
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய பயிற்சி வகுப்புகளைப் பற்றிய செய்திகளை தொடர்ந்து முகநூல் வழியாக பெற்றுக் கொண்டிருக்கிறேன் .எனக்கு உண்மையிலேயே அந்த நிகழ்ச்சிகளில் ஆர்வமும் உள்ளது. நான் ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை சபரிமலை ஐயப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர் .ஆகவேதான் எனக்கு மணிகண்டன் என்று பெயர் வைத்தார் .ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த எனக்கு இந்து மதத்தின் ஆலயங்கள் ,வழிபாட்டு முறைகள், அதன் அமைப்பு எதிலும் இடம் இல்லை என்ற எண்ணம்தான் உருவாகியது. எங்கு சென்றாலும் அங்கே ‘நீ யார்?’ என்ற கேள்விதான் எழுந்து நின்றது. ஆகவே எல்லாவற்றிலிருந்தும் நான் ஒதுங்கிக் கொண்டேன்.
குறைந்த காலம் தீவிரமாக இந்து எதிர்ப்பு பேசும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் அங்கும் ‘தாழ்த்தப்பட்ட தோழர்’ என்ற வகையான ஒரு கீழ்நோக்கிய பார்வை இருப்பதை உணர்ந்ததும் அதிலிருந்து விலகிக் கொண்டேன். இப்போது எந்த நடவடிக்கைகளும் ஈடுபடுவதில்லை .எனக்கு அரசியல் நடவடிக்கைகள் போதவில்லை. அதற்கு அப்பால் தத்துவம் ஆன்மீகம் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளது .ஆனால் அதற்கான இடம் எதுவும் இல்லை என்ற எண்ணமே எனக்கு ஏற்படுகிறது.
உங்கள் நிறுவனத்தில் தலித்துகளுக்கு இடம் உள்ளதா ?அங்கே எப்படி வரவேற்கப்படுகிறார்கள்? அத்துடன் நான் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உண்டு.இந்து பண்பாடு, இந்து ஆன்மீகம் பற்றி பேசும் நீங்கள் இந்து மதம் உருவாக்கிய சாதி அமைப்பு பற்றியும் அதில் உள்ள சுருண்டல் பட்டு ஒடுக்குமுறைகளை பற்றியும் என்ன நினைக்கிறீர்கள் ?அதை பற்றி ஏதாவது பேசி இருக்கிறீர்களா?
மணி
அன்புள்ள மணிகண்டன்,
எங்களுடைய செயல்பாடுகளில் ஜாதி ஒரு பேசுபொருளே அல்ல. ஏனெனில் நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது ஒரு சமூக இயக்கம் அல்ல ,முற்றிலும் அறிவார்ந்த ஓர் இயக்கம். ஓர் அறிவார்ந்த ஆளுமையை ஒருவர் உருவாகிக் கொள்வதில் அவருடைய பிறப்பு எந்த வகையிலும் பங்களிக்கவில்லை. முழுக்க முழுக்க அவருடைய அறிவார்ந்த தேடல் ம்ட்டுமே அதில் செயல்படுகிறது. அவரது சுயத்தை அறிவார்ந்து அவரேதான் முடிவை செய்ய வேண்டும். அதற்கான பயிற்சி வகுப்புகளை மட்டுமே நாங்கள் அளிக்கிறோம் .ஆகவே எவருடைய ஜாதியையும் மதத்தையும் எந்த வகையிலும் நாங்களபொருட்படுத்துவதும் இல்லை, விவாதிப்பதும் இல்லை, விசாரிப்பதும் இல்லை.
ஒருவர் தன்னை சாதி சார்ந்து வரையறை செய்து கொள்வது, அல்லது மதம் சார்ந்த வரையறை செய்துகொள்வது தன்னை ஒரு கூண்டில் அடைப்பதுதான் .அது உயர் ஜாதியாக இருந்தாலும் தாழ்ந்த ஜாதியாக இருந்தாலும். உயர்வு மனப்பான்மை போலவே தாழ்வு மனப்பான்மையும் மிகப் பெரிய கூண்டுதான். தன்னை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நினைப்பதும் தன்னை எவரும் மதிக்கவில்லை என்று எண்ணுவதும் ஒரே போன்ற அறிவார்ந்த சிறையே.
அறிவு என்பது சிறைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருப்பதுதான். அறிவின் ஊடாக உருவாக்கப்படும் ஆளுமையை கூட மேற்கொண்டு அறிவை அடைந்து உடைத்து முன்னால் சென்று கொண்டே இருக்க வேண்டும். ஒரு தத்துவ வகுப்புக்கு வரும் ஒருவர் தனக்கென உருவகித்துக் கொள்ளும் ஆளுமை அந்த தத்துவ வகுப்பு வழியாகவே கூட உடைந்து உடைந்து முன்னேற வேண்டும். அவ்வாறு முன்னேறிக்கொண்டே இருக்கும் ஓர் ஆளுமை உருவாக்கத்தை அளிப்பதற்காகத்தான் இந்த வகுப்புகளை நடத்துகிறோமே. ஆகவே எவரையும் அவர்கள் கொண்டுவரும் ஆளுமையை கொண்டு கணக்கிடவோ அதன் அடிப்படையில் அவர்களை மதிப்பிடவோ நாங்கள் முய்ல்வதில்லை.
ஆகவே எங்களுக்கு சாதி ஒரு பேசுபொருள் அல்ல .அத்தகைய சுய அடையாளங்களை பேசுபவர்கள் முன்வைப்பவர்களை நாங்கள் எந்த வகையில் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த வகையில் கராராகவே இருக்கிறோம்.
சாதி சார்ந்து எங்களுடைய கோணத்தை நானே தொடர்ந்து விரிவாக எழுதியிருக்கிறேன். சாதி ஒரு விவாதம் என்னும் அந்த நூலை நீங்கள் படித்துப் பார்க்கலாம் .சாதி என்பது இந்து மதத்தின் உருவாக்கம் அல்ல. சாதிக்கு நிகரான பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுப்பிரிவினைகள் இல்லாத நாடோ சமூகமோ உலகில் இல்லை. ஏனென்றால் அது நிலப்பிரபுத்துவ அமைப்பின் ஓர் அடிப்படைக் கட்டமைப்பு.
சாதி என்பது இங்கு சமூக உருவாக்கத்தில் ஒரு பகுதியாக அன்றைய நிலப்பரப்புத்துவ காலத்தில் உருவாகி வந்தது. நிலப்பிரபுத்துவச் சமூக கட்டமைப்பின் அடிப்படை அது. நிலப்பிரபத்துவம், முதலாளித்துவம் எல்லாம் மதங்களால் உருவாக்கப்படுபவை அல்ல. அவை உற்பத்தி, வினியோகம் மற்றும் பிற பொருளியல் அடிப்படைகளில் உருவாகி வருபவை.
உலகம் முழுக்க நிலப்பிரபுத்துவ காலகட்டத்திற்கு முன்பு இருந்தவை பழங்குடிச் சமூகங்கள். வெவ்வேறு பழங்குடி சமூகங்களை ஒன்றுக்கு ஒன்றாக அடுக்கி சாதிமுறை கட்டமைக்கப்பட்டது. அவ்வாறு சாதி அமைப்பு உருவாகி வந்தது. ஆகவேதான் அது ஒடுக்குமுறைக்கான வழியாக இருக்கையிலேயே கூட மக்களின் சுய அடையாளமாகவும் உள்ளது. சாதி எங்களை ஒடுக்கும் அடையாளம் என்பவர்கள்கூட அந்த அடையாளத்தை விட தயாராக இல்லை.
சாதி அமைப்பை மதம் பயன்படுத்திக் கொண்டது. மதத்தை சாதி பயன்படுத்திக் கொண்டது. ஆகவே இன்று மதத்தை சாதியும் சாதியை மதமும் ஆதரிக்கின்றன. ஆனால் மதக் கொள்கைகளில் இருந்து சாதி உருவாகவில்லை. இந்து தத்துவம் எந்த வகையிலும் சாதி சார்ந்ததாகவோ சாதியை முன்னெடுப்பதாகவோ இல்லை. அவ்வாறே நாங்கள் கற்பிக்கிறோம்.
ஜெ










