ஆலயக்கலை அறிதல் பக்திக்கு எதிரானதா?

அன்புள்ள ஜெ

ஆலயக்கலை பயிற்சிக்குச் செல்வதைப் பற்றி நண்பரிடம் சொன்னேன். அவர் நல்ல பக்திமான். ஆலயக்கலைப் பயிற்சியை அடைந்து சிற்பங்களை ரசிக்கும் மனநிலை வந்துவிட்டால் பக்தி போய்விடும் என்று சொன்னார். அதைப்பற்றி உங்களிடம் கேட்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்

ஆர்.

அன்புள்ள ஆர்,

ஆலயக்கலையை பக்தி இல்லாமல் ரசிக்க முடியும். பல நிபுணர்கள் பக்தி இல்லாதவர்கள். அவர்களுக்கு தெய்வச்சிலைகள் வெறும் கலைப்பொருட்களே. அதில் பிழையும் இல்லை. அது ஒரு கோணம்.

ஆனால் பக்தர்கள் ஆலயங்களையும், ஆலயச்சிற்பங்களையும் தெரிந்துகொள்வது இன்னொரு கோணத்தில். அது தெய்வங்களை தெரிந்துகொள்வதுதான். ஏனென்றால் ஓர் ஆலயச்சிற்பம் ஒரு தெய்வ உருவகத்தின் கண்கூடான வடிவம். அந்த தெய்வ உருவகத்தை அறிய அந்த சிலையை பற்றி அறிந்துகொண்டே ஆகவேண்டும்.

சிலைகள் எப்படி உருவாகின்றன? ஒரு ஞானி ஒரு தெய்வ அனுபவத்தை ஓர் அகநிகழ்வாக அடைகிறார். ஒரு கனவு போல என உதாரணம் சொல்லலாம். அந்த அகநிகழ்வை அவர் பிறருக்குச் சொல்ல ஒரு உருவகத்தை பயன்படுத்துகிறார் (எல்லா உணர்ச்சிகளையும், எல்லா அகநிலைகளையும் நாம் அனைவருமே உருவகங்கள் வழியாகவே பிறருக்குச் சொல்கிறோம். வேறு வழியே இல்லை) அதுதான் தெய்வ உருவம் என்பது.

தெய்வ உருவகம் ஒரு வர்ணனையாக இருக்கலாம், ஒரு ஒப்பீடாக இருக்கலாம். ஒரு துதியாக இருக்கலாம். ஒரு சொல்லாகக்கூட இருக்கலாம். எல்லாமே உருவகங்கள்தான். சொல்லில் எழுவது வாக் விக்ரகம். கல்லில் எழுவது சிலா விக்ரகம். அவ்வளவுதான் வேறுபாடு. விக்ரகம் இல்லாமல் தெய்வத்தை மட்டுமல்ல, அகவுணர்வுகள் எதையுமே சொல்லமுடியாது.

ஆகம் விக்ரகம் என்பது நம்மைநோக்கிச் சொல்லப்பட்ட ஒரு சொல். அதை நாம் புரிந்துகொள்ளவேண்டாமா என்ன? அப்படிப் புரிந்துகொள்ளத்தான் நாம் கலைப்பூர்வமாக அவற்றைப்பற்றிக் கற்கவேண்டும் என்கிறோம்.

உண்மையில் நாமனைவருக்குமே நம் பிறப்புச்சூழலிலேயே அந்தக் கல்வி பெரும்பாலும் வந்துவிடுகிறது. நம் பெற்றோரே சொல்லித்தருவார்கள். ஆகவே கொஞ்சம்கூட கலைக்கல்வி இல்லாத நிலையில் எவருமே இல்லை. அதை முழுமையாக, முறையாக ஆக்கிக்கொள்ளவே நமக்கு பயிற்சி தேவையாகிறது.

ஓரளவு தெரிந்தால்கூட, தீவிரமான பக்தியுடன் வழிபாடுகளைச் செய்துவிடலாம். ஆனால் முறையாகத் தெரியாதபோது மிகப்பெரிய பிழைகள் நிகழ்ந்துவிட வாய்ப்புண்டு. அப்பிழையால் நமக்கு பாவமும் சேரக்கூடும்.

உதாரணமாக ஒரு நிகழ்வு. ஒரு நண்பர் வடக்கே சென்றார். அங்கே கிருஷ்ணனும் பலராமனும் இருக்கும் ஆலயத்திற்குச் சென்றவர் அங்கிருந்த வெண்ணிற பலராமனை கிருஷ்ணனாக நினைத்துக்கொண்டார். கரியநிறமான கிருஷ்ணனை ஏதோ தீயதெய்வம் என நினைத்துவிட்டார். அதை என்னிடம் சொன்னார். அதுதான் கிருஷ்ணன் சிலை என்று நான் சொன்னதும் திகைத்துவிட்டார்.

நம் பக்தர்கள் அப்படி அறியாமையால் தெய்வங்களை அவமதிப்பதுண்டு. சிலசமயம் பிழையாக எண்ணிக்கொண்டமையால் பிழையான உணர்வுகளை அடைந்துவிடுவதுமுண்டு. எதையெல்லாம் செய்யக்கூடாது என்று அறிவதற்காவது பக்தர்கள் ஆலயக்கலையை முறையாக அறியவேண்டும்

 

ஜெ

முந்தைய கட்டுரைஎழுதவிருப்பவரின் கடிதம், மீண்டும்
அடுத்த கட்டுரைசைவத்தை மூன்றுநாளில் கற்பதா?