ஆசிரியருக்கு,
இரவு சரியாக 12.20 தற்போது. தங்களுடைய காணொளியை கண்டேன். கண்டேன் என்பதை விட கேட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.ஒரு நவீன இளைய தலைமுறையின் பெற்றோர் என்ற இடத்திலிருந்து உண்மையாக சிந்தித்து இருக்கிறீர்கள்.இதுதான் இன்றைய இளந்தலை முறையினரின் வாழ்க்கை.திரிசங்கு சொர்க்கம் . அண்மைக்கால முதலாளித்துவம் நம்முடைய இளந்தலைமுறையை எப்படி அடிமையாக்கி வைத்திருக்கிறது.பணம், இலாபக்கணக்கு ஒன்றே குறிக்கோளாக கொண்டு இயந்திரத் தனமாக இயங்கும் நவீன தொழில் நிறுவனங்கள்.நிறைய மனநோய்கள்,மண முறிவுகள்,உடல் உபாதைகள், எல்லாவற்றிற்கும் காரணம் நம்முடைய இளைய தலைமுறையினர் வாழும் செயற்கையான வாழ்க்கையும் கூட.மேலைநாட்டு வாழ்க்கை முறையை இங்கு வாழ ஆசைப்படுவதுதான்.பிரியாணி கலாச்சாரம்.
செயற்கையான ஒரு நேரத்தட்டுப்பாட்டை உருவாக்கி மன அழுத்தத்தை உருவாக்கி வரும் நவீன தொழில் அதிபர்கள்.அகப்பட்டு கொண்ட இளம் தலைமுறை பெற்றோர்கள்.குழந்தை வளர்ப்பு இன்னும் பெரிய சவால். பள்ளிகளில் போட்டித்தேர்வுகளுக்காக வளர்க்கப்படும் குழந்தைகள்.
வாழ்க்கை நெறிகளை,விழுமியங்களை கற்றுக்கொடுக்க சரியான முறைகள் இல்லை.சிந்திக்க நேரமில்லாதா ஒரு இளந்தலைமுறை. என்ன செய்ய இயலும்?
எலிப்பந்தயம் (Rate race)என்பது போல போட்டி நிறைந்த உலகம்.இலக்கு மரண குழியாக இருக்கிறது.நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.கார்ப்பரேட் கலாச்சாரத்தில் தனித்து வாழுவது,தனித்தன்மையுடன் வாழுவது ஒரு பெரிய சவால்.தன்னை, தன் குடும்பத்தை அன்றாட வாழ்க்கை எனும் சமுத்திரத்தில் தினமும் எதிர் நீச்சல் போட்டு காப்பாற்ற வேண்டிய ஒரு சாதாரண குடும்பத் தலைவனுக்கு மிகுந்த பொறுப்புணர்வு இருக்கிறது.இதற்கு அவனது மனதை அவன் வசப்படுத்த “முழுமையறிவு “போன்ற அறிவு தளங்கள் இன்னும் தன்னுடைய தளத்தை விரிவு படுத்த வேண்டும் என்பதே என் போன்ற வாசகனின் விருப்பம்.
தா.சிதம்பரம்.
தோவாளை.