ற மதவாதிகளின் நம்பிக்கையில் இருந்தும் இணையான தூரத்தை கடைப்பிடித்து அதன் வரலாற்றுத் தன்மையை நீங்கள் சொல்லி இருப்பது சிறப்பு. கீதையின் உள்ளடக்கம் பற்றி ஏராளமான புத்தகங்கள் இங்கே எழுதப்பட்டுள்ளன. கீதையை எப்படி ஒரு நவீன மனிதன் அணுகுவது என்பதற்கான ஒரு நூல் தான் இந்திய சூழலில் தமிழுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. அத்தகைய ஒரு நூலாக இந்த கீதையை அறிதல் நூலை கொள்ள முடியும்.

இந்த உரையை நேரில் கேட்டேன் என்றால் மிகவும் மகிழ்ந்திருப்பேன். ஆனால் நான் வாழ்வது தமிழகத்தை விட்டு மிக வெளியே. ஆனால் உரையை அச்சில் படித்த போது நிதானமாக பலமுறை திரும்பத் திரும்ப கேட்டு அறிந்த உணர்வை அடைந்தேன்.

தமிழில் கீதை பற்றி பாரதியாரிலிருந்து கிரிதாரி பிரசாத் வரைக்கும் வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கோணத்தில் பேசி இருந்தாலும் கூட இந்த நூல் ஏன் முக்கியமானது என்றால் இது இன்றைய நவீனச் சிந்தனைகளின் பின்புலத்திலிருந்து சொல்லப்படுகிறது என்பதுதான். ஆகவே நவீன இளைஞர்கள் ஒரு இதை எளிதாக புரிந்து கொள்ளவும் அவர்களுக்கான தனிப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை கண்டடைப்பதற்கான ஒரு பாதையை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.

அத்துடன் இது தமிழின் தலைசிறந்த எழுத்தாளரால் நிகழ்த்தப்பட்ட ஓர் உரை எனும் போது உவமைகளும் சொல்லழகுக்குகளும் நிறைந்து ஒரு மொழியாளுமை கொண்ட படைப்பாகவே இருக்கிறது. படிப்பதற்கான ஒரு அழகிய அனுபவத்தை அளிக்கிறது. கீதை பற்றிய வேறு உரைகள், நூல்கள் ஆகியவற்றின் முக்கியமான சிக்கலே அவற்றின் மொழிநடை மிகப் பழமையானதாகவும் சம்பிரதாயமானதாகவும் இருக்கும் என்பதுதான். இந்த நூலின் நவீன மொழி நடைதான் எனக்கு இதை மிக நெருக்கமானதாக ஆக்குகிறது.

வாழ்த்துக்களுடன்

ஜெயராஜன்

முந்தைய கட்டுரைசங்கரரின் சித்திரம்