அன்பின் ஜெ!
முழுமையறிவு நிகழும் மலைத்தங்குமிடத்தின் அறைகள், சமையலுக்கும், உரையாடலுக்கும் பொதுக்கூடம் ஒன்று, ஆங்காங்கே அமர்ந்து பேச கல்லாலான சில பெஞ்சுகள் தவிர எஞ்சிய 80-90% இயற்கைச் சூழவுள்ளது. தனிமையில் இருக்க பொருத்தமானதொரு இடம். அங்கு நிகழ்ந்துவரும் ”முழுமையறிவு” அரங்கில் என்னென்ன நடைபெற்றுள்ளன என திரும்பிப் பார்த்தேன்.
இந்தியத் தத்துவமுகாம், ஆலயக் கலை பயிற்சி, அடிப்படை யோகப் பயிற்சி, வாசிப்பு பயிற்சி, உளக்குவிப்பு பயிற்சி, காட்சிக் கலைப் பயிற்சி, பறவைப் பார்த்தல், சைவத் திருமுறை வகுப்பு, சைவ சித்தாந்த வகுப்பு, ஆயுர்வேத வகுப்பு, நவீன மருத்துவ வகுப்பு, நாலாயிர திவ்ய பிரபந்த வகுப்பு, பௌத்த விபாசனா வகுப்பு, பைபிள் அறிமுக வகுப்பு, ஜெர்மானிய தத்துவ அறிமுகம், என்று குறைந்தபட்சம் பதிமூன்று வகையான (இவற்றில் சில ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில்) என அடுக்கடுக்காக உயர்ந்துகொண்டே சென்றுள்ளது. அந்த நிரையில் “இஸ்லாமிய மெய்யியல் வகுப்பு” கடந்த (ஜூலை மாத)12, 13, 14 தேதிகளில் நண்பர் நிஷா மன்சூர் நடத்தி வைத்தார்.
இவ்வாறான ஒன்று இங்கு நடத்தப்பட வேண்டுமென தங்களிடம் கூறியும், கூறாமலும் இத்துறையிலுள்ள சிலரிடம் ஓரு ஆண்டாக பேசிக் கொண்டிருந்தேன். உள்ளபடியே சொல்லப்போனால் சூஃபியம் – இஸ்லாமிய மெய்யியல் குறித்துப் பேச ஆட்களே இல்லை. சிறுபான்மையிலும் சிறுபான்மையாக – பொது வழக்கிலிருந்து விலகியிருக்கும் ஒற்றையடிப் பாதையிது. இஸ்லாமிய வெளிப்பாட்டிற்கு பெரும்பான்மைவாத அச்சுறுத்தல் ஒருபுறம், அதன் விளைவாக உருவாகும் பதற்றம் முஸ்லிம்களை ஆன்மிக சாரமற்றவர்களாகவும், வெறுமனே அரசியல்திரளாகவும் சுருக்கிவிடுகிறது.
எங்கள் வட தமிழகத்திலிருக்கும் திருப்பத்தூரில் இந்துக் கோவிலின் சாயலிலுள்ள கிறிஸ்தவ ஜெபாலயம் ஒன்றுள்ளது. அதைப் பற்றி தாங்களும் ஒருமுறை எழுதியிருப்பதாக நினைவு. ஏற்கனவே இதற்கு முன்பு இந்துக்கள் வரலாற்றுக் காரணங்களால் கைவிட்டிருந்தவை படிப்படியாக வெளியேறி தூர கிழக்காசியாவில் ஜென் என்று வளர்ந்து திரும்ப இங்கு வந்துகொண்டிருக்கிறது.
அதைப் போன்றே முஸ்லிம்கள் நடத்த வேண்டிய வகுப்பு தங்களைப் போன்ற – வெளியிலுள்ளவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இன்னொரு விஷயம் : இஸ்லாம் பரவத் தொடங்கிய வரலாற்றின் இடைக்காலத்தில் அமைந்த அரசுகள் ஆக்ரமித்த நாடுகளின் உள்ளூர் பண்பாட்டை, மதத்தை அழித்திருக்கிறது, அது அந்த கால நியதியும், நடைமுறையும்கூட. எனினும் மத குருக்களின் அழுத்தங்களை மீறி – மருத்துவர்கள், சிந்தனையாளர்கள், வணிகர்கள் என அறிவார்ந்த சிறு குழுவொன்று அந்தந்த நிலத்தின் பாரம்பரிய அறிவொடு உறவாடினார்கள். அப்படித்தான் யுனானி மருத்துவம், கிரேக்கவியல், ஈரானிலிருந்துவந்த விவசாயம் உட்செறிக்கப்பட்டது. குறிப்பாக சூஃபிகள் இதன் பாலமாக இருந்திருப்பதை படிக்க கிடைக்கிறது.
மலைத்தங்குமிடத்தில் அமர்ந்து இஸ்லாம் பற்றி வகுப்புகள் நடைபெறும் இந்த யதார்த்தத்தை முஸ்லிம்கள் நிறைந்திருக்கும் ஒரு சபையில் (இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் என) புறசமய ஆசாரங்கள் பற்றிய வகுப்பொன்று எதிர்காலத்திலேனும் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். குறைந்தபட்சம் கனவொன்றையாவது காண்கிறேன். அதற்காக இதுபோன்ற இஸ்லாமிய மெய்யியல் – நிலை இரண்டு, மூன்று என்று தொடர்ந்து நடைபெற வேண்டும்.
பூணூலை அறுத்ததும், வாழும் வீடுகளையும், வழிபாடு நடந்த ஆலயங்களை இடிப்பதும், குடிநீர் தொட்டியில் மலத்தை கலப்பதும் அறம் தவறிய செயல். கடந்த மாதம் இங்கு சென்னையிலிருக்கும் அமெரிக்க நண்பர் ஒருவர் தங்களின் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு பண்பாட்டுச் சுற்றுலாவுக்கு வந்திருந்தனர். அவர்கள் இங்கு விரிவான சுற்றுப்பயணத்தையும், உரையாடல்களில் ஈடுபட்டனர். அந்தவகையில் அவர்களுடன் நானுமொரு நாள் இருந்தேன்.
தத்துவ இயலில் மரபார்ந்த ஆய்வுத்துறையே மத மெய்யியலாகும். இயற்கையின் விதிகளை கவனிப்பதும், உலகநோக்கை மதிப்பிடுவதும் இதன் வழியாகும். மெய்யியலில் இந்திய, சீன, பௌத்த, கிறிஸ்தவ, மேலைநாட்டுக்கென்று தனித்தனியே துறைகள் உள்ளன. அழகியல், கட்டிடக்கலை, ஓவியம் போன்ற கலைத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு அதிகம். முறைப்படுத்தப்பட்ட கல்வியாக மேலை நாடுகளின் பல்கலைக் கழகங்களில் ஆய்விருக்கைகள் உருவாயின.
மெய்யியல் குறித்து கொஞ்சம்கூட தெரியாதவர்களுக்கும் புரியும் வகையில் நிஷா மன்சூர் வகுப்பெடுத்தார். வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு இசை வழியாக, நட்பு மூலமாக இஸ்லாம், முஸ்லிம் பற்றிய லேசான புரிதல் இருந்துள்ளதை கவனித்தேன். பொதுவாக இது சற்று கடினமான தலைப்பு என்பதாகவோ, தத்துவம் என்பதே சிக்கலானது என்றோ ஒரு எண்ணம் இங்குள்ளது.
இஸ்லாமிய நாட்காட்டியில் ரமலான், ஹஜ் ஆகியவற்றுக்குப் பிறகு மிக முக்கியமான முஹர்ரம் மாதம் 6, 7, 8 ஆகிய நாட்களில் இது நடைபெற்றது. சூஃபியிசத்தின் நெகிழ்வும், அந்த துன்பியல் கணமும் அல்கிஸ்ஸா நாவலை வாசித்திருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியும். மர்ஸியா எனப்படும் சோகப் பாடல்களை முஹர்ரம் மாதத்தில் கொல்லப்பட்ட மத குருவின் நினைவாக ஷிஆ முஸ்லிம்கள் பாடுவார்கள். அவ்வாறான ஒன்றை அஸ்கர் நக்வியின் கடந்த ஆண்டு சென்னையில் நிகழ்த்தியபோது கண்டு வந்தேன். நெஞ்சை உருக்கும் துன்பியல் நிகழ்வுகளின் வர்ணனையும், இசையும் மனதை பிழியச் செய்பவை. அந்த தேதியில் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது தற்செயல் அல்ல, இறையேற்பாடு என்றே எண்ணுகிறேன்.
இலண்டன் மாநகரத்தில் “speaker’s corner” என்றொரு இடத்தைப் பற்றி நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தையொட்டிய பகுதியில் உள்ளதென்று கருதுகிறேன். காரல் மார்க்ஸ், லெனின், ஜார்ஜ் ஆர்வெல் என புகழ்ப்பெற்ற பலரும் அங்கு பேசியுள்ளனர். அனேகமாக உலகிலுள்ள எதைப் பற்றியும் இங்கு சுதந்திரமாக, வெளிப்படையாக, தைரியமாக பேசலாம் என்று சொல்லப்படுகிறது. அதில் பெரும்பாலும் பரப்புரையாக, விவாதமாக இருக்கக் கூடும். இங்கு நித்யாவனத்தில் இணக்கமான சூழலில் நமக்கு முன் / பின் அறிமுகமில்லாத விஷயங்களை கற்றுக்கொள்ளும் இடமாகவும், கற்றுக்கொள்ளலை இயல்பானதாகவும் மாற்றிவிடுகிறது.
ஆண்டின் தொடக்கத்தில் இங்கு நடந்த பைபிள் வகுப்பில் கலந்துகொள்ள எண்ணியிருந்தேன். வேதாகமத்தின் மொழியழகு, ஞானவெளிப்பாடு இலக்கிய வாசகர் எவருக்கும் உவப்பான ஒன்று. ஆனால் அது சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பாடு ஆகியிருந்தது. அதுபோக அந்த நேரத்தில் எனக்கு உடல்நலக் குலைவும் இருந்ததால் வர இயலவில்லை. இப்பொழுதுமே முழு குணம் அடையவில்லை என்றாலும் தள்ளிப்போடவோ, தவிர்த்துக்கொள்ளவோ மனம் இடங்கொடுக்கவில்லை. பௌத்தம் குறித்த ஆர்வம் நான் சௌதி அரேபியாவிலிருந்த போது அங்கு சந்தித்த தூர கிழக்கு நாட்டு நண்பர்கள் மூலம் ஈட்டிக் கொண்டது. பிற்பாடு இங்கு ஓரளவு தமிழ் இலக்கியச் சூழலில் புத்தர் குறித்த நூற்களை வாசித்து ஈடுபாட்டை வளர்த்துவிட்டது. அமலன் ஸ்டேன்லியின் மொழிபெயர்ப்புகளும், குறிப்பாக அவர் யூதாஸைப் பற்றி எழுதிய “ஔவிய நெஞ்சம்” – “தானாய் நிலைநின்ற தற்பரம்” நாவல் மூலம் கவரப்பட்டு அவருடன் வளர்த்துக்கொண்ட நட்பும் என் பேறுகளிலொன்று. இறைவன் நாடினால் – என்றேனும் நானும் பௌத்த மெய்யியல் வகுப்பில் கலந்துகொள்ளக் கூடும்.
நிஷா மன்சூர் என் பதிற்றாண்டுகால நண்பர். 1990-கள் முதல் நவீன இலக்கிய இயக்கத்துடன் தொடர்புள்ளவர். அந்த காலக்கட்டங்களில் யூமா வாசுகி நடத்திவந்த “குதிரை வீரன் பயணம்” கோமல் சுவாமிநாதனின் “சுபமங்களா”வின் நடுப்பக்கத்தில் அவருடைய கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. முன் தலைமுறையினரான மா. அரங்கநாதன், அபி, பிரமிள், தோப்பில் மீரான் தொடங்கி கொரனாவுக்கு சற்று முன் / பின் எழுதத் தொடங்கியுள்ள சமகால புதிய கவிஞர்களின் கவிதைகளுடன் முன் அறிமுகம் கொண்டவர். சார் பதிவாளர் வரை பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரின் மகன் என்கிற குடும்பச் சூழலில் பண்பட்டு வளர்ந்து வந்தவர்.
(விக்ரமாதித்யன்) அண்ணாச்சி, கலாப்ரியா, எஸ்.ரா. என விரிவான தனிச் சந்திப்புகளை மேற்கொள்ளக் கூடியவர். அவருடைய இந்த தொடர் இயக்கத்தை அருகேயிருந்து பார்த்தவன் என்றாலும், பிற (தொழில்முறை) பேராசிரியர்களைப் போல் முழு நாள் வகுப்பெடுக்க நிஷா மன்சூரால் முடியுமா என்று எனக்கு சந்தேகம் இருந்தது.
அவரைக் குறைத்து மதிப்பிடவில்லை. நாளேடு, வார, மாத இதழ்களில் அவர் எழுதியவற்றை படித்தவன், பல்வேறு இலக்கிய கூட்டங்களில், கல்லூரிகளின் கருத்தரங்க உரையை நிஷா மன்சூர் அதிகபட்சம் ஒரு மணிநேரம் பேசி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இயலுமானவரை உடனிருந்து கண்டிருக்கிறேன். வணிகம் என்கிற முறையில் தென்னிந்திய முன்னணி தனியார் நிறுவனமொன்றின் இயக்குநர். ஆகவே ஆண்டில் எட்டு, பத்து மாதங்கள் நாடு முழுக்க குறுக்கும் நெடுக்குமாக பயணிப்பவர் என்று தினசரி கடும் உழைப்பை கோரி நிற்கும் பணிச்சுமையில் இருப்பவர்.
இவருக்கு இவ்வாறு நாள் முழுக்க பேசி பழக்கமும் இல்லை. அதற்கான நேரத்தை ஒதுக்கி வந்தாலும் முழுநாள் தாக்குப்பிடிப்பாரா என்று அவரைவிட நான் அதிகம் பயந்து கிடந்தேன். “நீங்கள் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்” என்று வேதாகம புதிய ஏற்பாடு யோவானின் சுவிசேஷம் 5:33 -யில் வருகிறது, அல்லவா” கல்வத்து நாயகம், அவரிடம் படித்த ஜல்வத்து நாயகம் – அவரிடம் படித்த அம்பா நாயகமிடம் நிஷா மன்சூர் சூஃபிய தீட்சைப் பெற்றவர். நான் உத்தேசித்ததைவிட, எதிர்ப்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக பிரகாசித்தார். அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த மூன்று நாட்கள் முழு அமர்வில் நிஷா மன்சூர் ஆற்றிய உரை சூஃபிய மெய்யியலில் அவருக்கான தனியொரு இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அவர் நல்லதொரு பயிற்றுவிப்பாளராக, நவீன இலக்கியத்துக்கும் இஸ்லாமிய தரப்புக்குமான பாலமாகியுள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. நிஷா மன்சூர் சூஃபியிசம் என்கிற ஒரேயொரு துறையில் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதால் ஆழமாக கற்றுத் தேர்ந்துள்ளார். நான் கொண்டிருந்த பதற்றம் தவறு என்றும் தன் செயலில் (எனக்குக்) காட்டியுள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை ஆறு – ஏழு மணி வாக்கில் நிஷா மன்சூரின் ஊரான மேட்டுப்பாளையத்துக்கு ரயிலில் போய் இறங்கிக் கொண்டேன். விருந்தினர் விடுதியில் குளித்து முடித்து ஓரிரு மணிநேரங்கள் இளைப்பாறிக் கொண்டதும் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். சூஃபியம், மெய்யியல் தொடர்பாக மட்டுமே ஒரு ஐநூறு நூல்கள் பீரோ முழுக்க இருந்தது. “நூலகத்திற்குப் போ, நீ எவ்வளவு முட்டாள் என்பதை புத்தகங்கள் உனக்குச் சொல்லும்” என்பார்கள். அதிலிருந்து கடந்த பல வாரங்கள் இந்த பயிற்சி வகுப்பிற்காக தேர்வு செய்த ஐம்பது நூல்களிலிருந்து குறிப்பெடுத்திருந்த மன்சூர், அவற்றை தனியாக ஒரு பையில் எடுத்துக்கொண்டார்.
‘அவரவர் கோணத்திலிருந்து பார்க்காதவரை எதையும் முழுமையாக நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அவரவர் கண்ணோட்டத்தைப் பார்ப்பது என்பது அவரின் உடல்களில் ஊடுருவி உணர்வுகளால் உள்ளார்ந்து நடப்பதற்குச் சமம்’ என்று “To kill a mockingbird” என்கிற நாவலில் Harper Lee குறிப்பிடுகிறார். தமிழிலும் அது ”பாடும் பறவையின் மௌனம்” என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
காலை உணவை ஒருசேர முடித்துக் கொண்டவுடன் காரில் மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டோம். மரபாகவும், படித்தும், கேள்விப்பட்டும் மனதில் சேமித்து வைத்திருந்ததை சற்று frozen mode நிலைக்கு மாற்றி அமைத்துவிட்டுத் தான் வண்டியேறினேன். கற்றலின் அடிப்படையே தனக்கு தெரியாத (ஏதோ) ஒன்றை ஆசிரியர் அளிக்க உள்ளார், அதைப் பெற்றுக்கொள்ளும் பணிவு சீடனிடம் இருந்தாக வேண்டும். தனக்கு எல்லாம் தெரியும் என்றோ, கற்க அதில் என்ன இருக்கிறது என்பதோ அறிவுச் செயல்பாடல்ல,
இதற்கென உருவாக்கப்பட்டிருந்த வாட்ஸப் குழுமத்தில் பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் மலையேறிக் கொண்டிருந்த தகவல்கள் வந்துகொண்டிருந்தன. எனவே அவர்களை காத்திருக்க வைப்பதெப்படி என்று எனக்குத் தோன்றியது. பொதுவாகவே முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை தவற விடுவதில்லை. எனவே நாம் சற்று துரிதப்படுத்திக் கொள்வோம் என்றேன். தொழுகையை எங்கேனும் சாலையோர நிழலில் நிகழ்த்திவிட்டு பயணத்தை தொடரலாமே என்றேன். வெள்ளிக்கிழமையின் கூட்டுத் தொழுகையியை பொதுப் பள்ளிவாசலில் தொழுவதை நேரநெருக்கடியின் பொருட்டு தவிர்த்துக்கொள்ள அனுமதியும் இருக்கிறதே, ஓரிரு மணிநேரங்கள் மீதமாகுமே என்று சொன்னேன்.
அவர் வெள்ளிக்கிழமை தொழுகையை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடியவரோ, இதற்கெல்லாம் மசியக்கூடியவராகவோ தெரியவில்லை. நிஷா மன்சூருக்கு என்னைப் போல் துளியளவும் சந்தேகமிருக்கவில்லை. என்ன ஆனாலும் தொழுது முடித்த பிறகே வேறு பணிகள் என்றார். சூஃபிய தரப்பு அவ்வளவாக மார்க்க சடங்கு, வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு காட்டுவதில்லை என்கிற (முஸ்லிம்களில் எதிர் தரப்பின்) குற்றச்சாட்டை மறுக்கும் செயலிது. தாமரைக்கரையில் பள்ளிவாசல் ஏதுமில்லை (என்று நினைக்கிறேன்), ஆகவே அந்தியூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பள்ளிவாசலில் ஒன்றாக கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டோம்.
வெள்ளிக்கிழமை மதியம் இறைச்சியுள்ள உணவு என்பது முஸ்லிம்களின் வழமை. வெள்ளிமலைவாசிகள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் என்று நித்யாவனம் வலைத்தளத்தில் போட்டிருந்தது. ஆகவே அங்கு மலையேறுவதற்கு முன்பே தவிர்க்கப்பட்டு விட்டது. அந்தியூர் வெள்ளிமலை வனச் சரக எல்லைக்கு சற்று முன்பாக காரை நிறுத்திவிட்டு அண்ணியார் (நிஷா மன்சூரின் மனைவி) ஹாட் பேக்கில் கட்டிக் கொடுத்திருந்த மதிய (சைவ) உணவை எடுத்துக்கொண்டோம். ஊரோடு ஒட்டிவாழ் என்பதும், சக மனிதர்களின் உணர்வுகளுக்கு அவர்களுடன் இருக்க நேர்கிற ஓரிரு நாட்களை இணக்கமாக அமைத்துக் கொள்வதும் பண்பட்ட நடத்தை. வீட்டில் கிடப்பதைப் போலவோ, நண்பர்களுடன் இருப்பதைப் போன்றதல்ல இது. எப்பொழுதும் நான்கு பேர்கள் கூடும் பொதுவெளியில் குறைந்தபட்ச நிபந்தனைகளை பேணுவதும், சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வதும் அவசியம்.
பங்கேற்பாளர்களுடனான அறிமுககங்களுடன் உடனடியாக வகுப்புகள் தொடங்கின. வந்தவர்களில் இந்த வகுப்பை நடத்திய நிஷா மன்சூரையும், என்னை கழித்துவிட்டு பார்த்தால் ஒரேயொரு முஸ்லிம் (முஸ்தபா?) மட்டுமே இருந்தார். சுமார் 22 பேர்கள் ஒருநாளும், மறுநாளில் 24 என பயிற்சி வகுப்பில் எண்ணிக் கொண்டேன் வைத்தேன். உள்ளபடியே சொல்வதாக இருந்தால் 50 பேர்களை எதிர்ப்பார்த்து இருந்தேன். தோராயமாக இரண்டு – இரண்டரை, மூன்று மணிநேரங்கள் அளவுக்கான மொத்தம் எட்டு அமர்வுகளாக வெள்ளி, சனி, ஞாயிறுக் கிழமைகளில் பிரித்து வைத்திருந்தார். நிஷா மன்சூரின் தரவுகள் மூல நூல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்ததால் இந்த பயிற்சி முகாமின் நோக்கத்தை நிறைவேற்றி வைத்தது என்றே கருதுகிறேன்.
முஸ்லிம்களுக்குமேகூட இதுபோன்ற வகுப்புகள் தேவைப்படுகின்றன என்பதை என் அனுபவத்திலிருந்து சொல்லிக் கொள்வேன். அதேபோல் முதல்நிலை வகுப்பில் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து ஏதேனும் தெரிந்து இருக்க வேண்டும் என்கிற அறிவுப் பின்னணி எதையும் முன்நிபந்தனையாக்கவில்லை. பங்கேற்கக் கூடியவரின் இறை நம்பிக்கையோ, நம்பிக்கையின்மையோகூட பொருட்டில்லை. ஆனால் மெய்யியல் என்பதன் இருப்பை, ஆன்மிக சாத்தியத்துக்கான வாசலை அடைத்துவைத்துவிட்டு இங்கு வரக்கூடாது. “பரலோக ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல” (ரோமர் 14:17) என்று சொல்லும்போது அதை அதன் உள்ளர்த்தத்தில் அணுகத் தெரிந்திருக்க வேண்டும்.
உமறுப் புலவர் (1642 – 1703) எழுதிய சீறாப்புராணத்தின் “திருவினும் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த் – தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த – மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய் – மதித்திடாப் பேரொளி யனைத்தும்” என்கிற முதல் பாடலிலிருந்து நிஷா மன்சூர் வகுப்பை ஆரம்பித்தார்.
இஸ்லாம் என்றால் என்ன என்பதும், ஆதாம் ஏவாள் முதல் நோவா, ஈசாக், இயேசு வரை பைபிளில் வரும் ஆப்ரஹாமிய தீர்க்கதரிசிகளைப் பற்றியும், அவர்களில் கடைசியாக நபிகள் நாயகம் வரை இருக்கும் தொடர்ச்சியைப் பற்றி சொல்லிச் சென்றார். அதன் பிறகு கலீஃபாக்கள் எனப்படும் முஹம்மத் நபியின் பிரதிநிதிகளாக ஆட்சி செய்தவர்கள், அதன் பிறகு வந்த அரசர்கள், மேற்கில் எகிப்தை நோக்கியும், கிழக்கில் ஈரான் தொடங்கி ஆசிய பகுதியில் அது வளர்ந்து கொண்டு சென்றதை பற்றியும் சொன்னார். எந்தவித முற்சாய்வும், பெருமிதங்களும் இன்றி இஸ்லாமிய வரலாற்றை பொதுவாக எடுத்துரைத்தார் நிஷா மன்சூர்.
வட இந்தியாவில் இஸ்லாம் போர் நடத்தி, ஆட்சியை நிறுவி அறிமுகமானதெனில் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கிழக்குக்கரை (மலபார்) மேற்குக்கரை (மஃஅபார்) பகுதிகளுக்கு இஸ்லாம் வந்த விதம் மாறுபட்டது. அரபிகளிடம் இஸ்லாமிய மார்க்கம் முஹம்மத் மெக்காவில் பிறக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழர்களுக்கும் அரபிகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்தன, பண்பாட்டு தொடர்புகள், வணிகர்களின் பங்களிப்பால் பிறகு மேலும் வலுவாயின.
இந்துத்வவாதிகள் இஸ்லாமியரை வெளியே நிறுத்துவதற்கான கூச்சலை போட்டுக் கொண்டிருப்பது ஒருபுறமென்றால், இங்கு முஸ்லிம்களில் ஒருதரப்பு தாம் ஏதோ அரபிகளைப் போல, ஈரானியர்களைப் போல இங்குள்ள பண்பாட்டு அம்சங்களுடன் விலக்கலை, ஒவ்வாமையை வளர்த்து வருவதையும் பார்க்க நேர்கிறது. ஏற்கனவே இலங்கை முஸ்லிம்கள் தங்களை சோனகர்கள் என்று ஒரே தாய்மொழியைப் பேசும் தமிழர்களிடமிருந்தும், சிங்களர்களிடமிருந்தும் ஒதுங்கிச் சென்றுவிட்டதை காணமுடிகிறது. அதற்கான நியாயங்கள் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் முஸ்லிம்கள் தமிழுடன்தான் வரலாறு நெடுக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எட்டு, பத்து வயதிலுள்ள என் குழந்தைகள் அரபு மொழியை கற்றுக் கொள்ள அருகிலுள்ள பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருக்கும் மத்ரஸா – வேத பாடசாலைக்கு மாலையில் ஒரு மணிநேர வகுப்புக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். இது பொதுவாக திருக்குர்ஆனை குழந்தைப் பருவத்தில் ஓதப் பழக்கித் தரும் முறை. சிறுபான்மைச் சமூகம் தன் மதநம்பிக்கையை, பாரம்பரிய மரபை தலைமுறை தோறும் இவ்வாறுதான் கையளித்துக் கொண்டிருக்கிறது. ஊரில் ஓய்வாக இருக்கும்பொழுது அவர்களை வீட்டிற்கு திரும்ப அழைத்துவர என் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று காத்திருப்பேன். அப்பொழுது அந்த சிறுவர், சிறுமியர் சொல்லித் தரப்படும் மந்திரங்களை உச்சாடணம் செய்யும்போது அந்த ஒலித் துணுக்குகள் வெளிப்படும் இடம் தொண்டையா? உள்நாக்கா, மூக்கா, குறிப்பிட்ட ஒலியை வாயை மூடிக் கொண்டும், சில ஒலியை வாயைத் திறந்தும் வெளிப்படுத்த வேண்டும், அதில் மாற்றிச் செய்யும் குழந்தைகளை திருப்தியாகும் வரை அதற்குரிய ஒலி நிர்ணயிக்கப்பட்ட இடத்திலிருந்து வருகிறதா என்பதை உறுதிப்படுத்தும் வரை வேறு பாடம் அளிக்கப்படாது.
நான் திருக்குர்ஆனிலும், நபிமொழியிமுலுள்ள பொருளை, அதன் ஞானத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவே மெனக்கெடுகிறேன். வாழ்வின் மத்திம வயதில் எஞ்சிய ஆயுளைப் பற்றி எந்த உத்ரவாதமும் இல்லை, எனவே அகல கால் வைத்திருந்தேன் என்பதை இந்த வகுப்பு என்னை எனக்குக் காட்டித் தந்தது. ஆனால் நிஷா மன்சூர் (சூஃபியமே தன் செல்திசையென்று) அங்கு ஆழ உழுதிருக்கிறார். என் படிப்பறிவைவிட அவருடைய பட்டறிவும், ஒரே துறையென்று ஈட்டிக் கொண்ட அனுபவ அறிவும் பெரியதாக இருக்கக் கண்டு வாயடைத்து நிற்கிறேன்.
தமிழ்நாட்டு முஸ்லிம்களைப் பற்றி சொல்வதாக இருந்தால் 1) அரேபிய, பார்சிய, துருக்கிய இரத்தவழி கொண்டவர்கள் 2) சுல்தான்களின், நவாபுகளின் படைகளுடன் இங்கு தமிழ்நாட்டிற்குள் வந்த வடநாட்டின் உருது பேசுபவர்கள் 3) சூஃபிகளுடைய செல்வாக்கின் கீழ் வந்த எளிய மக்களின் மன மாற்றம் 4) இங்கு நிலவி வந்த சாதிய ஏற்றத்தாழ்விலிருந்து சமத்துவம் வேண்டி நடந்த மதமாற்றம். அவர்களில் பலர் இந்து மதத்திலிருந்தும், சிலர் பௌத்த, சமண மதத்திலிருந்து முஸ்லிமாகியுள்ளனர் என இங்கு பல்வேறு வகையாக உள்ளனர்.
முஸ்லிம்கள் எழுதிய நூல்களானாலும் சரி, அவர்கள் ஆற்றிய சொற்பொழிவானாலும் சரி – இடையில் திருக்குர்ஆன், நபிமொழி, அரபு மொழிக் குறிப்புகளுடன் பொது வாசகர்கள், பார்வையாளர்களோ உள்ளே நுழைய முடியாதவண்ணம் விலக்கலை ஏற்படுத்திவிடுவார்கள். நவீன இலக்கியச் சூழலில் இருந்துகொண்டிருக்கும் நிஷா மன்சூருக்கு இதன் வேறுபாடு நன்கு தெரிந்திருப்பதால் – தன் முழு உரையை, வகுப்பை கச்சிதமாக அமைத்திருந்தார்.
அருட்பா – மருட்பா சர்ச்சைக் குறித்த செவிவழிச் செய்திகள் தமிழக பொது மேடைகளிலும், ஓரளவு இலக்கிய வெளியிலும் முன்வைப்பதுண்டு. அந்தக் காலத்தில் செய்குத்தம்பி பாவலர் (1874 – 1950) அது அருட்பாதான் என்கிற தரப்பில் இருந்தவர் என்று சொன்ன நிஷா மன்சூர் தமிழ் குறித்த எல்லா விவாதங்களிலும் முஸ்லிம்களும் இருந்தனர் என்பதை பதிவு செய்யும்விதமாக சுட்டிக்காட்டினார். உள்ளபடியே சொன்னால் வள்ளலார் (1823 – 1874) மறைந்து போவதற்கு சில மாதங்கள் முன்பு பிறந்தவர் சதாவதானி. மறைமலையடிகள் (1876 – 1950) இதை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்பது ஏற்கப்படுவதாகும்.
சுதந்திரப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பதாகட்டும், அண்மையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டமாகட்டும், முஸ்லிம்கள் அவர்களின் சொற்ப எண்ணிக்கை சதவீதத்துக்கு மேலதிகம் பங்களித்துள்ளனர், பொதுச் சமூகத்துடன் உடன் நின்றுள்ளனர் என்பதே வரலாறு. எனினும் திரும்பத் திரும்ப தனிமைப்படுத்திக் கொள்ளும் போக்கு உள்ளும் புறமுமாக முயற்சிக்கப்படுகிறது என்பதும் அண்மைக்கால வரலாறு.
“எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே – அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!” என்ற தாயுமானவர் (1705 – 1742) போலவே மனோன்மணியே, பெருஞ்சோதியே என்றெல்லாம் சேகுனாப் புலவர், மதார்ஷா, ஆலிம் புலவர், குணங்குடியார், பீரப்பா, சகத்துல்லா அப்பா, என முஸ்லிம் புலவர்கள் பாடிவிட்டுச் சென்றுள்ளதை மேற்கோள்காட்டி பேசினார்.
ஸ்ரீ விஷ்ணுமோகன் ஃபௌண்டேஷனின் சுவாமி ஸ்ரீஹரி பிரசாத் (பிறப்பு 1961) கொச்சின் அரசர்களுக்கு (1632 – 1809 வரை) தலைமை அமைச்சர்களாக இருந்தவர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர். சென்னையிலிருக்கும் அவருடைய மடத்துக்கு அவ்வப்போது சென்று வருவது என் வழக்கம். சேசு சபை பாதிரிகளின் மடங்களிலும் ரமலானில், கிறிஸ்துமஸ் கூடுகையில் அழைக்கப்பட்டிருக்கும்போது உரிய நேரம் குறிக்கிட்டால் தொழுதுகொள்ள அனுமதிப்பதையும் பார்த்திருக்கிறேன். அங்கு ஒருமுறை முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் தொழுததை கண்டு, வியந்துபோய் தங்களுக்கு எழுதியிருந்தேன்.
2018-ல் தாங்கள் எழுதிய கட்டுரை ஒன்று,
அந்த என் பின்னூட்டத்தை இப்பொழுது மறுவாசிப்புச் செய்யும்பொழுதுகூட மகிழ்ச்சியாகவே உள்ளது.
சூஃபிய மெய்யியலின் அசல்தன்மை, அதன் உலகப் பொதுமை, இதயம், குடுவை என்று சூஃபிய இலக்கியத்தில் வரும் குறியீடுகள் எதைக் குறிக்கிறது என்பதற்கான விளக்கங்கள், இஸ்லாத்தில் சூஃபிகளின் தனித்தன்மையான வழிமுறை, வரலாற்றில் அவர்களின் இடம் என்று பேசப் பேச கேட்டுக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றியது. மனிதன் தொல்குடி சமூகமாக இருந்த காலத்திலிருந்தே இயற்கையை கவனித்து வந்திருக்கிறான், பிரபஞ்ச பிரமாண்டத்துடன் தொடர்பு கொள்ள நினைத்து இருக்கிறான். அந்தவகையில் இஸ்லாமிய மெய்யியல் தனித்துவமானது என்றாலும் உலகின் பிற பாகங்களிலுள்ள ஆன்மிக கூறுகளுடன் இணைந்தும் வினையாற்றியதே சூஃபியத்தின் சிறப்பு என்றார்.
அறிவியல், தர்க்கம் ஆகியவற்றின் எல்லை வரையறுக்கப்பட்டது. விளக்கம் அளிக்க முடியாத ஏராளமான விஷயங்கள் இந்த பிரபஞ்சத்திலுள்ளன. மெய்யியல், மீமெய்யியல் இந்த இடைவெளிக்குள் இயங்குகிறது என்பதே எதார்த்தம். Sacred Books of the East – கீழைநாட்டு புனிதப் பிரதிகள் என்பது மாக்ஸ் முல்லர் (1823 – 1900) தலமையிலான எண்ணற்ற அறிஞர்கள் உழைத்து ஆங்கிலத்தில் 50 தொகுதிகளை இருபதாம் நூற்றாண்டில் வெளியிட்டனர். பழங்காசு சீனிவாசன் அவர்களிடம் அவை அனைத்துமுள்ளது, அவரிடமிருந்து இரவல் வாங்கி சிலவற்றை படித்துள்ளேன். மெய்யியலின் கூறுமுறையும், கருத்தும், உள்ளடக்கமும்கூட மிகவும் இறுக்கமானது. இருப்பினும் நிஷா மன்சூர் அதை எளிமையாக, புரிகிற விதத்தில் கொடுத்தார். இந்த அமர்வுகளில் வறட்சியோ, சலிப்போ, தொய்வோ ஏற்படவில்லை. சூஃபிய சிந்தனைகளிலுள்ள வெவ்வேறு வகைமைகளை, கருத்தோட்டங்களின் பொதுவான வரைபடமொன்றை எங்களுக்கு காட்டித்தந்தார். அந்த வகையில் இஸ்லாமிய மெய்யியல் குறித்த திறப்பு ஒன்று இங்கு நிகழ்ந்துள்ளது. அதை சாத்தியமாக்கிய முழுமையறிவு – நித்யாவனம் – விஷ்ணுபுரம் அமைப்புக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
உணவு இடைவெளியில் நிஷா மன்சூரை தனியாகவும், முழு அமர்விலும் அவ்வப்போது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஆனந்த்குமார், நிகழ்வுகளை கச்சிதமாக ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த நவீன் குறிப்பிடத்தக்கவர்கள். ரப்பர் வந்தபோதோ – பிறகு விஷ்ணுபுரம் நாவல் வெளியான 1997-யிலோ பிறந்தேயிராத, அல்லது சிறுவர்களாக பள்ளிக்கூடத்திலிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் விஷ்ணுபுரம் இயக்கத்தில் இணைந்திருப்பதை ஒவ்வொரு முறையும் பார்த்துவருகிறேன். இது சற்று நம்பிக்கையளிக்கிறது. அதிகாலை நேரத்தில் முன்நெற்றியில் திருநீர் பூசி உலாத்திக் கொண்டிருந்த அந்தியூர் மணியின் இருப்பு நற்சகுனமென்பேன்.
நித்யாவனத்திற்குள் நுழைந்ததுமே இடதுபுறத்தில் புத்தரும், அன்னை சாரதாதேவியும் இருக்கின்றனர். நாராயண குரு, கல்பற்றா நாராயணன், எமர்சன், வைக்கம் பஷீர், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என மறைந்து போன முன்னத்தி ஏர்கள் புகைப்படமாக இருந்தனர். யதியோடு தங்களின் கோட்டோவியம் அழகு. சமையலறை ஒட்டிய பிரதான கட்டிடம் – இடப வாகனத்தில் சிவனும் – சக்தியுமுள்ள மரச் சிற்பத்திற்கும், சரஸ்வதி கையில் வீணையுடன் கலைமகளாக இருக்கும் சிலைக்கும் நடுவே பூட்டுத் தொங்கிய அறைக்கதவு பள்ளிவாசலில் இருக்கும் (மெஹ்ராப்) குவிமையம் போல் தெரிந்தது.
அங்கு பச்சை வண்ண ஃபர் – கம்பளித் தொப்பி எடுப்பாக அணிந்து இஸ்லாமிய தொழுகை நிலையை முதலாவதாகவும், திக்ரு எனப்படும் இறைநாமங்களை மந்திரம் போல் உச்சாடணம் செய்யும் தியான முறையை அடுத்தும் நிஷா மன்சூர் நிகழ்த்திக் காட்டினார். இதுபோன்ற வழிபாடுகளை அங்கு பார்வையாளர்களாக இருந்தவர்களில் விரும்பக் கூடியவர்களை தன்னுடன் இணைந்துகொள்ளலாம் என்றார். அனேகமாக அனைவரும் அவரைப் பின்தொடர்ந்ததை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
Hasbi Rabbi Jallallah, Mafi Kalbi Khairullah,
Nooremohammed sallallahu,
Haq Laillaha ilallah
Antal hadi antal haq, Laisal hadi illahu
Antal Maula antal haq, Laisal maula illahu
Antal maabod antal haq, Laisal maabod illahu
Antal maqsood antal haq, Laisal maqsood illahu என்று தாளகதியுடன் அத்வைதம், துவைதம், விசிட்சாவைதம் என்பதில் சூஃபியம் எங்கு பொருந்துகிறது, எங்கு தள்ளி நிற்கிறது என்பதை சற்று சுருக்கமாக சொன்னார். வாசி யோகம் பற்றி ஒருவர் கேட்டார், பொதுவாக சூஃபிகள் கைக்கொள்ளும் தியான மரபின் வேர்கள் பழமையானது, அது தெர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களுக்கு – அவர்களின் கற்கும் திறன், மனவமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அளிக்கப்படும் அந்தரங்க பயிற்சி என்றும் சொன்னார்.
நடுக்கூடத்தில் இது நடைபெற்றது, நான் விலகி தாங்கள் பயன்படுத்தும் அறையிலிருந்து கொண்டேன். அங்கு என் அசைவோ, பங்கேற்பின்மையோ எவருக்கும் சிறு இடையூற்றையும் தந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். சூடானில் (1993-ஆம் ஆண்டு) நிகழ்ந்த பஞ்சத்தில் குற்றுயிரும், குலையுயிருமாக இருந்த கறுப்பினச் சிறுமியை – அவள் இறந்து போனதுமே உண்ணக் காத்திருக்கும் கழுகை புகைப்படம் எடுத்த Kevin Carter (1960 – 1994) போல நிகழ்கணத்தின் சாட்சியமாக பார்த்துக் கொண்டிருந்தேன். பொதுவாக எல்லா வகையான உணர்வு நிலையிலிருந்து சற்று தள்ளி நின்று பார்க்கும் வழக்கத்திற்கு இப்பொழுது வந்து சேர்ந்துள்ளேன். விஷ்ணுபுரம், முழுமையறிவு நம் காலத்தின் phenomena. உன்னத மௌனம் – Noble Silence என்பார், அமலன் ஸ்டேன்லி.
சூஃபியிசத்தின் தோற்றம் அரபு நிலப்பரப்புக்கு வெளியில் உருவானது என்று பொதுவாக கூறப்பட்டு வருவதைக் குறித்து பங்கேற்பாளர் ஒருவர் தன் சந்தேகத்தைக் கேட்டார். உடனே நிஷா மன்சூர் நபிகள் நாயகம் (570 – 632) அவர்களின் சமகாலத்தவர்களான Owais al-Qarani (594 – 656), அலி இப்னு அபிதாலிப் (600 – 661) ஆகியோரிடமிருந்து இது தோற்றம் கொண்டதை உறுதிபடச் சொன்னார்.
இஸ்லாமிய மெய்யியலில் காதிரியா, சிஷ்தியா, சுஹர்வதியா, நக்ஷபந்தியா என பெருவழக்கில் இருக்கும் சில வழிகளாகும். அவற்றை முறையே Abdul Qadir Gilani (1077 – 1166), Abu al-Najib Suhrawardi (1097 – 1168), Ahmad al-Rifaʽi (1119 – 1183), Baha’ al-Din Naqshband (1318 – 1389) ஆகியோர் அரபு, ஈரானிய நிலத்திலும் அஜ்மீரில் அடங்கியிருக்கும் Mu’in al-Din Chishti (1143 – 1236) இந்தியாவில் வளர்த்தெடுத்தனர். இதெல்லாமல் ஷாதுலியா என்றொரு பிரிவு இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் சில இடங்களிலும் பின்பற்றக் கூடியவர்களைக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
அப்தால் (பெருஞானிகள்), மஜ்தூப் (அரையுணர்வு நிலையில் இருக்கும் பித்தர்கள்) ஷுஹதாக்கள் (உயிர்நீத்த தியாகிகள்) கலந்தர்கள், தர்வேஷ்கள் என அவர்களுக்கு இடையிலான நுட்பமான வகைமைகளைப் பற்றிச் சொன்னார். Al-Insan al-kamil, – the perfect being – universal man : முழுமையான மனிதன் என்கிற கருத்தை முன்வைத்தவர் Ibn Arabi (1165 – 1240), பிறகு இந்தியாவுக்கு வந்து சென்றதாக கருதப்படும் Abd al-Karim al-Jili(1306-1403) இதை மேலெடுத்துச் சென்றிருக்கார்.
இமாம் கஸ்ஸாலி, ராபியா பஸரிய்யா, பட்டத்து இளவரசனாக இருந்த தாரா ஷிகொவின் ஆன்மிக நாட்டம் என சிலரின் வாழ்க்கைச் சம்பவங்களை கூறிக்கொண்டே காஜா கரீப் நவாஸ், நிஜாமுத்தின் அவ்லியா இங்கு இந்தியா உலகிற்கு அளித்த கொடைகளையும் பதிவு செய்தார். ஏர்வாடி இப்ராஹிம் பாதுஷா, திருச்சி நத்தர்ஷா, நாகூர் ஷாஹுல் ஹமீது. பல்லாக்கு வலியுல்லா, அப்துல் வஹ்ஹாப் பாகவி என தமிழ்நாட்டின் இறைநேசர்களை அறிமுகப்படுத்தினார். நாகூர் ஹனீபா, குமரி அபுபக்கர் என சமகால பாணர்களின் சில பாடல்களை பாடியும் காட்டினார்.
தமிழின் முதல் நாவலென 1879-இல் எழுதப்பட்ட ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ சொல்லப்பட்டு வரும்நிலையில், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டது ‘மதீனத்துந் நுஹாஸ்’ எனும் ‘தாமிரப்பட்டணம்’ நாவல். இந்த நாவல் ‘அர்வீ’ எனப்படும் அறபுத் தமிழில் எழுதப்பட்டது. 1858-இல் நாவல் எழுதப்பட்டிருந்தாலும் 1899-இல்தான் அச்சு வடிவத்தில் நூலானது. பின்னர் 1979-இல் நவீனத் தமிழ் வரிவடிவில் வெளியானது. தொடக்கக் காலத் தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்படாததாலும், தமிழின் முதல் நாவல் வெளியான 20 ஆண்டுகள் கழித்தே அச்சாதனதாலும், அறபி மொழி நெடுங்கவிதை ஒன்றின் மொழியாக்கம் என்பதாலும் இதனைத் தமிழின் முதல் நாவல் என ஏற்க முடியாது என்போரின் வாதங்களுக்குத் தர்க்கரீதியான பதில்களைத் தந்துள்ளார் ஆய்வாளர் பழங்காசு சீனிவாசன் என்று சொன்னார் நிஷா மன்சூர்.
இயேசுவின் மலைப் பிரசங்கம் போல் நபிகள் நாயகத்தின் இறுதிப் பேருரை முக்கியமானது. கீதையேகூட குருசேத்திரத்தில் போருக்கு முன்பு அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஆற்றிய உரைதானே? வஹ்ஹாபியம் எனப்படும் தூய்மைவாத சிந்தனைப்பள்ளியின் கோட்பாட்டாளர்களான இப்னு தைமிய்யா, முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் குறித்த தன் கருத்தையும் முன்வைத்தார்.
தமிழில் புராணம், கலம்பகம், அந்தாதி, திருப்புகழ், பிள்ளைத் தமிழ், மாலை, அம்மானை, ஏசல், சிந்து, தாலாட்டு, கும்மி கோவை, திருப்பாடல் திரட்டு, ஒப்பாரி, நாடகம், என்றுள்ள வகைகள் அனைத்திலும் இஸ்லாமியர்கள் ஞானப்பாடல்களை எழுதியுள்ளனர். கூடுதலாக படைப்போர், நாமா, மசாலா என்று அரபு இலக்கிய வடிவத்தை போல புதிய பரிசோதனை வகை தமிழுக்கு அளித்துள்ளதையும் நிஷா மன்சூர் கூறினார். அந்த புலவர்களின் பெயர்களேகூட எந்தளவுக்கு தமிழ் வேர்களைக் கொண்டிருக்கிறது என்பதை யோசிக்கும்போது வியப்பேற்படுகிறது. எடுத்துக்காட்டாக வண்ணக் களஞ்சியப் புலவர், ஜவ்வாதுப் புலவர், அசனா லெப்பை, பிச்சை இபுராகீம், நயினார்ப் புலவர், நெயினா லெப்பை, செய்தகாதி, குஞ்சுமூசா, அசனலிப் புலவர், மீராசா ராவுத்தர், கண்ணகுமதுப் புலவர், சித்தி லெவ்வை காதிரசனா மரைக்காயர், மகாமதிப் பாவலர் என்று பட்டியல் நீள்கிறது.
நிஷா மன்சூர் பரிந்துரைத்த சில நூல்கள் :
- காதலின் நாற்பது விதிகள் – Elif Shafak
- ரூமியின் ருபாயியாத்
- உமர் கய்யாமின் ருபாயியாத்
- ரூமியின் ஞானப் பேருரைகள்
- சூஃபி வழி – நாகூர் ரூமி
- இதயத்தை நோக்கி திரும்புதல் – உஸ்தாத் ரசூல்
- நீருக்குள் மூழ்கிய புத்தகம் – பஹாவுத்தின் வலத்
- மிர்தாதின் புத்தகம் – Mikha’il Na’imi
- இரகசியங்களின் திரைநீக்கம் – சூஃபியின் டைரி : Ruzbihan Baqli
- சூஃபியிசம் என்றால் என்ன? – மார்ட்டின் லிங்க்ஸ்
- மணல் பூத்த காடு – யாவரும் – யூசுப்
- ஆயிரத்து ஓர் இரவு அரபுக் கதைகள் – சஃபியின் மொழிபெயர்ப்பில் நான்கு தொகுதிகளை உயிர்மை வெளியீடு.
- மார்ட்டின் லிங்க்ஸ் எழுதிய மூலாதாரங்களின் அடிப்படையில் முஹம்மத் ஆகியவையாகும்.
அதுபோலவே இத்துறையில் மதத்துக்கு வெளியிலிருந்தும், உள்ளிருந்தும் எழுந்த மாற்றுச் சிந்தனையாளர்கள் எழுதிய சில நூல்களை முன்மொழிகிறேன்.
- A History of Islamic Philosophy – Majid Fakhry
- The Sufis – Idries Shah
- The Historical Role of Islam – M N Roy
- Tenets of Islam: And Their Role in Society – Swami Vivekananda
- இஸ்லாமியத் தத்துவ இயல் – ராகுல் சாங்கிருதியாயன்
- இஸ்லாம்: மிகச் சுருக்கமான அறிமுகம் – Malise Ruthven
- இஸ்லாமிய ஃபக்கீர்கள் – பரிசல்
- தொடக்க கால இஸ்லாம்: ஒரு சமூக-பண்பாட்டு பார்வை – அனஸ்
- இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – அஸ்கர் அலி எஞ்சினியர்
- தாகங்கொண்ட மீனொன்று :ரூமி –என். சத்தியமூர்த்தி
- பிரபஞ்சத்தை வாசித்தல் – நிஷா மன்சூர்
- இந்திய இஸ்லாமியக் கலை வரலாறு – Solomon Bernard Shaw
- சூஃபி கோட்பாடுகள் – அல்குஷைரி : ரமீஸ் பிலாலி
ஒரு விஷயத்தை தெரிந்துகொள்வது, புரிந்துகொள்வது, உணர்ந்துகொள்வது, அறிந்துகொள்வது, ஏற்றுக்கொள்வது என வெவ்வேறு படிநிலைகள் உள்ளன. ஞானிகளிடம் குரு – சீட மரபில் கற்றுக்கொண்டவர் நிஷா மன்சூர். அவர் கற்றுக்கொடுப்பவராகவும் இன்று உயர்ந்திருக்கிறார். இந்த மூன்று நாட்களில் நிஷா மன்சூர் அள்ளியள்ளிக் கொடுத்த சூஃபிய ஞானத்தை குர்ஜிஃபும், ஓஷோவும் சொன்னதைப் போல என் மனக்கோப்பையில் நிரப்பிக் கொண்டேன்.
கொள்ளு நதீம், ஆம்பூர்.