ஏ வி மணிகண்டன்- காட்சிக் கலை வகுப்பு- ஜெயராம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஆசிரியர் தின வாழ்த்துகள்!

முதலில் முழுமையறிவு கல்வியின் பகுதியாக காண்பியல் கலைக்கும் இடம் அளித்ததற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இலக்கியத்தை வாசிக்க உரையாட இங்கே பெரியளவில் வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக உங்களை மய்யமாக கொண்டு உருவான சூழலில். அதை போல காட்சி கலைகளுக்கான கல்வியும் உரையாடலும் நடக்க ஏதாவது வழி உண்டா என்று ஏங்கியதுண்டு. அதற்கு மிகச்சிறந்த தொடக்கமாக வி மணிகண்டன் நடத்திய மூன்று நாள் வகுப்பு இருந்ததுஅறிந்தும் அறியாமலும் இன்று நம் அன்றாட வாழ்க்கையிலும் ஆளுமையிலும் பெரிய அளவில் பாதிப்பை செலுத்தியிருக்கும் மேற்கத்திய காண்பியல் கலையின் ஆன்மாவை இலக்கிய வாசகர்களுக்கும் அல்லாதவர்களுக்கும் அறிமுகப்படுத்த வி மண்கண்டன் அளவிற்கு ஒரு நல்ல ஆசிரியர் கிடைப்பது கடினம். ‘படிமங்களை பயில்தல்என்பதே ஆசிரியர் வகுப்பிற்கு வைத்த தலைப்பு. எல்லா கலைக்கும் அதை ரசிப்பவர்களுக்கும் படிமம் என்பது பொதுவானது. அதனால் இலக்கிய வாசகர்கள் முதல் கலைஞர்கள் வரை அனைவரும் தவறவிடக் கூடாத வகுப்பு இது

புகழ்பெற்ற இடக்கை கலைஞரான ஞெரளத்து ராம பொதுவாளின் மகனான ஞெரளத்து ஹரிகோவிந்தன் அறிவை பற்றி பாடிய ஒரு பாடலுடன் வகுப்பு துவங்கியது. இசை என்பது தூய கலை. ஆனால் அக்கலையில் தூய அறிவை பற்றி பாட முடியும் என்ற சாத்தியம்‌ உள்ளது. அதே போல் தூய அழகியலை பற்றி அறிவார்ந்து விவாதிக்கவும் முடியும்தத்துவமும் கவித்துவமும் இருவேறாக பார்க்கப்படுகிறது. ஆனால் தத்துவம் உயர் கவித்துவம் நோக்கி செல்லும் தருணங்களும் கவிதை உயர் தத்துவம் நோக்கி செல்லும் தருணங்களும் எப்போதும் உண்டு என்றார் மணிகண்டன். வகுப்பின் கடைசிவரை தத்துவக் கேள்விகளின் பதில்களுக்கு கலையில் விடைதேடுவதும் கலை படைப்புகள் தத்துவக் கேள்விகளை உருவாக்குவதும் விளக்கப்பட்டு கொண்டே இருந்தது. 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்புள்ள குகை ஓவியங்களில் இருந்து இன்று வரையுள்ள கலை போக்குகள் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இலக்கியம், சினிமா, ஓவியம், புகைப்படம், தத்துவம், கட்டிடக்கலை என்று அனைத்து துறைகளும் பின்னிப்பிணைந்து முன்னகரும் சித்திரம் கிடைத்தது. குளத்தில் ஒரு கூழாங்கல்லை எறிந்தவுடன் அது குளம் முழுவதும் அலைகளை உண்டு பண்ணுவது போல ஒரு துறையில் வரும் புதிய மாற்றம் மற்ற துறைகளிலும் சலனங்களையும் விவாதங்களையும் உருவாக்குகிறது. இந்த மாற்றங்களை அறியாமல் எழுதவோ படைப்புகளை உருவாக்கவோ முற்படுபவர்கள் அந்த காலகட்டத்தில் எந்த கேள்விகள் முதன்மையாக இருக்கிறதோ அதை அறியாமல் குறுகலான படைப்புகள் உருவாக்க வாய்ப்பு அதிகம். மணி சொன்ன உதாரணத்தையே சொல்வதென்றால்ஒருவன் தன்னை சுற்றி இருக்கும் சூழலை முழுமையாக அறியாமல் பல ஆண்டுகள் உழைத்து நேரம் பார்க்கும் கைக்கடிகாரம் ஒன்றை கண்டுபிடிக்கிறான். அதை மற்றவர்களுக்கு காட்டும் போது தான் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு நூற்றாண்டுகள் ஆகிறது என்று அவனுக்கு தெரிய வருகிறது. தன் உழைப்பு பாழானதை நினைத்து வருந்துகிறான்.’

காட்சிக்கலையை உள்வாங்குவதிலும் புரிந்து கொள்வதிலும் நம் சூழலில் சிக்கல்கள் உள்ளன. அவற்றிற்கான தெளிவுகள் நோக்கிய முன்னெடுப்பை இந்த வகுப்பில் மணிகண்டன் அளித்தார். அதில் ஒன்று கலை கலைக்காகவே என்ற போக்கு பற்றிய விளக்கம். நம் சூழலில் ஒரு கிறுக்கலை வரைந்தால் கூட இந்த படைப்பு என்ன கூற வருகிறது? இதன் ஆன்மீகம் என்ன? தரிசனம் என்ன? என்ற கேள்வியுடன் சிலர் வருவார்கள். அப்படி நாம் பார்க்கும் படைப்புகள் எல்லாம் எதையாவது கூற வேண்டும் என்றும், ஆன்மீகமும் தரிசனமும் இருக்க வேண்டும் என்றும் அவசியம் இல்லை. அது தன்னளவில் படைப்பாக இருப்பதே அதன் ஆன்மீகம் என்று மணி விளக்கினார். வடிவத்தை முதன்மையாக கொண்ட காண்பியல் கலையில் இப்படி ஒரு போக்கிற்கு பெரிய அளவில் இடம் உள்ளது. நமக்கு அலங்காரம் எதுவும் அற்ற மொழுக்கையான சிவலிங்கம் அர்த்தத்தை தருகிறது. ஆனால் வெறும் நீல வண்ணத்தை மட்டும் கொண்டு நிரப்பப்பட்ட கேன்வாஸ் ஓவியத்தை தொடர்புபடுத்திக் கொள்ள தெரியவில்லை. நீல நிறத்தை ஆகாயத்துடன், கிருஷ்ணன் போன்ற தெய்வங்களுடன், கடலுடன், எங்கும் நிறைந்திருப்பவற்றுடன் இணைக்கும் மனநிலையை வளர்த்துக் கொண்டாலேஓவியம் புரியவில்லைஎன்னும் நிலையை மாற்றி விடலாம். நம் புரிதலில் சில பிழைகளே உள்ளன. அதை கடப்பதும் எளிது என்றார் மணிகண்டன்.

வகுப்பில் மின்னல்களை போல பல திறப்புகளை அளித்தார் ஆசிரியர். இலக்கியமாக இருந்தாலும் காண்பியல் கலையாக இருந்தாலும் படைப்புகளை உருவாக்க ஆரம்பிக்கும் நிறைய பேர் சென்று விழும் படுகுழி ஒன்றை சுட்டிக்காட்டினார். அதாவது exoticஐ தேடி போகும் போக்கு. அல்லது exotic என்று நினைத்து கொண்டு பெரும்பாலும் பலர் எதை செய்கிறார்களோ அதை தானும் செய்து பார்ப்பது. ஒருவர் ஒரு கேமரா வாங்கியவுடன் முதலில் காசி சென்று சில சாமியார்களை புகைப்படம் எடுப்பார். அல்லது ஊரில் உள்ள பிச்சைக்காரர்களை படம் எடுப்பார். அல்லது மும்பையிலோ டெல்லியிலோ சென்று சிவப்பு விளக்கு பகுதியை புகைப்படம் எடுப்பார்கள். கேரளா சென்று தெய்யத்தை புகைப்படம் எடுப்பதையும் பலர் இன்று செய்கிறார்கள். இது போன்ற இந்தியாவின் குறிப்பிட்ட சில புகைப்படங்கள் மட்டும் வெளிநாடுகளில் செல்லும் போது இந்தியா என்பது சாமியார்களும், பிச்சைகாரர்களும், பாலியல் தொழிலாளிகளும், சில சடங்குகளும் மட்டும் நிறைந்த ஒரு நாடு என்ற சித்திரம் எப்படி பரப்பப்படுகிறது என்பதை விளக்கினார். அவை இங்குள்ள உண்மையான நிலையை மட்டுமல்ல நமக்கே உரித்தான படிமங்களையும் ஆன்மீகத்தையும் பற்றி பதிவு செய்வதில் தடையாக இருப்பதை பற்றியும் புரிந்து கொள்ள முடிந்தது. Steve McCurry, Mary Ellen Mark போன்ற வெளிநாட்டு புகைப்பட கலைஞர்கள் தான் இந்தியாவின் exotic புகைப்படங்களை எடுத்து பெரியளவில் வெளியிட்டார்கள். அது உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது. இந்த புகைப்படங்கள் நம் ஊரில் புகைப்படம் எடுப்பவர்களின் ரசனையை அவர்களுக்கு தெரியாமலேயே மாற்றி அமைத்தது. நாம் இங்குள்ள வறுமையை புகைப்படம் எடுத்து அனுப்பினால் மட்டுமே national geographic வெளியிடும். நம் உயர்வை சொல்லும் படங்களை வெளியிட மாட்டார்கள். ஒரு அதிகாரம் நம் ரசனை மீது செலுத்தும் ஆதிக்கத்தை இதன் மூலம் விளக்கினார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞர் எடுத்த படங்கள் காட்டப்பட்டது. அவர் பழங்குடி நடனம், விவசாயிகள், சாமியார்கள், சாமி வேடமிட்டு பிச்சையெடுக்கும் குழந்தைகளை பதிவு செய்திருந்தார். இப்படி பதிவு செய்வதன் மூலம் அழியும் பண்பாட்டை தான் ஆவணம் செய்து மீட்க விரும்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார். கூடவே அந்த புகைப்படக்காரர் தன்னை எப்படி படம் பிடித்து வைத்துள்ளார் என்பதும் காட்டப்பட்டது. அதில் அந்த புகைப்படக்காரர் கோட், சூட்டுடன் ஒரு கனவானாக தோற்றமளித்தார். தான் கிராம வாழ்க்கை, பழங்குடி வாழ்க்கையில் இருந்து வெளிவந்து கனவானாக வாழ வேண்டும். ஆனால் தான் புகைப்படம் எடுப்பவர்கள் அந்த வாழ்க்கையில் உழல வேண்டும் என்று நினைக்கும் முரண் சொல்லப்பட்டது. இந்த தருணத்தில் ஆலயக்கலை பயிற்சி அளிக்கும் ஆசிரியர் ஜெயகுமார் ஞாபகத்துக்கு வருகிறார். அவர் ஆலயங்களை பற்றி ஆழ்ந்து அறிந்தவர். ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்கள் முதல் கலைஞர்கள் வரை அனைவரும் தங்கள் பணிகளை தொடர தன்னால் முடிந்தவரை உதவுகிறார். நானும் தாமரைகண்ணனும் திருவாரூர் ஆலயத்திற்கு சென்ற போது அங்கு பணியாற்றும் மரபு நயன கலைஞர் தன் பணி தொடர ஜெயகுமார் செய்யும் உதவியை சொன்னார். ஆனால் இவை எதுவும் அவர் தன்னை வெளியில் இருந்து வந்து இங்கு உள்ளவர்களை கரையேற்றும் மீட்பராக நினைத்து செய்வதில்லை. ஆலயங்களில் எங்களை அழைத்து செல்லும் போது ஜெ.கே நெற்றியில் திருநீறு அணிந்து ஒரு சராசரி பக்தனாகவே தோற்றமளிப்பார். பதிகங்கள் பாடுவார். தினசரி லலிதா சஹஸ்ரநாமம் ஓதுபவர் ஜே.கே. மரபை பற்றிய உண்மையான அக்கறை உணர்வு தான் முதலில் மரபிற்குள் எந்தளவிற்கு இருக்கிறோம் என்பதில் இருந்தே ஆரம்பிக்கிறது என்று தோன்றுகிறது.

நம் படிமங்கள் சரியாக வெளிப்படும் புகைப்படங்களையும் காட்டினார். உதாரணத்திற்கு ரகுபிர் சிங் கன்னியாகுமரி கடலின் பாறை முனையில் குங்குமம் வைத்த நெற்றியுடன் ஜரிகை முக்காடு போட்ட கண் வரை மட்டும் தெரியும் வயதான வட இந்திய பாட்டியின் உருவம். ஒரு விதத்தில் இந்த புகைப்படம் காலம் காலமாக கன்னியாக தவம் செய்யும் கன்னியாகுமரி அம்மனை ஞாபகப்படுத்தியது. இன்னொரு விதத்தில் கன்னியாகுமரி முனையில் நிற்கும் சிவப்பு பொட்டு அணிந்த வட இந்திய பாட்டியின் உருவம் காலங்காலமாக இந்திய மண்ணில் உள்ள கலாச்சாரம், ஆன்மீகம், படிமம் சார்ந்த உரையாடலை ஞாபகப்படுத்தியது

அமெரிக்காவில் கருப்பின விடுதலைக்கு தூண்டுதலாக இருந்த ராபர்ட் ப்ராங்கின் புகைப்படத்தை பார்த்தோம். ராபர்ட் ப்ராங்கின் புகைப்படத்தில் காட்டப்பட்ட பேருந்தில் கெத்தாக இருக்கும் வெள்ளையர்களின் பின்னால் ஒரு கருப்பினத்தவர் ஒரு வித பதற்றத்துடன் பாவமாக இருந்தார். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அந்த பேருந்தில் பிற்பாடு ஒபாமா அதிபர் ஆனதும் ஏறி புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்ற போது உணர்ச்சிகரமாக இருந்தது. மிகச் சிறந்த கலைஞர்கள் தங்களை அறியாமலேயே தங்கள் உள்ளுணர்வால் சரியான படிமங்களை பதிவு செய்கிறார்கள் என்று மணிகண்டன் கூறினார். உதாரணத்திற்காக காந்தியை புகைப்படம் எடுத்த சிறந்த புகைப்பட கலைஞர்கள் மார்க்ரெட் பூர்க் வைட் மற்றும் ஹென்ரி கார்டியர் பிரசோன் ஆகிய இருவரும் சரியாக காந்தி ராட்டையில் நூல் நூற்பதை பதிவு செய்திருப்பதை சுட்டி காட்டினார்.

ஆனந்த விகடன் போன்ற நாளிதழ்களில் அடிக்கடி பிரசுரமானதால் ஓவியர் இளையராஜாவின் ஓவியம் தமிழ்நாட்டில் பிரபலம். அதாவது கேரளாவில் ரவிவர்மாவுக்கு என்ன இடம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவிற்கு தமிழ்நாட்டில் பலர் இளையராஜாவை வைத்திருக்கிறார்கள். இளையராஜாவின் ஓவியம் மக்களை கவர்வதற்கு அதில் உள்ள தத்ரூபம் காரணமாக உள்ளது. ஆனால் அந்த ஓவியங்கள் சரியாக தமிழ்நாட்டை பிரதிநிதப்படுத்துபவை அல்ல என்று மணிகண்டன் விளக்கினார். அவ்வப்போது கடைசிவரை இளையராஜா ஓவியங்களில் உள்ள பெண்கள் அணிந்திருக்கும் மின்னும் பட்டுப்பாவாடைகள் பற்றி நக்கலடித்துக் கொண்டே இருந்தார் மணி. நீங்கள் ரவிவர்மா ஓவியங்களை பற்றி விமர்சித்தது ஞாபகம் வருகிறது. இதை பற்றி மேலும் ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதும் எண்ணம் உள்ளது

பண்பாட்டு இடைவெளிகள் பற்றியும் மேதைகளுக்கு இருக்கும் எல்லைகளும் வகுப்பில் விவாதிக்கப்பட்டது. இங்கே மேற்கத்தியர்கள் முதலில் வந்த போது நம் கோவில்களில் உள்ள கற்சிலைகள் அவர்களுக்கு ஒவ்வாமையை அளித்தது. அதை பற்றி பதிவும் செய்திருக்கிறார்கள். இதை நாம் அவர்கள் நம் மதத்தை இழிவு செய்கிறார்கள் என்றோ தனிப்பட்ட புண்படலாகவோ எடுத்து கொள்ள வேண்டாம் என்றார் மணி. வடஇந்திய கோவில்களில் வெள்ளை மார்பிள் சிலைகள் கருவறையில் இருப்பது கூட தென்னிந்தியர்களுக்கு பொருத்தமில்லாததாக தோன்றலாம். இது கலாச்சார இடைவெளி மட்டுமே. இந்த புரிதலுடன் தான் நாம் மற்ற பண்பாட்டுகளில் உள்ள கலை படைப்புகளை அணுக வேண்டும் என்றார். பெண்ணியத்தின் முன்னோடியான மேரி வோல்ஸ்டோன்கிராப்ட் பெண்களுக்கு உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட போது கூடவே நாமெல்லாம் பண்பட்டவர்கள். கீழை தேசத்தவர்களை போல இருக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது எவ்வளவு முன்னோடியான ஆளுமைக்கும் காலம், இடம், சூழலை பொறுத்து எல்லைகள் அமைந்து விடுகிறது என்பதை குறிக்கிறது. ஆளுமைகளின் குறைகளை மிதமிஞ்சி தூற்றுவது, அவர்களின் எல்லைகளை உணராமல் இருப்பது ஆகிய இரண்டும் செய்யக்கூடாதது. ஆளுமைகளின்‌ பங்களிப்பையும் எல்லைகளையும் சரியாக உணர்ந்து கொள்வதே அவர்களை அணுகி அறிந்து கொள்வதற்கான வழி.

வகுப்பு முழுவதும் படிமங்களை அணுகுவதற்கான பயிற்சியாகவே இருந்தது. படிமங்களை ரசிக்கவும் உள்வாங்கவும் கற்பிக்கப்பட்டது. இலக்கியம் என்பது மொழியினூடான காட்சி படிமங்களை உருவாக்குவது. அதற்கு மாறாக காட்சிக் கலையில் நேரடியான காட்சி படிமங்களை மொழியாக மாற்றி கொள்வது தான் அதை ஆழ்ந்து உணர சிறந்த வழி என்று விளக்கப்பட்டது. காட்சி படிமங்களை அணுகும் போது அதில் உள்ள காட்சிகளை வார்த்தைகளாக ஆக்கிக் கொள்வதன் மூலம் நுணுக்கமாக உள்வாங்கலாம் என்றார். இதை நான் தமிழ்விக்கியில் கலைஞர்களின் படைப்புகளை பற்றி எழுதும் போது உணர்ந்திருக்கிறேன். அதுவரை ஒரு படைப்பில் நாம் கவனிக்காதது எல்லாம் எழுத ஆரம்பிக்கும் போது துலங்கி வரும். படைப்புகள் திரையில் காட்டப்பட்டு எங்களிடம் அதன் சரியான படிமங்களை உணர வைத்து வார்த்தைகளாக சொல்ல வைத்தார் மணி. எழுத வருபவர்கள் தாம் பார்ப்பவற்றில் இருந்து சரியான படிமங்களை எடுத்து கொள்ளவும் அதை எழுத்தாக மாற்றவும் இந்த பயிற்சி மிக உதவியானது

நான் பலமுறை பார்த்த கஸ்தவ் க்ளிம்ட் வரைந்த கிஸ்(The kiss) என்ற புகழ்பெற்ற ஓவியத்திற்கு புது வாசிப்பை அளிக்க முடிந்ததுஇதுவரை இந்த ஓவியத்தை ஒரு காதலும் காதலியும் கொள்ளும் உணர்வு நிலை என்று தான் புரிந்து வைத்திருந்தேன். பெரிய திரையில் மேலும் உற்று பார்த்த போது தான் அந்த ஓவியத்தில் உள்ள ஆணின் ஆடைகளில் ஆண்குறியை குறிக்கும் செவ்வக வடிவங்களும் பெண்ணின் ஆடையில் உள்ள வட்ட வடிவங்கள் பெண்குறி மற்றும் பெண்மையை குறிப்பதும் தெரிந்தது. நமக்கு இங்குள்ள சிவலிங்கம் எந்த பிரபஞ்ச ஆடலை குறிக்கிறதோ அதே ஆடலை ஆஸ்திரிய நாட்டு கலைஞன் ஒருவன் ஓவியத்தில் வெளிபடுத்தியிருக்கிறான். ஒரே படிமத்தை உலகளவில் கலைஞர்கள் வேறு வேறு விதத்தில் அணுகியிருப்பதை இது உணர்த்தியது

அறிவை துணையாக கொள்ளாத அழகியலும் அழகியல் அற்ற அறிவும் படைப்பில் கொண்டு வரும் பிழைகள் பற்றி பேசப்பட்டது. படைப்பில் பிழைகளை தவிர்க்க அறிவும் அழகியலும் மோதி அதன் விளைவாக  படைப்புகள் உருவாகி வர வேண்டும் என்று மணிகண்டன் குறிப்பிட்டார். நாம் வாசிப்பதையும் கற்பதையும் விவாதிப்பதையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அதே நேரத்தில் படைப்புகள் தன்னிச்சையாக நிகழ வேண்டும் என்றார். அப்போது நாம் கற்றவற்றை நம்மை அறியாமலேயே நம்மை துணைக்கும்.

மூன்று நாள் ஏ வி மணிகண்டனின் ஆளுமையை புரிந்து கொள்ளவும் உதவியாக இருந்தது. பெரிதாக அலட்டி கொள்ளாத மனிதர். தோற்றத்திலும் அமைதியான குணத்திலும் கத்தாரில் பணியாற்றும் என் அம்மா வழி உறவினரான சந்திரன் சித்தப்பாவை ஞாபகப்படுத்தினார்அரிதாக அவர் சிலவற்றை நக்கலடிக்கும் போது கொஞ்சம் சந்ரு மாஸ்டரின் உடல்மொழி அவரிடம் வந்து போனது. ஆனால் நக்கல்கள் எல்லை மீறுவதும் இல்லை. கவிஞர் இசையை மணிக்கு பிடிக்கும் என்பது தெரியும். இசை தொடர்ந்து அவரது உரையாடலில் வந்து கொண்டிருந்தார். உங்களை பற்றி சொல்லும் போதுஇந்த வகுப்பை ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தை ஜெ திரும்ப திரும்ப சொல்லிட்டே இருந்தார். அதனால் வகுப்பை ஆரம்பித்தேன்‘ என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார். யாராவது கேள்வி கேட்டால் உடனுக்குடனே மொழியை கோர்த்து தர்க்கத்துடன் பதிலளிக்கும் திறமை வாய்ந்தவர்அமெரிக்க ஓவியக் கலைஞர் ஜாக்சன் பொலாக்கை அறிமுகப்படுத்தும் போது ஒருவர் சீண்டும் விதமாக ஜாக்சன் போலாக் இப்படி தரையில் ஆறடிக்கும் நீளமான கேன்வாசை விரித்து போட்டு வண்ணங்களை தெளித்து கிறுக்குவதற்கு ஒரு நாலு பேரை துணைக்கு அழைத்திருந்தால் இன்னும் வேகமாக அந்த ஓவியங்களை முடித்திருக்கலாமே? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மணிஎன் அம்மா இறந்தார். அப்போது நான் அழுதேன். எனக்கு அழ தோன்றினால் நான் தான் அழ வேண்டும். மற்றவர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு அழ முடியாதுஎன்று நெற்றியில் அடித்தார் போல பதில் கூறினார். அந்தியூர் மணியைமணி அண்ணாஎன்று அழைத்து பேசினார். அந்தியூர் மணியும் பதிலுக்கு இவரைமணி அண்ணாஎன்று அழைத்தார். இரண்டு பேரும் மாற்றி மாற்றிமணி அண்ணா‘ ‘மணி அண்ணாஎன்று அழைத்து பேசி கொண்டிருந்தது பார்க்க சுவாரிஸ்யமாக இருந்தது.

வந்த அனைவருக்கும் வகுப்புகள் புரிய வேண்டும் என்ற அக்கறை கொண்டிருந்தார். திரும்ப திரும்ப அனைவரிடமும் புரிந்ததா? அதிகமாக சொல்லி விட்டேனா? புரியவில்லை என்றால் திருப்பி கேளுங்கள் என்று சொல்லி கொண்டே இருந்தார். வகுப்புகளில் எனக்கு நேர்மாறாக அமைதியாக இருக்கும் விஷால்ராஜா ஒவ்வொரு வகுப்பு இடைவெளிகளிலும் மணிகண்டனின் அருகில் வந்து இந்த முறை இந்தத்த விஷயங்கள் மிக சிறப்பாக இருந்தது என்று சிலாகித்து பேசினார். குகை ஓவியங்களில் அன்றைய மனிதர்கள் தங்கள் கை அச்சை பாறைகளில் பதிப்பதை காட்டி கலை மரபை சொல்ல ஆரம்பித்தவர் ஜப்பானிய கலைஞர் யயோய் குசாமாவின் நிறுவல்படைப்பு(art installation) ஒன்றில் பார்வையாளர் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடம் முழுவதும் தங்கள் கையாலே வண்ணப் புள்ளிகளை ஒட்டி வெள்ளை நிற அரங்கை பல வண்ண புள்ளிகள் மின்னும் இடமாக மாற்றிக் கொள்ளும் காணொளியை (https://youtu.be/-xNzr-fJHQw?si=3q-hUwfiCySUdsWq) காட்டி வகுப்பை முடித்தார். யயோவ் குசமாவின் இந்த படைப்பு பல வண்ண நட்சத்திரங்கள் மின்னும் வெள்ளை ஆகாயத்திற்குள் இருப்பது போன்ற மயக்கத்தை உருவாக்கியது. இந்த காணொளி முடிந்தவுடன் வகுப்பில் கலந்துகொண்ட கிட்டத்தட்ட 50 பேரும் அந்த கணத்தில் தங்களை மீறி எழுந்து நின்று கை தட்டினார்கள். அப்போது உணர்ச்சிகரமாகவும் நிறைவுடனும் காணப்பட்டார் மணிகண்டன். ‘Power of Art’ என்று மட்டும் சொல்லிக் கொண்டார். மொத்த வகுப்பும் ஒரு நிகழ்த்துகலை அனுபவத்தை தந்தது. மேலதிகமாக நிகழ்த்து கலைஞர் யோகோ ஓனோ நிகழ்த்திய படைப்பின் காணொளியை காட்டினார். 1964-ல் நிகழ்த்தப்பட்ட முதல் காணொளியில் மேடையில் அமர்ந்திருக்கும் யோகோ ஓனோ கத்திரிகோலால் தன் ஆடையை பார்வையாளர்கள் வெட்ட அனுமதித்தார். அதில் பார்வையாளர்கள் ஆண்பெண் பாகுபாடில்லாமல் மிக குரூரமாக அவரது ஆடையை வெட்டி அவரை கிட்டத்தட்ட நிர்வாணப்படுத்தினர். இது நிகழும் போது தன்னுள் கோபமும் கொந்தளிப்பும் இருந்ததாக யோகோ ஓனோ தெரிவித்திருக்கிறார். இதே நிகழ்த்து கலையை 40 வருடம் கழித்து யோகோ ஓனோ மீண்டும் நிகழ்த்தினார். அப்போது பார்வையாளர்கள் அவரை முடிந்தவரை அவமதிக்காமல் மரியாதையுடன் நடந்து கொண்டனர்யோகோ ஓனோவும் இந்த நிகழ்த்து கலையை 40 வருடத்திற்கு முன் நிகழ்த்தும் போது இருந்த கோபமும் கொந்தளிப்பும் இப்போது இல்லாமல் தன்னுள் அமைதியை உணர்வதாக தெரிவித்தார். மனிதர்கள் இயல்பாக குரூரமானவர்கள் என்ற தரப்புக்கு எதிராக யோகோ ஓனோவின் படைப்பின் வழியாக மனிதர்கள் இயல்பில் ஒளியும் நன்மையும் கொண்டவர்கள் என்ற ரூசோவின் தரப்பை சுட்டி காட்டி மனிதர்கள் நன்மையை நோக்கி தான் பயணம் செய்கிறார்கள் என்று சொல்லி மூன்று நாள் வகுப்பை  வி மணிகண்டன்  நிறைவு செய்தார். மறுபடியும் கைதட்டல்கள். வகுப்பு அனைவருக்கும் சென்று சரியாக சேர்ந்ததா? என்று ஏ வி மணிகண்டனுக்கு இருந்த சந்தேகத்திற்கு கைதட்டல்கள் சரியான விடையையும் நிறைவையும் அளித்திருக்கும் என்று நம்புகிறேன்

நான் இங்கே பதிவு செய்திருப்பது காட்சி கலைஞனாக நான் இந்த வகுப்பில் பெற்றுக் கொண்ட சிலதை மட்டுமே. வகுப்பு முடிந்த பின் கம்பராமாயணம் வாசிப்பை தீவிரமாக முன்னெடுக்கும் பார்கவி பேசும் போதுஇந்த வகுப்பில் கலந்து கொண்டதன் மூலம் இனிமேல் கம்பராமாயணம் வாசிக்கும் போது அதில் உள்ள படிமங்களை மேலும் ஆழமாக வாசிக்க  முடியும் என்ற நம்பிக்கை வந்ததுஎன்றார். எழுத்தாளர், இலக்கிய வாசகர்கள், கலைஞர்கள், விளம்பரம் மற்றும் சினிமா துறையில் பணியாற்றுபவர்கள், வழக்கறிஞர், ஆய்வாளர், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினர் வகுப்பில் கலந்து கொண்டார்கள். ஏற்கெனவே இருக்கும் கேள்விகளுக்கான விடைகளுடன் பல புதிய கேள்விகளுக்கான ஆரம்பத்தையும் அளிப்பதே நல்ல கல்வி என்று நினைக்கிறேன். அவ்விதத்தில் ஆசிரியர் ஏ வி மணிகண்டனின் இந்த மூன்று நாள் வகுப்பில் கலந்து கொண்டது எனக்கு மிக முக்கியமானது என்று கருதுகிறேன். அவருக்கு என் வணக்கங்கள்! மணிகண்டனை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்!

வகுப்பிற்கு வந்தவர்கள் பலரும் இரண்டாம் கட்ட வகுப்பை விரைவில் ஆரம்பிக்க ஏ வி மணிகண்டனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானும்படிமங்களை பயில்தல்வகுப்பின் இரண்டாவது நிலை வகுப்பிற்காக காத்திருக்கிறேன்.

ஜெயராம்

முந்தைய கட்டுரைஆலயக்கலைநூல்கள்- ஜெயக்குமார்
அடுத்த கட்டுரைஎழுதவிருப்பவரின் கடிதம்…