அன்புள்ள ஜெ,
இந்த கடிதம் தினமும் ஒரு மணி நேரம் செலவழித்து 15 நாட்கள் எழுதியது. எந்த ஒரு செயலையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி நீண்ட நாட்கள் செய்து அந்த செயலில் மூழ்கி நம் ஆற்றலை பெருக்கி அதில் சந்தோசத்தை காண்பது தங்களது வழி. அவ்வழியில் நானும் நடந்து இந்த கடிதத்தை எழுதினேன். இது தங்கள் தளத்தில் வெளிவர வேண்டும் என்ற ஆசையில் எழுதப்பட்டது அல்ல. நன்றியின் கணக்கு. ஆம் தங்களுக்கு என்னுடைய நன்றியை சமர்ப்பிக்கும் விதமாக எழுதப்பட்ட கடிதம். தாங்கள் இந்த கடிதத்தை முழுமையாக படித்தால், என்னுடைய முதல் நன்றி கணக்கு செலுத்தியதன் ஆனந்தத்தை பெறுவேன்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு சில நாட்கள் கடுமையான உளச்சோர்விற்கு ஆளானேன். எனக்கு அணுக்கமான கணித ஆசிரியையான வைஜெயந்தி அம்மாவிடம் ” வாழ்க்கையின் அர்த்தம் என்ன? , என் வாழ்க்கையில் நான் எதற்காக கணிதம் கற்க வேண்டும்? ” என்று கேட்டேன்.
அதற்கு அவர் “வாழ்க்கை அர்த்தமற்றது” என்றார்.
அதற்குப் பெயர் existential crisis என்று இன்று தெரிகிறது. அர்த்தம் கிடைக்காமல் பல நாள் சுற்றினேன். ஒரு கட்டத்தில் மானுடத்திற்கு சேவை செய்வதுதான் அர்த்தம் அளிக்கும் என்று நினைத்தேன். அதன் அடிப்படையில என் வாழ்வில் அனைத்து தீர்மானங்களையும் நிர்ணயித்தேன். அதைவிட எதுவும் முக்கியமல்ல என்று தோன்றியது.
ஆனால் வாழ்க்கையில் அன்றாட சலிப்பு இருந்தது. இன்று இருக்கும் இளைஞர்களுக்கு இருக்கும் சலிப்பு அல்ல. என்றும் பெரும் மாற்றத்துக்குரிய சிந்தனைகள். பெருங் கனவுகள் மனதில் ஓடின . ஆனால் இன்றுள்ள சூழலை கண்டு, அரசியலை கண்டு சலிப்பு தானாக வரும். இது மட்டுமின்றி அனைத்து பாமர மனிதர்களுக்கும் இருக்கும் அசட்டுத்தனமும் என்னுள் இருந்தது என்று தான் சொல்வேன். அது இல்லை என்று நாமே திரை போட்டு மூடி கொள்வோம். அது நம்மை நாமே ஏமாற்றும் சிறந்த வழி. ஆனால் ஆழ் மனதில் அது இருந்தது என்பதுதான் உண்மை.
வாழ்க்கையைப் பற்றிய ஓர் ஒட்டுமொத்த பார்வை இல்லாமல் வாழ்ந்தேன். Climate change, global warming, plastic waste dismanagement, sexual assaults against women, ……… இதுபோல பல விஷயங்களை நினைத்து தினமும் வருந்தும் மனிதனாக வாழ்ந்தேன். எண்ணற்ற மணித்துளிகளை வீணடிக்கும் செயல்களை தினமும் செய்தேன். அவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.
கலை என்றால் என்னவென்று தெரியாது. நவீன இலக்கியம் என்று ஒரு பெருங்கடல் அது கரைகாணமுடியாதது. ஆன்மீகத்தின் மீது ஒரு ஒவ்வாமை. பக்தி மார்க்கம் மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்தது. ஞானமார்க்கம் தென்படவில்லை.
ஆனால் இன்று வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்தது என்று தோன்றுகிறது. தினமும் ஆனந்தத்தில் திளைக்கிறேன். என் மனம் சோர்வு, சலிப்பு என்ற வார்த்தைகளையும் மனநிலைகளையும் முற்றிலும் மறந்து விட்டது. இந்த பிரபஞ்சத்தின் அங்கங்களான சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் மரங்கள் செடிகள் கொடிகள் பறவைகள் பட்டாம்பூச்சிகளுடன் உறவு பாராட்டுகிறேன். உரையாடுகிறேன். என்னை நித்தியம் பெறும் பாதையில் இழுத்துச் சென்ற நித்திய வனத்திற்கும் எனக்குமான கதை இது.
முழுமை அறிவு அமைப்பை சமூக வலைதளங்களில் அறிவித்த பிறகு தொடர்ந்து கேள்விகள் வருகின்றன.
*இவ்வாறு குருகுல வழியாக பயில்வதனால் என்ன பயன்?
*இதை online வழியாக பயில முடியாதா?
*அவ்வாறு நேரில் பயில்வது உகந்தது என்றாலும் அவ்வளவு தூரம் எதற்காக வர வேண்டும்?
*நம் சமூகத்தில் மிகுதியானவர்களுக்கு கற்றல் ஒரு ஒவ்வாமை. இத்தகைய சூழலில் இந்த அமைப்பின் பயன் என்ன?
இத்தகைய கேள்விகளுக்கு தொடர்ந்து எழுத்தின் மூலம் காணொளிகள் மூலம் பதில் அளித்து வருகிறீர்கள். அருவி போன்று கொட்டும் இத்தனை கேள்விகளை காணும் பொழுது , அவை எனக்கான அறைகூவல்கள் என்று தோன்றியது.
எனக்கு “முழுமை அறிவு அமைப்பினால் என்ன கிடைத்தது?”
“நித்திய வனத்திற்கு வந்த பிறகு அங்குள்ள ஆசிரியர்களை சந்தித்த பிறகு என்னுள் என்ன மாற்றம் நடந்தது ?”
“இந்த அமைப்பு என் வாழ்விற்கு அர்த்தத்தை அளிக்கும் செயல்களை செய்ததா?”
இதற்கான விடைகளை எழுத்து மூலம் கண்டு கொள்வதற்காக இக்கதையை எழுத தொடங்குகிறேன்.
முதலில் என் பின்புலத்தை பற்றி நான் சொல்ல வேண்டும் . பள்ளிப் பருவத்தில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை ஒரு நல்ல பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது இந்தியாவின் இருவதாக சிறந்த ‘ரெசிடென்சியல் பள்ளி’யாகவும் தமிழகத்தின் முதல் இடத்தை பிடித்த பள்ளியாகவும் இருந்தது. அது சைனிக் ஸ்கூல் என்று சொல்லப்படும் ராணுவ பள்ளி. உடுமலைப்பேட்டை அருகில் அமராவதியில் உள்ளது.
அங்கே பல ஆளுமைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளிச் சூழலே ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒரு பாதை வகுப்பது என்று சொல்லுவேன். புத்தகங்களை அறிமுகப்படுத்தியதும் அந்தப் பள்ளி தான். மேடையில் பேச வரும் பல இராணுவ தளபதிகள் புத்தகங்களின் முக்கியத்துவத்தை பற்றி சொல்லும் பொழுது அதன் முக்கியத்துவம் தென்பட்டது. பள்ளி முழுக்க புத்தகங்களுடன் அலையும் மாணவர்களை எப்பொழுதும் காணலாம்.
ஆனால் என்னுடைய துரதிஷ்டம் நான் பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு செல்லும் பொழுது கொரோனா வந்தது. Online வகுப்புகள் ஆரம்பித்தது. என் பள்ளியை இழந்தேன். Online வகுப்புகளில் ஒரு சிலந்தியின் வலையில் பூச்சிகள் சிக்கிக் கொள்வது போல் அனைவரும் மாட்டிக் கொண்டோம்.
சமூக வலைதளங்கள் என்னை பாமர சினிமாவில் சிக்க வைத்தன. உண்மையில் Online வகுப்புகளால் சமூக வலைதளங்களில் சிக்கி நான் இழந்ததை எண்ணிப் பார்த்தால் நேரக்கணக்கில் குறைந்தது 1000 மணி நேரங்களாவது இருக்கும். அது என்றும் என் வாழ்வில் திரும்பவே திரும்பாது . இதை ஒரு சில மாதங்களில் உணர்ந்த பின் நானாகவே சமூக வலைதளங்களில் இருந்து வெளி வந்தேன். படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினேன். கைபேசியை எவ்வளவு பயனுள்ளதாக பயன்படுத்த முடியுமோ பயன்படுத்தினேன்.
ஆனால் உண்மையில் என் வாழ்வின் முக்கியமான தருணங்களை இழந்தேன் என்பதுதான் உண்மை. நேரடி வகுப்புகள் இல்லாமல் ஒரு தேக்க நிலையில் தான் இருந்தோம். தரவுகளை தெரிந்து கொண்டாலும் ஆளுமையை செதுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. Online வகுப்புகளின் மிகப்பெரிய அரக்கத்தனம் என்னவென்றால் கவனச் சீரழிப்பு. கவனிக்கும் திறனை முற்றிலும் இழந்தேன். கவனம் இன்றி வாழ்வது செத்த பிணத்திற்கு சமமான ஒரு வாழ்க்கை அல்லவா.
ஜெட் வேகத்தில் 12 ஆம் வகுப்பு முடிந்தது. கல்லூரிக்கு செல்ல வேண்டிய காலம் வந்தது. இந்தியாவில் சிறந்த கல்லூரிகளில் அது ஒன்று என்று பெயர் பெற்ற தனியார் கல்லூரி. ஆனால் கல்லூரியில் நான் நினைத்த சூழல் அமையவில்லை. நான் பள்ளியில் பார்த்த சூழலுக்கு நேர் எதிர் மாறான இடமாகத்தான் அது இருந்தது.
கல்லூரியில் அனைத்து நண்பர்களும் முழு நேர ரீல்ஸ் கண்டு அதை பகிர்ந்து சிரித்து குதித்து ஊளையிட்டு நேரத்தை செலவிட்டார்கள். புத்தகம் என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரியாது. நான் புத்தகம் படித்தால் ‘என்ன புத்தகம் படிக்கிறாய்?’ என்று கேட்டுவிட்டு ஒரு புன்னகையுடன் சென்று விடுவார்கள்.
Snapchat ல் streak எவ்வளவு உள்ளது, Instagram ல் எவ்வளவு followers இருக்கிறார்கள் என்பதுதான் அவர்களின் கவலைகள். என்னிடம்
” என்ன bro insta லே கூட இல்லையா?” என்று கேட்பார். புத்தகங்களை பகிர்ந்து அவற்றைப் பற்றி உரையாடுவதற்கு சக நண்பன் ஒருவன் எஞ்சவில்லை.
காட்டில் வாழும் ஒரு ஒற்றைக் குரங்கின் நிலையே என் நிலை. அனைவரும் என்னை வியப்பாக பார்ப்பார்கள். ” எப்படி உனக்கு இவ்வளவு தெரிந்து உள்ளது ? எவ்வாறு இவ்வளவு படிக்கிறாய் ? ” என்ற கேள்விகளை அடிக்கடி எதிர் கொள்வேன். இந்தக் கேள்விகள் எனக்கு சோர்வை ஊட்டியது. தனிமையின் சோகம்.
இது நண்பர்களால் அளிக்கப்பட்ட சோர்வு. ஆனால் நண்பர்களால் மட்டும் சோர்வழிக்கப்படவில்லை. பொறியியல் கல்லூரியில் நடத்திய பல ஆசிரியர்கள் இடமிருந்தும் தான். பொறியியலைகூட உள்ள syllabus படி மட்டும்தான் கற்க வேண்டும். அதைத் தாண்டி எதுவும் கற்றுக் கொடுக்கப்படாது. அதை தாண்டி கேட்டாலும் “அதை வேற எப்பவாவது கேளு , அதற்கான நேரம் இது இல்லை, இது syllabus இல் இல்லை” என்று பதில்கள் தான் வரும்.
பள்ளி காலகட்டத்தில் ஏழு வருடம் ஆசிரியருடன் தினமும் உரையாடிக் கொண்டே இருந்தோம். ஆனால் இங்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆசிரியர் மாறுவார். ஆசிரியருக்கும் மாணவருக்குமான ஒரு தொடர்பே இருக்காது. ஒரு commercial வணிகத் தொடர்பு போல் தான் பெரும்பாலும் இருக்கும். பணம் கட்டுகிறோம் அதற்காக அவர்கள் வந்து அந்த ஒரு மணி நேரம் பேசிவிட்டு செல்கிறார்கள். அவ்வளவுதான்.
பொறியியலாளர்களுக்கு அரசியலமைப்பை பற்றி ஒரு பொதுவான புரிதல் இருக்க வேண்டும் என்பதனால் எல்லா கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் அரசியலைப்பு உள்ளது. அதற்கு மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. வாரத்திற்கு ஒரு வகுப்பு. அரசியலமைப்பு பற்றி ஒன்றுமே தெரியாத mechanical engineering ஆசிரியர் எங்களுக்கு வகுப்பு எடுக்க வந்தார்.
ஒரு பருவத்திற்க்கு 12 வகுப்புகள் உண்டு. அந்த ஆசிரியர் வகுப்பில் உள்ள 60 மாணவர்களை 12 குழுக்களாக பிரித்தார். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு குழு seminar நடத்த வேண்டும். அவர் ஒரு தோரணையோடு பின் பக்கத்தில் சென்று உட்கார்ந்து கொள்வார். அரசியலமைப்பு என்றால் என்னவென்று தெரியாத மாணவர்களை கேலி செய்வார். கொச்சை வார்த்தையால் திட்டவும் செய்வார். நான் அரசியலமைப்பை குறித்து பொதுவான புரிதல்களையும் அது சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் அந்த காலகட்டத்தில் படித்திருந்தேன். ராமச்சந்திர குஹா, சசி தரூர், சகாரிகா கோஷ் எனக்கு அணுக்கமானவர்கள்.
ஓட்டுரிமையை பற்றி நான் பேசத் துவங்கினேன். அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய உரை அது. அதை நான் இவ்வாறு தொடங்கினேன் “In legal terms Right to vote is called ‘Universal Adult Suffrage’ “.
இந்த வார்த்தைக்கான விளக்கங்களை அளிப்பதற்கு முன் அந்த ஆசிரியர் என்னை பார்த்து “எதையாவது உளராதே ” என்று கத்தினார். நான் வாயடைத்து போய் நின்றேன். கடைசியில் அந்த semester-ன் முடிவில் அரசியலமைப்பை பற்றி எவருக்கும் எதுவும் தெரியவில்லை. அனைவரும் ‘pass’. இந்தியக் குடிமகனுக்கு உள்ள அடிப்படை உரிமைகள் ( Fundamental Rights) என்னவென்று கேட்டால் என் நண்பர்களால் பதில் சொல்ல முடியாது. அவர்களுடைய நிலை பரிதாபத்துக்குரியது. எனக்கு என் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் தேடலை திருப்தி படுத்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவ்வாறு அந்த சிலந்தி வலையில் மட்டிக் கொண்டிருந்த பொழுதுதான் தற்செயலாக ஒரு நண்பரினால் யோக வகுப்பிற்கு ஆகஸ்ட் 2023 ல் வந்தேன். இந்த பிரபஞ்சம் எனக்கு பெரும் பரிசுகளை அளிக்க காத்திருந்தது என்று என்னிடம் அன்று சொல்லி இருந்தாள் சிரித்திருப்பேன்.
எனக்கு தெரியாத ஒரு உலகம். அனைவரும் புத்தகங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் நாவல்கள் சிறுகதைகள். அதுவரை நான் படிக்காத புத்தகங்கள். பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனக்கு முதலில் கிடைத்தது ராஜேஷ்குமாரின் நாவல். ஒரே வாரத்தில் வீசி எறிந்து விட்டு ஒன்றரை வருடம் தமிழ் படிக்கவில்லை. தமிழை கூட்டி வாசிக்கும் நிலை. வணிக இலக்கியங்களைப் படித்து கதைகள் மேலும் நாவல்களின் மேலும் பெரும் ஒவ்வாமை இருந்தது. பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு புனைவுகளையே தொடவில்லை .
ஆனால் இங்கு உள்ள அனைவரும் ஒரு நாவலினால் சிறுகதையினால் அடைந்த அனுபவங்களை பற்றி பகிரும் பொழுது எனக்கு ஆசை ஊற்றெடுத்தது. ஆனால் வாசிக்க முடியவில்லை. தமிழ் படித்திருந்தால்தானே. கொஞ்சம் கொஞ்சமாக படிக்க ஆரம்பித்தேன். யோகம் உளக்குவிப்புக்கான பல பயிற்சிகளை எனக்கு அளித்தது. என்னுடைய முதல் இலக்கிய நண்பர் ஷேக் முகமது அண்ணாவும் அந்த முகாமில் தான் கிடைத்தார்.
அதன் பிறகு ஆலைய கலை. ரசனை ஏதோ ஒரு மூலையில் என்னுள் புதைந்து கிடந்தது. ஆல் கடலில் மட்டும் பொக்கிஷத்தின் ஒரு ரூபமாக இருக்கும் கடல்பாசியை எடுப்பது போல ஆசிரியர் ஜெயக்குமார் ரசனையை எடுத்து தந்தார். வகுப்பு முடிந்தவுடன் அந்த பொக்கிஷத்தை பேணி மைசூர் மாளிகைக்கு அழைத்து சென்றேன். அந்த பொக்கிஷம் என்னை ஒரே ஒரு தூண் முன்னால் ஒரு மணி நேரம் அதனுடன் மனமார உரையாட செய்தது. அதே பொக்கிஷம் என் வாழ்விற்கு அர்த்தத்தை தந்தது . ஆம் அந்த பொக்கிஷம் என்னை ஒரு பித்து நிலையிலேயே நடமாட செய்தது. “வாழ்வு இனிது, வாழ்வு அழகானது” என்று தலை முழுக்க ரிங்காரம் இட்டுக் கொண்டே இருந்தது. கலை தரும் இனிப்பை முதல் முதலில் சுவைத்தேன். தேனையும் விட இனிப்பாக இருந்தது. தேனைப் போல உடனே நாவில் கரையாமல் நீண்ட நாட்கள் நீடித்தது.
மைசூரில் அடுத்து ஹம்பீக்கு . இரண்டு நாட்கள் போதவே போதவில்லை. ஆலயக் கலை பயிற்சி இல்லை என்றால் ஒரு நாளில் கூட சுற்றிப் பார்த்திருப்பேனோ என்ற பயம் திடுக்கிட செய்தது. விஜய் விட்டல கோயிலில் உள்ளே செல்வதற்கு முன்னால் அங்குள்ள guide என்னை அழைத்து ” இந்த கோயிலை பார்க்க குறைந்தது ஒரு மணி நேரம் தேவை …. 600 ரூபாய் கட்டணம்” என்றார். “இல்லை வேண்டாம்” என்று சொல்லிவிட்டேன். ஒரு நாள் முழுக்க அந்த பிரம்மாண்டமான ஆலயத்தில் செலவழித்தவுடன் அதில் கிடைத்த நிறைவு வேறு. அது அந்தக் கலையை ரசிக்கும் திறன் கிடைத்ததால் உண்டான ஆனந்தம். முதல் முதலாக குழந்தை நடக்கத் தொடங்கிய பிறகு கால் கொலுசை அணிவிப்பார்கள். அந்தக் குழந்தை துள்ளி குதித்து வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் அங்கும் இங்கும் அந்த சத்தத்திற்காக ஓடுமே. அந்த சத்தத்தில் கிடைக்கும் ஆனந்தத்திற்காக ஓடுமே. அது போன்ற நிகரற்ற ஆனந்தம்.
அதே ஆலயக் கலை வகுப்பில் தான் ஒரு சில இலக்கிய நண்பர்களின் நட்பு கிடைத்தது. வகுப்பை முடித்து வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது சதீஷ் அண்ணா நீங்கள் எழுதிய நான்கு வேடங்கள் கட்டுரையை படிக்க சொன்னார். அடுத்த நாள் காலை பெங்களூரில் இருந்து மைசூர் செல்லும் ரயில் பயணத்தில் படித்தேன். அன்று அந்த கட்டுரையை படித்து முடிக்க 2 மணி நேரம் ஆயிற்று. ஆனால் அது வேறு அனுபவத்தை தந்தது என்றே சொல்லுவேன். பள்ளிக்காலங்களில் எத்தனையோ self help books படித்திருக்கிறேன். அந்த புத்தகங்கள் அனைத்தையும் தராசின் ஒரு பக்கத்தில் வைத்தால் கூட அது மேலே தொங்கிய வண்ணம் இருக்கும் . அந்தக் கட்டுரையின் எடை அத்தகையது.
அடுத்ததாக தியான வகுப்பு. உண்மையில் அந்த வகுப்பில் சிறந்த அனுபவங்கள் தியானம் செய்கையில் கிடைக்கவில்லை . அதற்குக் காரணம் நான் யோக பயிற்சி தினமும் செய்யாமல் இருந்தது. உளக்குவிப்பு மிக கடினமாக இருந்தது. ஆனால் குரு தில்லை செந்தில் அவர்களின் ஆளுமை மனதில் வேரூன்றி இருந்தது.
புத்தருக்கு இருக்கும் ஓர் அமைதி . அதே புத்தருக்கு இருக்கும் ஒரு புன்னகை. தேவை இருந்தால் மட்டும் பேசக் கூடியவர். நுட்பமாக அனைத்தையும் கவனிப்பவர். வகுப்பில் மட்டும் எங்களுடன் சேர்ந்து தியானம் செய்யாமல் எப்பொழுதும் தியான நிலையிலே இருந்தார். தியானம் என்று அந்த நிகரற்ற கவனத்தையே சொல்கிறேன்.
வகுப்பு முடிந்தவுடன் தினமும் செய்ய தொடங்கினேன். காலம் கனிய எனக்கு நானே சமாதானம் சொல்லி ஒவ்வொரு நாளாக தள்ளிப் போட்டேன். தினமும் தியானிக்காமல் ஒரு ஞானத்தை இழந்து விட்டேன்.
இன்னொரு முறை online வழியாக ஏழு நாள் குரு தில்லை அவர்களிடம் கற்றேன். வகுப்பு முழுக்க video On-ல் இருந்தது. வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களை தினமும் அளிக்கிறது. தொடர்ந்து 90 நாட்களாக செய்து வருகிறேன். கவனத்தின் விளைவாக வாழ்வில் இதுவரை அடையாது அனுபவங்களை அனுபவிக்கிறேன். அந்த அனுபவங்கள் அனைத்தும் ” a result of combination of தியானம் + இலக்கியம் + ஆன்மீகம் + குருவின் ஆளுமை என்று சொல்லலாம். “
இதில் குறிப்பிடத்தக்க ஒன்று , என் தங்கையும் முதல்முறையாக பள்ளியிலிருந்து வந்ததனால் என்னுடன் தியானம் online வழியாக கற்றாள். அவள் அதை முற்றிலும் மறந்து விட்டாள். குருகுலம் வழியாக நேரில் கற்றதுனால் தான் இந்த online வகுப்பு கூட சாத்தியமானது. குருஜி சௌந்தர் குருஜி தில்லை அவர்களின் ஆளுமை தான் ஆழ்மனதில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக சாத்தியமானது. அனுமன் இமயமலை வரை சென்று சஞ்சீவினி மலையை தூக்கி வந்ததனால் தான் அது சஞ்சீவினி. அந்த மலை இலங்கையிலேயே இருந்திருந்தால் சஞ்சீவினி கூட சீமை கருவேலைக்கு இணையானதாகத்தான் தென்படும். மகத்துவம் தெரியாமல் வைரத்தை இழப்பது நாம் தான்.
அதன் பிறகு பைபிள் வகுப்பு. காந்தியை பாதித்த புத்தகங்களில் பைபிளும் ஒன்று என்று சிறுவயதிலேயே படித்திருந்தேன். ஆனால் தனியாக படிப்பது முடியாத ஒரு காரியமாக இருந்தது. காந்தியை எது பாதித்தது என்று கண்டடைவதற்காக தான் அந்த வகுப்பிற்கு வந்தேன் .
பைபிள் வகுப்பிற்கு ஒரு சிறப்பு உண்டு. அங்கு தீவிரமாக இலக்கியம் படிக்கும் நண்பர்கள் மட்டும்தான் வருவார்கள். என் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனைகள் அங்கு தான் தொடங்கியது. முக்கியமான இலக்கிய நண்பர்கள் கிடைத்தது அங்குதான். என்னுடைய முதல் இலக்கிய ஆசிரியர் அன்புடைய வடிவமான ஜி .எஸ். எஸ். வி. நவீன் அண்ணா எனக்கு கிடைத்தார். காரிருள் ஒருவனை சூழ்ந்துள்ள பொழுது சின்னஞ்சிறு வெளிச்சத்தை கண்டால் கிடைக்குமே ஒருவன் அளவற்ற இன்பத்தை அடைவான். எனக்கோ மகத்துவமான பெரு வெளிச்சங்கள் கிடைத்தன. இந்த வெளிச்சத்தினால் மகிழ்ச்சியும் கிடைத்தது . அந்த வகுப்பில் தான் நானும் ஜெகன் அண்ணாவும் இரவு 12 மணி வரை சாப்பாட்டு அறைக்கு வெளியில் உரையாடிக் கொண்டிருந்தோம். இலக்கியத்திற்கும் வாசிப்பிற்கும் அடிப்படையான விஷயங்கள் எனக்கு விளக்கினார்.
சோற்றுக்கணக்கு கதை என் கைப்பேசியில் offline வடிவத்தில் இருந்தது. அதைப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் படித்த முதல் நவீன இலக்கிய கதை. ஞான விருட்சம் என்று அறியப்படும் குடை போல விரிந்து கிடைக்கும் தோதகத்தி மரத்தின் அடியில் தான் படித்தேன். மதிய நேரத்தில் முழுமையாக படித்து முடிக்க இரண்டு மணி நேரம் ஆயிற்று. கெத்தேல் சாஹிப் ஆழமாக பாதித்தர் .
இரவு 12 மணிக்கு சோற்றுக்கணக்கு கதை விவாதத்தை நானும் ஜெகன் அண்ணாவும் நடத்தினோம். ஒரு ஆழமான உரையாடல். அது போன்ற உரையாடலை நடத்த வேண்டும் என்றால் குறைந்தது அந்த மனிதரிடம் 30 மணி நேரமாவது நான் செலவழித்து இருக்க வேண்டும். ஆனால் அது என்னுடைய முதல் சந்திப்பு. வந்ததோ பைபிள் வகுப்பிற்கு. பைபிளிருக்க கூடுதலாக எண்ணற்ற விஷயங்களுக்கு அறிமுகமானேன். இங்கு அறிவு இயக்கம் என்று ஒன்று உள்ளது என்று தெரியாமல் காட்டில் தன்னந்தனியாக அலைந்தவனிடம் அறிவு இயக்கத்தின் கதவுகள் அருகில் இழுத்து வந்து திறந்து செல்லும் சாவிகளையும் எனக்கு அளித்தனர்.
கவிஞர் தேவதேவனுடன் இரவு ஒரு மணி நேரம் பேசினோம். அவர் பேசியதில் எதுவும் புரியவில்லை. ஏனென்றால் நான் ஆரம்ப கட்ட அந்த விளிம்பில் நின்றிருந்தவன். ஆனால் அவர் ஆளுமை இன்னும் ஆணி அடித்தது போல் பளிச்சென்று என் தலையில் இன்னும் உள்ளது. என்றென்றும் இருக்கும். ஒரு குழந்தை வயதான தாத்தாவாக மாறினால் எவ்வாறு இருக்கும். அது போன்ற ஒரு ஆளுமை. நான் வளர வளர என் ஆளுமையில் அவருடைய ஆளுமை கண்டிப்பாக பிரதிபலிக்கும். ஆம் என் ஆழ்மனதில் அச்சடிக்கப்பட்டுள்ளதால் என்றென்றும் பிரதிபலிக்கும். நானும் குழந்தையாக மாறும் ஒரு பயணத்தில் உள்ளேன். அந்த அனுபவங்கள் அன்பையே வழங்கும் அருவியாக என்னை வளர்த்தெடுக்கும் .
மேலும் சிறல் அலெக்ஸ் சார் , கிருஷ்ணன் சார்,பிரியம்வாத அக்கா, அருண்மொழி அண்ணா, ஞானசேகர் அண்ணா , சரண்யா அக்கா, ……. என்று பல நண்பர்கள் கிடைத்தனர். இவர்கள் அனைவருடனும் உரையாடுவதனால் கற்றலின் தீவிரத் தன்மை பொங்கி எழுகிறது.
சமீபத்தில் கூட காந்தி ,வினோபா, கே சி குமரப்பா , ஜெயபிரகாஷ் நாராயணன் , காமராஜர் போன்ற பெருந்தலைவர்களுடன் பணியாற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மையாரை காணும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பார்க்கச் செல்லுகையில் என்னுடன் சரண்யா அக்காவும் கலைவாணி அக்காவும் வந்திருந்தனர். அம்மையாரை தரிசித்த பிறகு மதுரை காந்தி கண்காட்சியகத்திற்கும் மீனாட்சியம்மன் கோயிலுக்கும் சென்றோம். என் உடன் பிறந்த தோழிகள் போல பழகினார்கள். அது போன்று தெரியாத பெண்களிடம் நெருங்கி பழகுவதற்கு இரண்டு மூன்று மாதங்களாவது எனக்கு தேவைப்படும். சரண்யா அக்காவை கிண்டல் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி கிடைத்தது . அதைவிட மகிழ்ச்சி கற்றலின் பொருட்டு வாசித்ததை படித்ததை உரையாடுவதனால் கிடைத்தது. வாழ்வை அர்த்தப்படுத்தியது. இது போன்ற நண்பர்கள் கிடைப்பதற்கு உண்மையில் ஒருவன் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த மனித உறவுகள் என் வாழ்விற்கு எண்ணற்ற அர்த்தங்களை தருகிறார்கள்.
பித்து பிடித்தது போல் தமிழில் முழுமையாக வாசித்து முடித்த முதல் நூல் தன் மீட்சி. என்னை முழுமையாக உடைத்து சீரமைத்தது . இவற்றைப் படிக்கையில்தான் நான் நள்ளிரவு ஒரு மணிக்கு நவீன் அண்ணாவை அழைத்தேன். “நான் ஜெயமோகன் சாரை பார்க்க வேண்டும்” என்று உடம்பில் உள்ள அனைத்து செல்களும் கொதிக்க கேட்டேன். என் பாக்கியம் தாங்களும் வெள்ளிமலையில் தான் இருந்தீர்கள். மூன்றாம் நிலை தத்துவ வகுப்பிற்கு இரண்டு நாள் முன்பே அங்கு சென்றீர்கள். நவீன் அண்ணா “நீ சாரைப் போய் பாரு” என்றார் . அந்தியூர் மணி அண்ணாவிடம் நான் வருகிறேன் என்று சொல்லவில்லை. சொன்னால் வர வேண்டாம் என்று சொல்வதற்கு கூட வாய்ப்பு உள்ளது. கமுக்கமாக கரப்பான் நுழைவது போல் நித்திய வனத்திற்குள் நுழைந்தேன். வாழ்வின் அடுத்த திருப்புமுனை எனக்காக காத்திருந்தது.
உபநிஷத் என்ற சொல் தரும் அர்த்தத்தை செய்ய வந்தேன். ஆம் குருவுடன் அருக அமர்வதற்காக வந்தேன். அந்த இரண்டு நாட்கள் தெளிவாக நொடி நொடி ஆக மனதில் பதிந்துள்ளது. தங்களுடைய ஆளுமை தான் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உடனடியாக ஏற்படுத்தவில்லை. ஆனால் காலம் கனிய கனிய என்னால் உணர முடிகிறது. செயல் புரிந்து மகிழ்ச்சி பெறுகிறேன். ஒவ்வொரு நாளும் தாங்கள் ஒரு நாளை செலவிட்டது போல செலவிடுகிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு வியப்பூட்டும் விஷயத்தை கவனித்தேன். நான் என் உணவைச் சாப்பிட்டபோது, என் உணவை மென்று சாப்பிடும் விதம் தங்களைப் போன்று இருந்தது. ஒரு குருவினுடைய ஆளுமை நன்கு மனதில் பதிந்திருந்தால் ஒரு மனிதன் தன் வாழ்வில் அந்த குரு எட்டிய தூரத்தை எட்ட முடியும் என்று தோன்றியது. தங்களைப் பின்பற்றி ஆனந்தத்திற்கான பாதையில் என்னை அறியாமல் செல்கிறேனோ என்று தோன்றுகிறது.
நம்முடைய கல்விச் சூழல் குழந்தைகளின் மேல் மனப்பாடக் கல்வியை புகுத்துகிறது. அதனால் கற்றலின் மீது பெரும் ஒவ்வாமை வேரூன்றி உள்ளது. அதன் தாக்கம் சிறிதேனும் என்னுள் இருந்தது. தாங்கள் எனக்கு சிந்திக்க கற்றுத் தந்தீர்கள். என்னுள் உள்ள அனைத்து கற்றல்களும் அறிவாக மாறுவதற்கான பிரம்மாஸ்திரத்தை தந்தீர்கள் . ஒரு கேள்வியை கேட்க கூட அன்று எனக்கு தெரியவில்லை. இன்று பல மாற்றங்கள் நிகழ்த்தியுள்ளது.
ராமேஸ்வரம் பயணம் முடித்து தங்களை மதுரை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வருகையில் கிருஷ்ணன் சாரடம் ஒரு கேள்வி கேட்டேன். “தங்கள் 18 வருடங்களாக ஜெயமோகன் sir உடன் பயணிக்கிறீர்கள். அவரிடமிருந்து கற்றுக் கொண்டது என்ன?” என்றேன். அவர் அதில் முதலாவதாக சொன்னது “சிந்திப்பது தான் ” என்றார்.
தங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் . “குரு நித்யாவிடம் இருந்து தாங்கள் கற்றுக் கொண்டது என்ன ?” என்றேன். தாங்களும் முதன்மையாக சொன்னது “சிந்திப்பது தான்” என்று கூறினீர். அதை தாண்டி ஆளுமை வழியாகவும் என்றீர்கள் (I DON’T TEACH ANYTHING, I ALLOW MY STUDENTS TO BE WITH ME என்றார் நித்யா).
அது குருவுடன் இருக்கையிலே நிகழும் என்றீர்கள். அதற்கு கவனம் மிக முக்கியமானது. குரு செல்லும் அனைத்தையும் மறவாமல் இருப்பது முதன்மையானது. அவ்வாறு இருந்தால் ‘ஒரு குதிரை ஓடுவதை பார்த்து பார்த்து இளம் குதிரை ஒன்று ஓட தொடங்குவது போல‘ நாமும் குருவுடன் இணைகிறோம். குரு கூறுவதை கூர்மையாக கவனித்து அவர் எங்கெல்லாம் தாவுகிறாரோ (jump) அங்கெல்லாம் அவர் மனமுடன் சேர்ந்து நாமும் தாவுகிறோம் . ஒரு கட்டத்தில் தனியாக தாவும் ஆற்றலை பெறுகிறோம்.
சிந்தனையின் உதாரணமாக ஒரு கேள்விக்கு நித்தியா எவ்வாறு பதில் அளித்தார் என்று கூறினீர்கள் .
நித்யாவிடம் ஒருவர் ” எனக்கும் குடும்பத்திற்கும் என்றென்றும் ஆகாது. அந்த அமைப்பில் என்னால் வாழ முடியாது” என்று புலம்பினார்.
அதற்கு நித்தியா ” குரங்குகள் போன்ற விலங்குகள் ஒன்றோடு ஒன்று கூடி வாழ்கின்றன. அதன் நீட்சியாகவே மனிதர்களும் கூடி வாழ்கிறார்கள். ‘கூடுதல்‘ என்ற வார்த்தையில் இருந்து ‘குடும்பம்‘ என்ற சொல் உருவாகியது. மனிதர்கள் கூடி இருக்கும் எல்லா அமைப்புகளுமே ஒரு வகையில் குடும்பத்தின் வெளிப்பாடு. இந்த வகுப்பும் சரி ஒரு நாடும் சரி அவை அனைத்தும் குடும்பத்தின் வடிவங்களே. அவ்வாறு இருக்க நீ எவ்வாறு ஒரு குடும்ப அமைப்பில் இல்லாமல் இருக்க முடியும் ? ” என்றார்.
மாலை நடை செல்லுகையில் சிந்தனை என்றால் என்ன. ஒரு சிந்தனையாளன் எவ்வாறு சிந்திப்பான் என்று உதாரணங்களுடன் விளக்கினீர்கள். முதலாவதாக வரதட்சணை குறித்து. அடுத்ததாக நில உடைமை குறித்து. தாங்கள் ஆராய்ந்து சிந்தித்த விதத்தில் ஒரு சராசரிக்கும் ஒரு சிந்தனையாளனுக்கும் உள்ள வேறுபாடு எனக்கு தென்பட்டது .
அதன் பிறகு பல விஷயங்களை அந்த thinking pattern-ல் சிந்தித்தேன். அவ்வாறு சிந்திக்கையில் பல விஷயங்களை இணைக்க முடிகிறது. உண்மையில் மனப்பாடம் செய்து தரவுகளை தெரிந்து கொள்வது சலிப்பை மட்டும் தான் ஊட்டும். ஒரு மையத்தை கொண்டு சிலந்தி தன் வலையை பல இடங்களுடன் இணைக்கும். அதுபோன்ற பலதரப்பட்ட தரவுகளை ஒரு மையம் சார்ந்து கோர்க்கும் திறனை பெற்றேன். அவ்வாறு சிந்திக்கையில் ஆழ் மனதில் என்றோ படித்தது கூட நினைவிற்கு வருகிறது. அது எண்ணற்ற ஆனந்தத்தை அளிக்கிறது.
உண்மையில் இது ஆனந்த பயிற்சியே. படித்த அனைத்தையும் மூளைக்குள் அடக்கி Hard-disk ஆக இல்லாமல், அவை அனைத்தையும் நூல் விட்டு கோர்க்கும் இயந்திரமாக மாறினேன். மீனை தூண்டில் விட்டு பிடிப்பது போல பல வருடங்களுக்கு முன்னால் எங்கோ ஆல் மனதில் புதைந்து கிடக்கும் தகவல்களை கூட சிந்தனையாக மாற்ற முடிகிறது. அவ்வாறு எண்ணங்களை தூண்டில் விட்டு பிடித்தவுடன் உற்சாகம்மும் புத்துணர்ச்சியும் பொங்குகிறது. அந்த உற்சாகம் அடுத்தடுத்து சிந்திப்பதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.
சிந்திப்பது எதிர்மறை தன்மைகளை அனைத்தையும் நீக்கி என்னை நேர்நிலை தன்மை கொண்டவனாக மாற்றியது. ஒரு ஒட்டுமொத்த பார்வையை எனக்கு அளித்தது. மதிப்பு இல்லாத அரசியல் சர்ச்சைகளையும் எதிர்மறை செய்திகளையும் ஒருபோதும் செவி சாய்க்காமல் இருக்கிறேன். அற்ப செயல்களில் இருந்து முற்றிலும் விலகி உள்ளேன்.
கிருஷ்ணன் சாரிடம் இதைப் பற்றி பேசுகையில் செய்யக்கூடாத மூன்று விஷயங்கள் சொன்னார்.
1. மானிடகுலத்தையே ஒட்டுமொத்தமாக( Macro) தொகுக்கும் பொத்தாம் பொதுவான சிந்தனைகளை செய்யக்கூடாது. நடைமுறைசார்ந்து , தனிமனிதர்கள் சாந்து Micro level-லில் சிந்திக்க வேண்டும்.
2. ஒரு எண்ணம் (ஐடியா) தரும் உடனடிக் கவர்ச்சியில் சிக்க கூடாது ( charisma of idea ). அது மேலும் சிந்திப்பதை தடை செய்யும்.
3. ஒற்றைத் தரப்பிற்கு எடை அதிகமாக கொடுக்கக் கூடாது (Disproportionate thinking) . அதில் ஒரு கவனம் தேவை .
வாசிப்பு பயிற்சியும் ஒரு வகை சிந்தனை பயிற்சியே. சிந்தனையாளர்களின் எழுத்தை deconstruct செய்து தெரிந்து கொள்கிறோம். உதிரி சொற்களையும் தொடர்களையும் நினைவில் வைக்காமல் ஒரு ஒட்டுமொத்த சித்திரமாக நினைவில் வைக்கின்றேன். தங்களுடைய unified wisdom youtube காணொளிகளையும் மற்ற உரைகளையும் வகுப்புகளையும் blinkers-அக மாற்றி தொகுக்க முடிகிறது.
தத்துவ வகுப்புகளை பற்றி கூற எனக்கு தகுதி இல்லை. அதை முழுமையாக கற்காமல் அதை விவாதிக்க கூடாது என்றீர்கள். தத்துவ வகுப்பை தவிர்த்து காலை நடைகளிலும் மாலை உரையாடல்களிலும் எண்ணற்ற விஷயங்களை கற்றேன். அனைத்தும் நினைவில் உள்ளது. முன்பெல்லாம் நினைவில் நிறுத்துவது இமயமலை ஏறுவதற்கு இணையான கடினமான செயலாகத் தோன்றும். தங்களை கண்ட பிறகு அந்த எண்ணம் முற்றிலும் நீங்கியது. நினைவு நிறுத்துவதனால் கல்வியும் கற்கும் தீவிர தன்மையும் பல மடங்கு பெருகியுள்ளது.
இது போன்ற அனுபவங்கள் online வலி கல்வியில் துளியேனும் சாத்தியமில்லை. திட்டவட்டமாக மேல் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இல்லை. ஆனால் எண்ணற்ற அனுபவங்களை எழுத்தின் மூலம் கண்டுலேன். இந்த அனுபவங்கள் அனைத்திலும் ஆழமான விடை கண்டேன் என்று நினைக்கிறேன்.
இரு பெரும் நிலைகள் என்ற தலைப்பில் தாங்கள் ஆற்றிய கட்டண உரையில் ஐந்து கோசங்களை சொன்னீர்கள். இந்து மரபு சொல்லும் ஐந்து ஆனந்த நிலைகள். உச்சகட்ட ஆனந்தங்களாக சொல்லப்படுவது விஞ்ஞானமய கோசமும், ஆனந்த மயக்க கோசமும் தான் . விஞ்ஞானமய கோஷம் என்பது கற்றலின் வழியாக உருவெடுக்கும் மகிழ்ச்சி. ஆனந்த மயக்கம் என்பது எதற்கு மகிழ்கிறோம் என்று தெரியாமல் மகிழ்வது.
இந்த இரண்டு நிலைகளில் தினமும் நடனமாடுகிறேன் .
நன்றி!!!
அன்புடன்,
சபரீஸ்குமார்.