
தாய் ஒன்று தன் கன்றை நாடுவது போல லோகமாதேவி தன் சுற்றுச்சூழலை நாடுகிறார் போலும். அவர் நடந்து போகும் பாதைகளில் உள்ள புற்களும், செடிகளும், பூக்களும், மரங்களும், இளங்கனிகளும் (தாவரவியலில் காய் (vegetable) என்ற வார்த்தையே கிடையாது தெரியுமா?;( முதிர்கனிகளும் அவரோடு பேசவும் அவரால் தொட்டுப்பார்க்கப்படவும் காத்திருக்கும் போலும்!
தாவரவியல் ஒரு அறிமுகம் என்பதற்கு லோகமாதேவியை விட பொருத்தமான ஒருவர கிடைக்கமாட்டார். அவர் ஒரு கல்லூரி ஆசிரியர் என்பது முதலில் பயப்படுத்தினாலும், அவர் ஒரு எழுத்தாளர், தந்தைமரம் போன்ற ஒன்றை எழுதியவர் என்பது நம்பிக்கை தந்திருந்தது. ‘அந்த சமயத்தில் வீட்டில் இதைப்படிக்கும் அளவுக்குதான் சுதந்திரம் கிடைத்தது என்ற மெல்லிய புன்னகையோடு அவர் சொன்னபோது அவர் இன்னும் நெருங்கி வந்திருந்தார். ‘பிரபஞ்சத்தின் ஆணைப்படியே பூக்கள் சூலுறக் காத்திருக்கின்றன், விண்ணகத்தூதர் போல பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் தங்களைக் கவருவதைத்தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாத பல வண்ண பல வடிவ பூவிதழ்களை நாடிச் செல்கின்றன (நாமோ பூக்கம் நமக்காக பூத்திருக்கின்றன என்று பெருமிதமாக கவிதை எழுதி தள்ளுகிறோம்!) என்றபோது அடுத்த வாரம் வரவேண்டிய தத்துவ வகுப்பு இன்றே துவங்கி விட்டதா என்ற வினா எழுந்தது. இவர் வகுப்புக்கு நான் வந்ததும் பிரபஞ்சத்தின் ஆணைதான் போலும்.
அல்லிவட்டம் புள்ளிவட்டம், மகரந்தம், தன் மகரந்தச்சேர்க்கை, அயல் மகரந்தச் சேர்க்கை என்று நான் கிட்டத்தட்ட நாற்பததைந்து வருடங்களுக்கு முன்னால் படித்தது நினவுக்குமிழிகளாக மேலெழுந்து வந்தது ஒரு சுவாரசியமான அனுபவம். இதையே பத்து வருடங்களுக்கு முன்னால் படித்திருந்த முன் வரிசை சிறார்களுக்கு ஏற்ற வேகத்தில் லோகமாதேவி இதை சொல்லிக்கொண்டு போனபோது கொஞ்சம் கோபமும் மூச்சும் வாங்கியது, இருந்தாலும் குறைந்த அளவு வகுப்பு மணித்துளிகளும், அதிக நேரம் களச் செயல்பாடுகளுமாக அவருடன் நித்யவனத்தை சுற்றி வந்தபோது அனைவருக்கும் இணையாகவே உணர்ந்தேன். ஒரு தாவரவியல் ஆசிரியராக அவர் எங்களுக்கு காண்பிக்க இலைகளைக் கிழித்தபோதும், பூக்களை இரக்கமின்றி வெட்டி அதன் உட்புறங்களை சுட்டிக் காண்பித்தபோதும் மனம் நடுங்கினாலும், அறிவின் பாதை இவ்வாறுதான் போடப்படுகிறது என்று புரிந்ததால் அமைதியடைந்தேன்.
களப் பயணிகளாக நாங்கள் நித்யவன செடிகளூடே விதை சேகரிக்கவும், பல்வகை இலை, பூ பறிக்கவும், வேர்களை நாடியும் சென்று வெளியே வந்தபோது எங்கள் ஆடைகள், கைகள் கால்கள் முழுவதும் முள்ளம்பன்றிகள் போல் கொத்து கொத்தாக முட்களும், பந்துபோன்ர தாவரப்பகுதிகளும் மகரந்தப் பொடிகளும் தொற்றிக் கொண்டிருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக கொஞ்சிக்கொண்டே பிய்த்து எடுத்து அங்கங்கே போடும்போது ஒரு சிலிர்ப்பு உடலெங்கும் ஓடியது. எங்கள் ஆசிரியர் சொல்லிக்கொண்டிருந்த அயல் மகரந்தச்சேர்க்கையை நாங்கள் ஒவ்வொருவரும் நாங்கள் அறியாமலேயே செய்து கொண்டிருந்தோம். நான் கடத்திய ஒரு விதை முளைக்கலாம், அழியலாம், காற்றால் வேறெங்கோ கொண்டு செல்லப்படலாம், பறவை உண்ணலாம்,, பாறை இடுக்கில் விழுந்து புல்லாகி பாறையை நெக்குவிடச்செய்து பறவைகளை அங்கே வரவழைக்கலாம், வேறு ஏதாவது இனத்தோடு இணைந்து புதுமலர் உதிக்கலாம். இந்த ஒரு மாபெரும் இனப்பெருக்கத்துக்கு நானும் ஒரு காரணி!
அனிச்சமலர் கண்டோம்,, மயில்கொன்றை கண்டோம், காட்டுக்கத்தரி கண்டோம் மந்தாரைப் பூவும் புரசுப்பூவும் பூத்திருக்கக்கண்டோம். கண்டோம் கண்டோம் கண்டறியாதன கண்டோம். மலரமுது உண்டோம், மரங்களை அணைத்தோம்.
லோகமாதேவியின் வகுப்பில் எனக்குத் தெரிந்த சில ஒளிரும் தருணங்கள்:
- ஒரே பூவில் ஆணும் பெண்ணும் அவரவர்க்கு வழிவிட்டு சூலுறவும் மகரந்தம் அனுப்பவும் காத்திருக்கின்றனவாம்.
- மலருக்குள் ஒரு பெண் நிரந்தரமாக சூலுறக் காத்திருக்கிறாள்.
- மது இருக்கும் மலரின் ஆழத்துக்கு ஏற்ப வண்ணத்துப்பூச்சியின் உறிஞ்ஜான்களின் நீளம் வளர்ந்திருக்குமாம்.
- தன் இனம் அல்லாது வேறு இனப் பூக்களின் மகரந்தத்தை (அவை எங்கெங்கும் பரவியிருந்தாலும்) தன் கருப்பைக்கு பெண் மலர்கள் அனுமதிப்பதில்லையாம்.
- வான் வெளியில் ஒரு மகரந்தப்பாதை என்றென்றும் இருக்குமாம்.
- ஒரு நிரந்தரத் தேடலும் நிரந்தரக் காத்திருப்பும் நிரந்தரத் தயார்நிலையும் தாவர உலகின் இலக்கணமாம்.
- ஒளியை நோக்கி தன்னை முன்னிறுத்தும் இலைகளும் பூக்களும் கதிரவனின் கருணைக்காகவும் கட்டளைக்காகவும் என்றும் காத்திருக்கின்றனவாம்.
- ஒவ்வொரு தாவரமும் Phloem சூரிய ஒளியை மாவுச்சத்தாக மாற்றி மரமெங்கும் வேர்வரை அனுப்புவதையும் Xylum நீரை மேல்நோக்கி இலைநுனி வரை அனுப்புவதையும் ஒய்வு ஒழிவில்லாமல் செய்துகொண்டே இருக்கிறது . எனவே ஒவ்வொரு தாவரமும் மின்னல் வீச்சென துடித்துக்கொண்டே இருக்கிறது.
- இந்த ஆட்டத்தை stomata புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டே தனக்கு விதிக்கப்பட்ட முக்கியமான வேலையை செய்து கொண்டிருக்கிறது.
- மலர்களின் அடுக்கமைப்பும் நிறங்களும் பூச்சிகளை கவரத்தானே அன்ரி வேறெதற்கும் இல்லை.
- தாவர உலகில் எதுவுமே ஒன்று போல் ஒன்று இல்லை.
- தாவர உலகில் களை என்று எதுவும் இல்லை. தவறான இடத்தில் முளைத்த சரியான தாவரங்களே உள்ளன. தம் இடமாறு தோற்றப்பிழையை என்றாவது அறிந்துகொண்டு அவை விலகிச்செல்லும். இதனாலேயே பார்த்தீனியச் செடிகளைகூட பறிக்க மனது வராமல் விட நேர்ந்தது.
பிரபஞ்சத்தின் ஆணை என்று லோகமாதேவி திரும்பத்திரும்பக் கூறினார். Plant Intelligence என்று மாய்ந்து மாய்ந்து கூறினார்.
அதே பிரபஞ்சத்தின் ஆணைப்படியே நாங்களும் இந்த வகுப்புக்கு வந்திருக்கிறோம் என்றே தோன்றியது.
ரவீந்திரன்.