அஜந்தா எல்லோரா என்ற பெயர்கள் பள்ளியில் படிக்கும்போது மனதில் பதிந்துவிட்டது. சிறந்த இந்திய கட்டடக்கலை என்பதாகத்தான் பதிவு. அவற்றில் ஓவியங்கள் சிற்பங்கள் உள்ளன என்பவற்றை அறிய மூன்று தசாப்தங்கள் ஆகிவிட்டன.
வெள்ளிமலையில் அமைந்திருக்கும் நித்யவனத்திற்கு வந்து ஆசிரியர் ஜெயக்குமாரின் “ஆலயக்கலை” வகுப்பில் கலந்துகொண்ட பிறகுதான் ஆலயங்களை இதுவரை நான் காணவேயில்லை, வெறுமனே சென்று வந்துள்ளேன் எனப் புரிந்தது.
வகுப்பிற்கு பிறகு பல குழுவாக தாராசுரமும், புதுக்கோட்டையும், ஹம்பியும், பதாமியுமாக செல்வதைக் கேள்வியுற்றபோது உள்ளுக்குள் கிடந்த அஜந்தா எல்லோரா விழைவு மேலெழுந்து வந்தது. அதற்கேற்றாற்போல் நான் இருந்த புலனக்குழுவில் அங்கு செல்வதற்கான அறிவிப்பு வந்தது. அதற்கு என் பெயரைப் பதிந்ததும் பேருவகை ஏற்பட்டது.
ஔரங்காபாத்திற்கு நேரடியாக ரயில் இல்லாததால் இண்டிகோ விமானத்தில் முன் பதிவு செய்தேன். ஔரங்காபாத்திற்கு விமானம் தேடியபோது அவர்கள் தளமே சென்னை – மும்பை மற்றும் மும்பை – ஔரங்காபாத் என வழித்தடம் காட்டியது. இரு விமானங்களுக்கும் சேர்த்து பல கட்டணங்களையும் சேர்த்து ஒரே தொகையைக் காட்டியது. திரும்புவதற்கு ஔரங்காபாத் – ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத்- சென்னை என வழித்தடம் காட்டி அதற்கும் அதே தொகையை காட்டியது. முன்பதிவு செய்ததும் சரியான நேரத்திற்கு சென்றுவிடலாம் என ஒரு நிம்மதி தோன்றியது. அப்போதே அஜந்தாவிற்கு சென்றுவிட்டதான உணர்வு தோன்றி ஒருவித புல்லரிப்பு ஏற்பட்டது.
பயணத்திற்கு இரண்டு வாரத்திற்கு முன்பாக, ஆசிரியர் ஜெயக்குமார், இரண்டு நாட்கள் ஜூம் செயலியில் அஜந்தா பற்றி ஒரு நாளும் எல்லோரா பற்றி மறுநாளும் முக்கியமான விவரங்களுடன் அறிமுகம் செய்தார். அதோடு புத்த ஜாதகக் கதைகளின் பட்டியலையும் அதற்கான சுட்டிகளையும் அளித்து கண்டிப்பாக அனைவரும் வாசித்து வரவேண்டும். அப்போதுதான் முழுமையாக ஓவியங்களை ரசிக்கமுடியும் என்று வலியுறுத்தினார்.
நானும் ஜாதகக் கதைகளை பதிவிறக்கி ஒரு நகலையும் கையில் எடுத்துக்கொண்டு வாசித்தேன். முழுமையாக மனனம் ஆகாததால் ஒரு முழுமையான சித்திரமாக இல்லாமல் ஆங்காங்கு அழிந்த சித்திரமாக மனதிற்குள் உருவாகியிருந்தது.
பயணத்தின் மகிழ்ச்சி என்பது சென்று சேருமிடத்தில் இல்லை புறப்படும் இடத்திலேயே தொடங்குகிறது என்பதுதான் எனது எண்ணமும். பயணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பு விமானம் புறப்பட ஐந்து நிமிடம் தாமதமாகும் என்றும் அதற்காக வருந்தியும் விமான நிறுவனத்திடமிருந்து குறுந்தகவல் வந்தது. தனியார் நிறுவனம் என்பதின் சிறப்பு இதுதான். ஐந்து நிமிடத் தாமதத்திற்கே இப்படி வருந்தி தகவல் அனுப்புகிறார்கள், அரசு என்றால் தகவல் கூட சொல்லமாட்டார்கள் என்று அந்நிறுவனத்தின்மீது மரியாதை தோன்றியது.
பயணத்தன்று வீட்டிலிருந்து கிளம்பி மின்சார ரெயிலில் சென்றபோது பத்து நிமிடத் தாமதம் என்ற அடுத்த தகவல். அதே வருத்தத்துடன். சரி பத்து நிமிடம் தானே பரவாயில்லை. மெட்ரோ ரயிலில் ஏறியபோது அரைமணி நேர தாமதமென்ற வருத்தத் தகவல். விமான நிலையம் சென்று சேர்ந்தபோது ஒருமணி நேர தாமதம் என்ற தகவல் வந்தது.
பாதுகாப்பு சோதனைகளெல்லாம் முடித்து உள்ளே சென்று அமர்ந்தபோது தகவல் கூறும் இடத்தில் ஒரே சத்தம். இரண்டு மணிநேர தாமதம், இன்னமும் மும்பையிலிருந்தே விமானம் கிளம்பவில்லை. அங்கே கிளம்பி இங்கே வந்து இறங்கியதும்தான் நாங்கள் அதில் ஏறி செல்ல வேண்டும். எண்ணியபோதே அயர்ச்சி தோன்றியது.
மும்பையில் இணைப்பு விமானத்தை பிடிப்பதில் ஏதேனும் சிக்கல் நேருமோ என்று எனக்கு ஐயம் தோன்றியது.. தன் மகள் நிவேதிதாவுடன் வந்திருந்த நண்பர் வீரராகவன் அப்படியெல்லாம் ஆகாது சார். இரண்டு விமானங்களுக்கிடையே நான்கு மணி நேர இடைவெளி உள்ளதே என தைரியம் கூறினார்.
அப்படி இப்படி என நேரத்தைக் கடத்தி இரவு பத்தரை மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் விடிகாலை இரண்டு மணிக்கு கிளம்பி நாலு பத்துக்கு மும்பையில் தரை இறங்கியது. அங்கிருந்து ஔரங்காபாத்திற்கு ஐந்து பத்துக்கு கிளம்ப வேண்டிய இணைப்பு விமானம் இரண்டாவது முனையத்தில் நின்றது. அதை பிடிப்பதற்கு செல்ல வேண்டியவர்களை ஓரமாக நிறுத்திய அங்கிருந்த விசாரணை அலுவலர், பத்து நிமிடங்களுக்குப் பின் “வெளியே சென்று எத்தனை விரைவாக வாகனம் பிடித்தாலும் சென்று சேரமுடியாது” என கூறிவிட்டார். அதில், இரண்டாம் வகுப்பு படிக்கும் அர்ஸன், எட்டாம் வகுப்பு படிக்கும் நிவேதிதா, சுதா கிருஷ்ணன் மேடம் உள்ளிட்ட அஜந்தா எல்லோரா பார்ப்பவர்கள் மட்டுமே பதிமூன்று பேர் இருந்தோம்.
ஆங்கிலத்திலும் இந்தியிலும் எத்தனை மன்றாடியும் அந்த விமானத்தை பிடிப்பதற்கான எந்த. நடவடிக்கையையும் இண்டிகோ நிறுவன அலுவலர்கள் மேற்கொள்ளவில்லை. மறுநாள் காலை செல்லும் விமானத்தில் இடம் ஒதுக்குகிறோம் அல்லது பகுதித் தொகை திரும்பக் கிடைக்கும் என்பதையே திரும்பத் திரும்ப எவ்வுணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் உடனே கிளம்பவில்லையென்றால் பயணத்திட்டம் சீர்குழையும். வேறு விமானமோ ரயில்களோ இல்லாத நிலையில் சற்று கூடுதலான செலவு என்றபோதும் வேன் பிடித்து சாலை வழியாக செல்வது என்று முடிவு செய்தோம்.
இந்தியா முழுவதும் இவ்வளவு விமானதிலைய உட்கட்டமைப்புகளை உருவாக்கி, மக்களைப் பற்றி எவ்வித அக்கறையும் கொள்ளாத தனியார் நிறுவனங்களுக்கு அவற்றின் ஏகபோக உரிமையை வழங்கியுள்ள தற்போதைய இந்திய அரசின் மீது கடும் சினமும் ஒவ்வாமையும் தோன்றி எட்டு மணிநேர பயணம் முழுவதும் நீடித்தது.
அஜந்தாவிற்கு அருகில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு ஏழு மணிக்கு தங்குமிடத்தை அடைந்தோம். அங்கு இருந்த ஆசிரியர் ஜேகேவையும் நண்பர்களையும் கண்டதும் அதுவரை மனதை வாட்டிய அனைத்தும் மலையேறிய அயர்ச்சி மூலவரைக் கண்டதும் விலகுவதென மறைந்தது. மனம் உற்சாகம் கொண்டது. அவ்வுற்சாகம் சென்னை விமான நிலையம் வரும்வரை நீடித்தது என்பதை இப்போது நினைவு கூர்கிறேன்.
இரவுணவு உண்டு வந்தபின் அனைவரும் ஆசிரியர் ஜேகே முன்பு கூடினோம். ஜாதகக் கதைகள் வாசித்து வந்துள்ளீர்களா என பொதுவாகக் கேட்டார். முழுமையாக வாசித்து வந்த சிலர் மட்டும் கை தூக்கினார்கள். அதில் ஸ்ரேயாஸ் என்ற சிறுவனும் அடக்கம். வாசிக்கவில்லை என ஒருவரும் கூறவில்லை என்பதால் எல்லோருமே ஓரளவிற்கு வாசித்து தயாராக வந்திருக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். மறுநாள் காணப்போவதைப் பற்றி பேச்சு விரிந்தது. அஜந்தாவில் உள்ள கட்டுப்பாடுகள், பாதுகாவலர்களின் இயல்பு, எங்கு தொடங்கி எதுவரை செல்வது என்பது பற்றி ஜேகே விவரித்தார். நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார். ஒருகணமும் அவரின் முகத்தின் புன்னகை மாறவில்லை. மறுநாளுக்கான பெரும் எதிர்பார்ப்புடனேயே படுக்கைக்குச் சென்றோம்.
காலையில் மூன்று வாகனங்களில் அஜந்தா குகை வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்றோம். அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் அரசு பேருந்தில் மட்டுமே செல்லமுடியும். எல்லாவித வாகனங்களையும் குகைக்கு அருகே அனுமதித்தால் காற்று மாசுபாடும் தேவையற்ற கூச்சல்களும் ஏற்படக் கூடும். எனவே, இதுவொரு நல்ல முடிவுதான். நாற்பத்தியோரு பேர் எனக் கூறி எங்களுக்கென தனிப் பேருந்தை அமர்த்திக் கொண்டோம். ஓவியங்களின் புகைப்படங்களை பார்த்ததோடு சரி. எந்தக் காணொலியும் காணாமல்தான் சென்றேன் என்பதால் பாதுகாப்பு சோதனை முடித்து ஏறக்குறைய நூறு படிகள் ஏறி குகைகளின் அமைப்பைப் பாரத்தபோது பெரும் கிளர்ச்சி தோன்றியது. நான் இங்கிருக்கிறேன், இந்தியக் கலை மரபின் உச்ச சாத்தியமான இடத்தில் நிற்கிறேன் என்பதே பேருவகை அளித்தது.
குதிரையின் குளம்படித் தடம்போன்ற அமைப்புடன் நடுவில் பசுமை போர்த்திய ஒன்றும் அதைச் சுற்றி தலையில் மரங்கள் சூடிய கரும்பாறையாக ஒன்றுமென இரு மலைகளும் அவற்றிற்கிடையே யு டர்ன் போல வளைந்து நகரும் நதி என எழில் பொலியும் வெளியைக் கண்டபடியே முதல் குகையை அடைந்தோம்.
நீளமான கரியமலையை கூர்முனை கொண்ட சிறு உளிகளால் செதுக்கிச் செதுக்கி நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் பிரமாண்ட தூண்களும் வாசலும் அமைத்து உள் நுழைந்திருக்கிறார்கள். அதை எண்ணியபடியே உள் நுழைந்தேன். மெல்லிய வெளிச்சத்துடன் விரிந்து பரந்திருந்தது குடைவரை. நேர் எதிரே புத்தர் அமர்ந்திருந்ததை உத்தேசமாக உணர முடிந்தது.
நேராக புத்தரிடம் செல்லத் துடித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு ஜேகேவின் வழிகாட்டுதலின்படி இடது பக்கமாக திரும்பினேன். எங்கள் குழு அமைதியாக நின்றது. டார்ச் விளக்கிலிருந்து ஒளி பாய்ந்து சுவரில் நிலைத்தது. ஒருகணம் உள்ளம் திகைத்தது. இதற்காகவல்லவோ இத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம். மனமெங்கும் ஒருவித தித்திப்பு பரவிக்கொண்டிருந்தது. “கதையை யார் கூறுகிறீர்கள்” என ஜேகே கேட்டதும் நண்பர் பிராஸ்பர் முன்வந்தார்.
ஓவியங்கள் கதைக்கான வரிசைக்கிரமாக இல்லாமல் மேலும் கீழும் முன்னும் பின்னுமாக கலைத்து அமைக்கப்பட்டிருந்தன. முதலில் டார்ச் ஒளியால் அதை முழுதாக உள்வாங்கிக் கொண்டபின் “இது சிபியின் கதை” எனத் தொடங்கினார். இது சிபி சக்கரவர்த்தி, முகம் தெளிவாக இல்லை என்றாலும் கால்களின் தோற்றத்தையும் சிம்மாசனத்தின் அமைப்பையும் பார்த்தால் அவராகவே இருக்கவேண்டும். இது தராசு, மக்களெல்லாம் வியப்போடு நோக்குகிறார்கள் என ஓவியங்கள் மேல் ஒளியை நகர்த்தியபடியே விவரித்தார். பிராஸ்பர் கதையைக் கூறிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட ஜேகே “அந்த ஆபரணங்களை கவனிங்க, அத்தக் கண்களைப் பாருங்க” என அவ்வப்போது குறிப்பிட்டார். வெறுமனே கதைக்கான ஓவியம் எனக் கடந்துவிடாமல் ரசிக்க இந்தக் குறுக்கீடு மிகவும் அவசியமானதாக இருந்தது. மனதோடு உடலும் மிதப்பதாகத் தோன்றியது. எத்தனை அரியது, எத்தனை இனியது, எனக்கு இன்று வாய்த்திருக்கிறது என உள்ளுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது.
ஒவ்வொரு கதைகளையும் நிதானமாக பார்த்து ரசித்து முடிப்பதற்கு, பாதுகாவலரின் அறிவுறுத்தலால் இரண்டு முறை வெளியே சென்று ஐந்து நிமிடங்கள் கழிந்தபின் உள்ளே வரவேண்டியிருந்தது. பத்மபாணியையும் வஜ்ரபாணியையும் விழிவிரிய பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். ஓவியனின் மனதில் எத்தனை கனிவிருந்தால் இத்தனை நளினமாக ஒவ்வொரு தீற்றலும் பரிபூரணமாக அமைந்த ஓவியத்தை தீட்டியிருக்க முடியும். விரல்களில் இருந்ததுமட்டும் மலரல்ல விரல்களே மலராக அமைந்துள்ளது என ஜேகே கூறியதை உணர்ந்தேன்.
நான்கு பக்க சுவர்களிலும் இடைவெளியின்றி ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் சிதைந்தும் சில இடங்களில் மங்கி தெளிவின்றி இருந்தது. பெரும்பாலான ஓவியங்கள் பார்த்து ரசித்து வியக்குமாறே இருந்தது. முக்கியமாக கிரீடங்களும் பெண்களின் ஆபரணங்களும், விழிகளும் ஒளிர்ந்தன. 1200 ஆண்டுகளுக்குப் பின்னும் இப்படி ஒளிர்கிறதென்றால் உருவானபோது எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனையில் காண்பது பேரனுபவம்.
சுவர்களின் ஓவியங்களைக் கண்டு முடித்தபின்புதான் மேற்கூரையை நோக்கி மனமும் விழிகளும் சென்றன. மேற்கூரையின் ஓவியங்களில் பெரும்பாபாலானவை கருப்பு மற்றும் வெண்மை நிறங்களால் உருவாக்கப்பட்டிருந்தன. கதைகளை கூறுவனவாக இல்லாமல் பலவித இலைகள் செடிகள் மலர்கள் பறவைகள் விலங்குகள் என வெவ்வேறு விதமான ஓவியங்கள் நல்ல திண்மையான கருமையும் பளீரிடும் வெண்மையுமாய் பரந்திருந்தன. மனதின் மலைப்பு எல்லையின்றி விரிந்து கொண்டிருந்தது.
மெல்லிய வெளிச்சம் படர்ந்திருந்த இடத்தில் டார்ச் லைட்டின் ஒளி செல்லும் இடங்களையே நோக்கி உள்ளம் குவிந்திருந்தபோது “அர்ஸன்… அர்ஸன்…” என சென்னை விமானத்தில் எங்களுடன் வந்த யுவராணியின் குரல் ஒலிக்கும். உடனேயே “என்னம்மா …” என்று அவரின் இரண்டாம் வகுப்பு பயிலும் மகன் அர்ஸனின் குரல் மெல்லிய சலிப்பும் செல்லமுமாய் ஒலிக்கும். சிறுவனாக இருந்தாலும் எவ்வித சத்தமும் எழுப்பாமல் ஓவியத்தையோ சிற்பத்தையோ ரசித்துக்கொண்டிருப்பான். யுவராணியும் அவனை மறந்து ஓவியத்தில் லயித்துவிட்டு சட்டென நினைவு வந்து அவனை அழைப்பார் என்று தோன்றியது.
ஓவியங்களை பார்த்து முடித்தபின் பார்வையை விரிவாக்கும்போதே பிரமாண்டமான தூண்களை காணமுடிந்தது. வட்டமான தூண்களின் மேற்புறம் சிறுசிறு நீள கோடுகள் போன்ற வடிவத்தில் ஆம்லக்கா எனப்படும் அமைப்பு தூண்களுக்கு வெளியே புடைத்திருக்கும். தமிழ்நாட்டில் இவற்றை மிகச்சிறிதாகவே கண்டிருந்த கண்களுக்கு அது பிரமாண்டமானதாகவும் வித்தியாசமானதாகவும் இருந்தது. கண்களை விலக்குவது சிரமமாயிருந்தது. பாதுகாவலர் பலமுறை வெளியேறக் கூறியபோதும் அடுத்த குடைவரைக்குச் செல்லவேண்டுமே என்பதற்காகவே மனமின்றி வெளியே வந்தோம்.
இரண்டு, மூன்று, ஆறு, ஏழு, ஒன்பது, பத்து, பதினேழு ஆகிய ஓவியங்கள் அமைந்துள்ள முதன்மையான குடைவரைகளுக்குள் சென்று பார்த்தோம். வரும்போது ஜாதகக் கதைகளை வாசித்துவிட்டு வரவேண்டும் என ஜேகே கூறியதன் அவசியம் ஓவியங்களைக் காணும்போது புரிந்தது. வெறுமனே வரையப்பட்டுள்ள முகங்களை காண்பது அவை எத்தனை எழிலானதாக இருந்தாலும் சலிப்பை ஏற்படுத்திவிடும். அதுவே, அம்முகங்களை ஒரு பாத்திரங்களாக உணர்ந்து காணும்போது அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விழிகளை கால் பாதங்களை கைகள் மற்றும் விரல்கள் காட்டும் பாவங்களை பார்த்தப் பார்த்து ரசித்து தீர்வதேயில்லை. அதோடு கதையின் முதல் பகுதியை ஓரிடத்தில் பார்த்துவிட்டு அதன் அடுத்த பகுதி எங்கு உள்ளதென தேடிக் கண்டடையும் பரவசமும் உள்ளது. இதற்காகத்தான் அவர்கள் வரிசையை மாற்றி வைத்திருக்கிறார்கள் போலும்.
நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மக்கள் திரள் வேகமாக உள்ளே வரும். வண்ணங்கள் அழிந்து போயிருக்கும் சுவரில் டார்ச் அடித்து இவர்கள் என்னத்தைத்தான் பார்க்கிறார்கள் என நின்று ஒருகணம் குழம்பிவிட்டு புத்தருக்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு நகர்ந்துவிடும். அவர்கள் மேல் பரிதாபம் தோன்றும்போதே சில ஆண்டுகளுக்கு முன்வரை நானும் அப்படித்தானே இருந்தேன் என்ற கழிவிரக்கமும் தோன்றியது.
பதினோரு ஜாதகக் கதைகளை கொண்டுள்ள பதினேழாவது குடைவரையில் இரண்டு கதைகளுக்கான ஓவியங்களை பார்த்ததோடு முதல்நாள் காட்சியை மனதில்லாமல் முடித்துக்கொண்டு மறுநாள்தான் வரப்போகிறோமே என்ற ஆறுதலுடன் திரும்பினோம். அப்போதே மணி பிறபகல் நான்கைத் தாண்டிவிட்டது. நாற்பது பேரில் ஒருவர்கூட பசிக்கிறது எனக் கூறவோ உணர்த்தவோயில்லை என்பதை வியப்புடன் நினைவு கூர்கிறேன். இக்குழுவில் இளையவர்களும் மூத்தவர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை தங்குமிடம் சென்றவுடனும் இரவு உணவுக்குப்பின்னும் கலந்துரையாடல் நிகழ்ந்தது. நண்பர்கள் அவர்கள் என்ன உணர்ந்தார்கள் என்பதைக் கூறும்போது மற்றவர்கள் தவறவிட்டதை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இது அமைந்தது. வெவ்வேறு ஊர்களில் பல்வேறு வகையான பணிச் சூழலிலும் குடும்ப அமைப்பிலும் இருக்கும் எட்டு வயதிலிருந்து எழுபது வயதானவர்கள்வரை இருக்கும் குழு ஒரே ரசனையினால் மட்டும் இணைந்திருக்கிறது என்பதை அகம் மலர பார்த்துக் கொண்டிருந்தேன். யாருமே இருப்பிடம் குறித்தோ உணவு குறித்தோ வாகனப் பயணம் குறித்தோ எவ்விதப் புகாரும் கூறவில்லை என்பதும் பயணம் இனிமையுடன் நீடிக்க முக்கியமான காரணம்.
இரண்டாம் நாள் காலை நேராக பதினேழாவது குடைவரைக்குச் சென்றோம். முதல்நாள் பார்த்த ஓவியங்களை மறுபடியும் பார்த்தபின் மற்ற எல்லாக் கதைகளையும் பார்த்தோம். கதைகளை நண்பர்கள் பிராஸ்பரும் தேஜஸும் கூற ஆசிரியர் ஜேகே மேலதிக விவரங்களை மட்டும் முத்தாய்ப்பாக கூறினார். இப்போது எல்லோருக்குமே தனியாகவே ரசிக்கும் திறன் கூடியிருந்தது. மொத்தமாகவே இல்லாமல் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து பார்க்கத் தொடங்கினர்.
தினேழாவதை முடித்துவிட்டு நேராக இருபத்தி ஆறாவது குடைவரையை நோக்கிச் சென்றோம். பரிநிர்வாண புத்தரின் கண்கொள்ளாச் சிற்பம் அங்கு இருந்தது. வெவ்வேறு காலகட்டங்களில் குடைவரைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் மொத்த குடைவரைகளுக்குமான முழுமையான அமைப்பை முதலிலேயே உருவாக்கியிருக்கக்கூடும், எனவேதான் மற்ற எங்கும் இல்லாமல் முத்தாய்ப்பாக 26- வது குடைவரையில் பரிநிர்வாண புத்தரை அமைத்திருக்கிறார்கள் என ஜேகே கூறினார்.
பரிநிர்வான புத்தர் சிற்பத்திற்கு அருகிலேயே மாரனை வென்ற புத்தரின் சிற்பம் ஆளுயரத்திற்கு வடிக்கப்பட்டிருந்தது. வென்றது என்றால் வில்லெடுத்து அம்பு தொடுத்தல்ல, தன் புலன்களை தனக்குள்ளேயே ஒடுக்கி. மாரன் யானையில் வந்து வெவ்வேறு வித உத்திகளை கையாண்டு தோல்வியடைந்து புத்தரை வெல்லமுடியாமல் திரும்பவும் யானையேறி செல்வதை ஒரே சிற்பமாக அமைத்துள்ளார்கள். மாரனின் உணர்வுகளையும் புத்தரின் அமைதியையுமே சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். அடுத்தடுத்து அமைக்கப்பட்ட சிற்பங்களை பார்த்தபடியே ஒரு சுற்று வந்தபின் நடுவில் அமைந்திருந்த புத்தரைப் பார்த்தோம். மற்ற குடைவரைகளைவிட இங்கு புத்தருக்கு மேல் அமைக்கப்பட்ட கும்பமும் அதன் மேல் முக்குடையை குறிக்கும் சதுர அமைப்பும் பல ஓடுகள் போன்று உருவாக்கிய மேற்கூரையும் சிறப்பானதாக இருந்தது. எப்போதுமே மனதிலிருந்து இக்குடைவரை மறையாது. ஆயிரத்தி இருநூறு ஆண்டுகளுக்குமுன் இதை அமைத்தவர்களின் நோக்கம் இப்போதும் திறைவேறிக் கொண்டிருக்கிறது.
அடுத்து இருத்தியைந்து இருபத்து நாலு என இறங்கு முகத்தில் எல்லா குடைவரைகளையும் பார்த்து வந்தோம். சில குடைவரைகள் பாதியிலேயே கைவிடப்பட்டிருந்தன. அதனை உருவாக்க நிதியளித்தவர்கள் ஏதோவொரு காரணத்தால் நிதியை நிறுத்திவிட இப்பணிகளும் நின்றிருக்கும் என்பதே பரவலான கருத்து.
ஏற்கனவே பார்த்தவற்றையும் திரும்ப ஒருமுறை பார்த்துவிட்டு கீழிறங்கினோம். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கம் மனதில் தொக்கி நின்றது. முதல் குடைவரையின் இடதுபக்க சுவரில் இருந்த ஓவியத்தில் ஒரு பெண் போதிசத்வரை பார்த்தபடி பார்ப்பவர்களுக்கு முதுகைக் காட்டியபடி ஒயிலாக அமர்ந்திருப்பார். அவரது உருண்டைக் கொண்டையும் அதில் சுற்றப்பட்ட மல்லிகைச் சரமுமே நமக்குத் தெரியும். “இந்தப் பெண் ஒரு நாளாவது திரும்ப மாட்டாளா என ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது…” என ஜேகே ஏக்கத்துடன் கூறினார். “இத்தனை மாணவர்களை அழைத்து வந்து ஓவியங்களை ரசிக்க வைப்பவரை நிச்சயம் திரும்பிப் பார்ப்பார்” என நான் உளமாரக் கூறினேன். அவள் திரும்பிப் பார்ப்பதை ஒரு கணம் கற்பனையில் கண்டபோது உடல் சிலிர்த்தது.
அன்று மாலையே ஔரங்காபாத் சென்றோம். செல்லும்போது நண்பர் மகேந்திரனின் யோசனைப்படி முகம்மது பஷீரின் “உலகப் புகழ்பெற்ற மூக்கு” சிறுகதையை வீரராகவனும் திருடன் மணியன்பிள்ளையின் நூலிலிருந்து இரு அத்தியாயங்களை மகேந்திரனும் வாசித்தார்கள். பஷீரின் கதை மக்களின் மனங்கள் செல்லும் திசைகளை பகடியுடன் கூறுவதாக பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டது. திருடன் மணியன் பிள்ளையின் நூல் இலக்கிய வாசகன் வாசிக்கவேண்டுமா பரிந்துரைக்க தகுதி வாய்ந்ததா என்ற விவாதம் கிளம்பியது. இரண்டு தரப்பாக பிரிந்து கருத்துகள் தீவிரமாக வந்தாலும் எந்த முடிவும் எட்டப்படுவதற்குள் தங்குமிடம் வந்துவிட்டது. பிறகு விவாதத்தை தொடர்வதற்கு சமயம் அமையாமலேயே போய்விட்டது.
இரவு படுக்கையில், அஜந்தா ஓவியங்களின் நினைவே மனதெங்கும் நிறைந்திருந்தாலும் எல்லோரா சிற்பங்கள் பற்றிய எதிர்பார்ப்பும் லேசாக துளிர்விட்டு வளர்ந்தது. ஆசிரியர் ஜேகே கைலாசநாதர் ஆலயத்தைப் பார்ப்பதற்கு மட்டுமே மூன்று மணிநேரம் ஆகும் எனக் கூறியிருந்தார். ஒரு ஆலயத்தைக் காண ஏன் அவ்வளவு நேரம். முப்பத்து நான்கு குகைகள் இருக்கும் நிலையில் ஒன்றுக்கே இவ்வளவு நேரம் கொடுப்பது சரிதானா என்றெல்லாம் கேள்விகள் தோன்றிக் கொண்டிருந்தன. எல்லாம் கைலாசநாதர் ஆலயத்தைக் காணும்வரைதான்.
சற்று தூரத்திலேயே நண்பர் ராம்குமார் சுட்டிக் காட்டினார். காலைப்பனியில் மலையும் ஆலயமும் சாம்பல் வண்ணத்தில் ஒன்றாகவே தெரிந்தன. பெரிதாக எதிர்பார்த்துவிட்டோமா என லேசாக ஐயம் எட்டிப் பார்க்கும் முன் அருகில் சென்று விட்டோம். அதன் பிரமாண்ட செயல்பாட்டைக் கண்டதும் அறிவு மயங்கி வியப்பு மட்டுமே மேலோங்கி நின்றது. அங்கு இருந்த ஐந்து மணி நேரமுமும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றா என ஒருவித விம்மல் தோன்றிக் கொண்டே இருந்தது. ஆசிரியர் ஜேகேவும் நாம் நிற்பது மலைக்கு நடுவில் என அவ்வப்போது நினைவுபடுத்தி சிலிர்க்க வைத்தார்.
முன்பக்க சுவர்களில் ஒன்றரை ஆள் உயரத்தில் சிதைந்த நிலையில் பல சிற்பங்ககள் இருந்தன. இருக்கும் சில தடயங்களைக் கொண்டு யூகித்து அது என்ன சிற்பம் என அறிந்து அவை சிதைவதற்கு முன்னிருந்த நிலையினை மனதிற்குள் கண்டது பேரனுபவம். ஆலயத்திற்குள் எட்டு வைப்பதற்கே அரைமணி நேரம் ஆகிவிட்டது.
உயரமான வாசலைக் கடந்து உள்ளே சென்றதும் எதிர்பட்டது தனலட்சுமி. இருபக்கமும் யானைகள் சூழ விற்றிருந்தார். அவரது இருக்கைக்கு கீழே சிறு பாத்திரங்கள் போல பரவியிருப்பது என்ன என யோசித்தபோது “அவை தாமரை இலைகள்” எனக் கூறினார் ஜேகே. சட்டென அகம்திறந்து மலர்ந்தது. தாமரைக் குளத்திலேயே தாமரைமலர்மேல் அமர்ந்திருக்கும் தேவி. ஒருகணத்தில் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் கடந்த சிற்பத்தின் மூலம் அதை வடித்த சிற்பியின் அகத்தை சென்றடைந்தோம்.
ஒவ்வொரு சிற்பத்தையும் இப்படி ஏதோவொன்றை கண்டு அதன்மூலம் பெரும் திறப்பை அடைந்துகொண்டே இருந்தோம். எருமைத் தலையை கண்டு மகிஷாசுரமர்த்தினியையும், யானை தடத்தைக்கண்டு கஜசம்ஹாரமூர்த்தியையும், வலிமையான வில்லைக் கண்டு திரிபுராந்தகன் என்றும் ஆசிரியர் ஜெகேவின் துணையுடன் அறிந்துகொண்டே இருந்தோம்.
வெவ்வேறு உணர்வுகளைக் காட்டும் எத்தனை விதமான சிலைகள் பார்த்துப்பார்த்து தீர்ந்துவிடாத செல்வங்கள். யானைகளும் சிம்மங்களும் பொருதிக் கொண்டிருக்கும் சுற்றுவட்டத்தில் அமைந்த சிற்பங்கள் சில சிதைந்திருந்தபோதும், யானையின் விரைவும் சிம்மத்தின் சீறலும் அந்தப் போரை நேரில் காண்பதான உணர்வை ஏற்படுத்துகின்றன.
மிக உயரமான சிற்பங்களுக்கு இடையே சிறிய நுண்மையான சிற்பங்களும் உள்ளன. அதிலும் ராமாயண மற்றும் மகாபாரத சித்தரிப்புச் சிற்பங்கள் சிற்பிகளின் திறனை வியக்கவைக்கின்றன. இதிகாசங்களை எத்தனையோ திரைப்படங்களில் தொலைக்காட்சி தொடர்களில் பார்த்திருந்தபோதும் கல்லில் வடித்த சிறு சிற்பங்களில் காட்டப்பட்டுள்ள அப்பாத்திரங்களின் உணர்வுகள் மூலம் இதிகாசங்களின் கதைக்குள் நாமும் நுழைந்து அதை நேரில் காண்பதான உணர்வை அடைவது பரவச அனுபவம். அவ்வப்போது கேட்ட “அர்ஷன்… அர்ஷன்” என்ற யுவராணியின் குரல் அப்படியே அக்காலத்துக்குள் உறைந்துவிடாமல் நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.
சிவன் தேவியுடன் அமர்ந்திருக்கும் கைலாயத்தை கால்மடக்கி அமர்ந்து தன் இருபது கரங்களால் அசைக்கும் இராவணனின் சிற்பத்தில் சிறிது நேரம் நிலைத்து, அருகிலிருந்த மகாபாரத காட்சியில் பல நிமிடங்களை கழித்து சற்று மெதுவாக நகர்ந்து முதல் தளத்திற்கு சென்றோம். கருவறைக்கு முன்னுள்ள மகாமண்டபத்தின் மேற்கூரையில் இருந்த அஜந்தா பாணியிலான ஓவியங்களை டார்ச் ஒளியின் மூலம் அதே வியப்புடன் பார்த்துவிட்டு கைலாயநாதரை சில கணங்கள் தரிசித்துவிட்டு வெளியே வந்தோம். முதல் தளத்தின் வடகிழக்கு மூலையில் அமர்ந்து ஆலயத்தின் முழுத் தோற்றத்தையும் பார்த்தபடி அரைமணி நேரம் அமர்ந்திருந்தோம். மேற்புறம் மரங்கள் வளர்ந்திருந்த மலைக்குள் அமைந்திருந்த இவ்வழகிய ஆலயத்தை தன் அகக்கண்ணால் கண்ட அந்த மாகசிற்பியின் ஞானத்தை எண்ணியபோது மெல்லிய சிலிப்பு தோன்றியது. ஆலயத்தை பாரக்க வந்து ஐந்துமணி நேரம் ஆகியிருந்தது. இந்த ஒவ்வொரு கணமும் வாழ்வின் எல்லைவரை எண்ணும் போதெல்லாம் ஒளி கொள்ளும் பொற்கணங்கள்தான்.
அதன் பிறகு முதல் குடைவரையில் தொடங்கி ஐந்து வரையில் பார்த்துவிட்டு மறுநாள் முப்பத்து நான்கில் தொடங்கினோம். எத்தனையெத்தனை பிரமாண்டமான மகாவிரரின், சிவனின், விஷ்ணுவின் சிற்பங்கள். அந்த சிற்பிகளின் கனவுகளை நாங்கள் நேரில் கண்டு மனம் விதிர்த்தபடியே நடந்தோம். இந்தப் பொழுது முடிந்துவிடக் கூடாது என்று நப்பாசை தோன்றியது. எல்லாக் குடைவரைகளையும் பார்த்தபின் முத்தாய்ப்பாக கைலாயநாதர் ஆலயத்தை பருந்துப் பார்வையில் பார்க்க மேலே சென்றோம்.
உள்நின்று பார்த்ததை சற்று விலக்கி வைத்துப் பார்த்தோம். ஆலயத்தை அகக் கண்ணில் கண்ட ஞானியின் தரிசனத்தின் ஒருதுளியை தரிசிப்பான உணர்வு தோன்றியது. ஆசிரியருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். நாங்களெல்லாம் பார்த்துத் தீராத ஏக்கத்துடன் தளும்பிக்கொண்டு இருந்ததை பல சேய்களுக்கு முலையூட்டிய தாயின் நிறைவோடு ரசித்துக் கொண்டிருந்தார் ஜேகே.
இனி, அஜந்தா எல்லோராவை எண்ணும் போதெல்லாம் “அர்ஸன… அர்ஸன்” என்ற பின்னிசையுடன் ஓவியங்களும் சிற்பங்களும் ஜேகேவின் சாந்த முகமும் காட்சிகளாக நகரும். அதற்கு ஆதாரப் பின்புல வெண்திரையாக ஆசிரியர் ஜெயமோகனின் முகம் அமைந்திருக்கும்.
இதே குழுவுடன் இன்னும் பல இடங்களுக்குச் செல்லவேண்டுமென உள்ளம் தவிக்கிறது. அமைய வேண்டுமென ஆசிரியர்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.
மிக்க பரவச அன்புடன்
கா. சிவா