நண்பர் ஃபெய்ஸ் காதிரி உருது மொழி அறிஞர். இந்திய உருதுமொழி இலக்கிய இயக்கத்துடன் முப்பதாண்டுகளாகத் தொடர்புடையவர். உருது மொழி ஆசிரியரும்கூட. அவர் நடத்தும் உருது இலக்கிய அறிமுக வகுப்புகள் நிகழ்கின்றன (இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்கள் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்)
உருதுமொழி இலக்கியம் இந்தியாவின் பண்பாட்டுச் செல்வங்களில் ஒன்று. பண்டைய இந்தியாவில் உருவான இந்த இலக்கிய மரபு இன்று பாகிஸ்தான் உட்பட பலநாடுகளில் பரவியுள்ளது. குவாஜா முகையதீன் சிஷ்திமுதலிய ஆன்மிகச்செல்வர்கள்மிர்ஸா காலிப் போன்ற நாடோடிப் பெருங்கவிஞர்கள், ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ் போன்ற நவீனக் கவிஞர்கள் என அதன் வீச்சு பெரியது.
இந்தியாவின் இரண்டு பெரிய பண்பாட்டியக்கங்களான சூஃபி மெய்யியல் மற்றும் கஸல் இசைமரபு ஆகியவற்றை அறிய உருது இலக்கிய அறிமுகம் மிக அடிப்படையானது.
உருது இலக்கியத்தை அறியாமல் இந்திய இலக்கியத்தை ஒருவர் அர்த்தபூர்வமாக அறிய முடியாது. ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முடியாது.
எனக்கே இந்த உருது இலக்கியம் சார்ந்த விரிவான அறிமுகம் இல்லை. ஆகவே நானும் ஒரு மாணவனாக இவ்வகுப்பில் கலந்துகொள்வதாக உள்ளேன்.
நாள் ஏப்ரல் 4,5 மற்றும் 6
தொடர்புக்கு [email protected]
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவை
யோக வகுப்புகள்
குரு சௌந்தர் நடத்தும் யோக வகுப்புகள் இன்று மலேசியா, சிஙகப்பூர், இலங்கை என பல நாடுகளில் பரவி வருகின்றன. பிகார் சத்யானந்த யோகமையம் என்னும் மரபார்ந்த அமைப்பின் மாணவராக இருபதாண்டுகளுக்கும் மேல் பயிற்சி பெற்ற சௌந்தரின் வகுப்புகள் பதஞ்சலி வகுத்த யோக முறையை முழுமையாகச் சார்ந்து அமைந்தவை. இதுவரை முழுமையறிவு வழியாக நாநூறுக்கும் மேற்பட்டவர்கள் இங்கே நிகழும் வகுப்புகளில் பங்கெடுத்துள்ளனர்.
யோக வகுப்புகளில் முதன்மையான அம்சம் ஆசிரியரே. அவர் ஓர் உடற்பயிற்சிப் பயிற்றுநர் போன்றவர் அல்ல. அவருடைய ஆளுமை முக்கியமானது. யோகமாணவர்கள் அவருடன் கொள்ளும் நீண்டகால தனிப்பட்ட உறவு யோகத்தில் முக்கியமானது. அத்துடன் யோக முறையின் தத்துவங்களை முறைப்படிக் கற்று அவற்றை விளக்குபவராகவும் அவர் இருக்கவேண்டும். அவ்வகையில் சௌந்தர் இன்று தமிழகத்தில் யோகம் பயிற்றுவிப்போரில் முதன்மையான ஒருவர்.
இன்றைய வாழ்க்கைச்சூழலில் யோகம் இரண்டு நிலைகளில் முக்கியமானது. ஒன்று, உடலில் ஓரிரு உறுப்புகளை மட்டுமே மிகையாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் நிலை இப்போதிருப்பதுபோல மானுடர்களுக்கு முன்பெப்போதும் இருந்ததில்லை. குறிப்பாக முதுகெலும்பு மற்றும் கழுத்தெலும்புகள் மிக அதிகமான சுமையை அடையும்படி இன்றைய ‘அமர்ந்திருக்கும் வாழ்க்கைமுறை’ நம்மை ஆக்கியுள்ளது. இதன் விளைவாக நீடித்த வலிகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. முதுகு, கழுத்து வலிகள் உளவியல் சார்ந்தவையும்கூட.
எந்த படைப்பூக்கமும் இல்லாமல், நீண்டநேரம் ஒரே வேலையைச் செய்யும்படி இன்றைய சூழல் நம்மை ஆக்கியுள்ளது. இது உருவாக்கும் சலிப்பினால் நாம் பொருளில்லா கேளிக்கைகளில் அதிகநேரம் செலவிடுகிறோம். ஆகவே உளம் சிதறி கவனம் குவியமுடியாதவர்களாகிறோம். தூக்கமின்மை, தரமான தூக்கம் அமையாமை போன்ற நோய்களை ஈட்டிக்கொள்கிறோம்.
யோகப்பயிற்சி இன்று உலகமெங்கும் இந்தச் சிக்கல்களுக்கான அருமருந்தாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் இந்தியாவிலேயே அது மிகக்குறைவாக பயிலப்படுகிறது. முறையான மரபுகொண்ட யோக நிலையங்களில், யோக ஆசிரியர்களிடமிருந்து அவற்றை நேரில் பயில்வது மிக அவசியமான ஒன்று. குறிப்பாக மூளையுழைப்பில் இருப்பவர்களுக்கு. அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
நாள் மார்ச் 28 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்பு [email protected]
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள். இடமிருப்பவை
ஆயுர்வேத மருத்துவரும், புகழ்பெற்ற இலக்கியவாதியுமான சுனீல் கிருஷ்ணன் இதுவரை இரண்டு ஆயுர்வேத வகுப்புகள் நடத்தியிருக்கிறார். நீண்ட இடைவேளைக்குப்பின் மூன்றாவது வகுப்பை நடத்தவிருக்கிறார்.
இந்த வகுப்பு மருத்துவ வகுப்பு அல்ல. ஆயுர்வேதம் என்னும் தொன்மையான இந்திய அறிவுத்துறையின் மீதான ஓர் அறிமுகம் மட்டுமே. அறிய விரும்பும் சாமானியர்களுக்கான வகுப்பு இது. நீண்டகால கற்பித்தல் அனுபவம் கொண்ட ஓர் இலக்கிய ஆசிரியரால் நடத்தப்படுவதனால் பொதுவான ஆர்வம்கொண்ட எவருக்குமே சுவாரசியமான வகுப்பாக அமையும்.
ஆயுர்வேத அறிமுகம் ஏன் தேவை? இரு சாராருக்கு இவ்வறிமுகம் தேவை என நினைப்பதனால் இவ்வகுப்பை அமைத்துள்ளோம்.
யோகம், தியானம் ஆகியவற்றில் பயிற்சி பெறுபவர்களுக்கு ஆயுர்வேத அறிமுகம் இன்றியமையாததாக நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. தன் உடலை (காயம்), தன் மூச்சை (பிராணன்), தன் உள்ளத்தை (சித்தம்) கவனிப்பது யோகம்- தியானம் ஆகியவற்றில் அவசியமானது. பெரும்பாலும் தோராயமான புரிதலே நம்மிடம் உள்ளது. பல புரிதல்கள் பிழையானவையும்கூட. பல எண்ணங்கள் மிகையானவை. சரியான புரிதலை அடைய இந்த வகுப்பு மிக உதவியானது.
சாமானியர்கள், அன்றாட நிலையில் தங்கள் உடலைப் பற்றிய அறிதலைக் கொண்டிருக்கவேண்டும். எது உடலுக்கு உகந்தது, எது ஒவ்வாதது என தொடங்கி தன் உடல் செயல்படும் விதம் பற்றிய ஒரு புரிதல் தேவை. அது இயல்பான வாழ்க்கைக்கும் பயணம் போன்றவற்றுக்கும் அவசியமானது. அன்றாடவாழ்வில் நாம் உணவு, உடல்நிலை பற்றிகொண்டுள்ள பல எண்ணங்கள் ஆதாரங்கள் அற்ற நாட்டுப்புற நம்பிக்கைகளே. அவற்றை சரியானபடி புரிந்துகொண்டாகவேண்டும். நோய் அறிகுறிகள் இருந்தால் அவற்றை முன்னரே அறியவும் இவை உதவும். அதற்காகவே இவ்வகுப்புகள்.
நாள் மார்ச் 21,22 மற்றும் 23
தொடர்புக்கு
மேலைத்தத்துவ அறிமுகம்
அஜிதன் நடத்திவரும் மேலைத்தத்துவ வகுப்புகள் பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இன்றைய நவீனச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள, இன்றைய அரசியலையும் திரைப்படம் உட்பட கலைகளையும், இலக்கியத்தையும் உள்வாங்க அவையே அடிப்படையானவை. மேலைச்சிந்தனைப் பயிற்சி அற்ற ஒருவரால் அவற்றை முழுமையாக புரிந்துகொள்ளவோ மதிப்பிடவோ முடியாது. நிர்வாகவியலில்கூட அடிப்படைகள் மேலைச்சிந்தனை சார்ந்தவை. ஆகவே நவீன மனிதனுக்கு தவிர்க்கவேமுடியாதவை.
மேலைச்சிந்தனைகளை நாம் துண்டுதுண்டாக கட்டுரைகள், மேற்கோள்கள் வழியாகவே அறிந்திருக்கிறோம். அவை பலசமயம் நம் கற்பனைகள், அந்தத சூழல்கள் ஆகியவற்றை ஒட்டி பெரும்பாலும் நம்மால் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும். தொடக்கம் முதல் மேலைச்சிந்தனை எப்படி அடிப்படையான வினாக்கள், மற்றும் அவற்றின் மீதான விவாதமாக உருவாகி வந்துள்ளது என்பதை அறிவது மிக அவசியமான ஒன்று.
அத்தகைய அறிமுக வகுப்பு இது. ஒட்டுமொத்தமாக நவீன மேலைச்சிந்தனைகளை அறிமுகம் செய்து, அவற்றை மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதற்கான அடிப்படைகளையும் அளிக்கிறது.
நாள் மார்ச் 14, 15 மற்றும் 16
தொடர்புக்கு
வரவிருக்கும் நிகழ்வுகள்

கிறிஸ்தவ மெய்யியல் அறிமுகம்
சிறில் அலெக்ஸ் நடத்தும் மூன்றாவது கிறிஸ்தவ மெய்யியல் அறிமுக வகுப்பு இது. இதற்கு முந்தைய வகுப்புகள் மிகப்பெரிய வரலாற்று- பண்பாட்டு அறிமுகமாக அமைந்திருந்தன என்று பலரும் எழுதியிருந்தார்கள்.
கிறிஸ்தவமே ஐரோப்பியப் பண்பாட்டின் அடிப்படை. கிறிஸ்தவ இறையியலைப் புரிந்துகொள்ளாமல் ஐரோப்பிய இலக்கியம், திரைப்படம் எதையும் சரிவர அறிய முடியாது. ஐரோப்பியப் பண்பாட்டை ஒட்டியே நாம் வாழும் இன்றைய நவீனப்பண்பாடும் உருவாகியுள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களேகூட கிறிஸ்தவ இறையியலையோ, வரலாற்றையோ அறிந்தவர்கள் அல்ல. வெறும் பக்தியை மட்டுமே அறிந்திருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள், எஞ்சியோர் எதையும் அறிந்திருக்கவில்லை.
ஒரு நவீன வாசகன் உலகசிந்தனைக்குள் நுழைவதற்கு கிறிஸ்தவ இறையியல் அறிமுகம் மிக அவசியமானது. இந்து மெய்யியலை முழுதறியவும்கூட அதை அறிவதும் ஒப்பிடுவதும் அவசியமானது. சிறில் கிறிஸ்தவ இறையியலை முறையாகக் கற்றவர். நவீன இலக்கிய எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும்கூட. நிதானமான, நகைச்சுவையுணர்வுகொண்ட பேச்சாளர். இக்கல்வியை அளிக்க முதன்மைத் தகுதி கொண்ட ஆளுமை
நாள் ஏப்ரல் 11, 12 மற்றும் 13
தொடர்புக்கு
[email protected]
- கிறிஸ்தவக் கல்வி இந்து ஆன்மிகத்திற்கு எதற்காக?
- கிறிஸ்தவ இறையியல் கல்வி- கடிதம்
- கிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம்
- பைபிள், கடிதங்கள்
- விவிலிய தரிசனம்
கர்நாடக இசை அறிமுகம்
முழுமையறிவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக மேலை இசை அறிமுக வகுப்புகள் முன்பு அஜிதனால் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து இந்திய இசை, குறிப்பாக கர்நாடக இசையை அறிமுகம் செய்யும் பயிற்சி வகுப்பை நடத்த எண்ணினோம். ஓராண்டாக முயன்றும் அதற்குரிய ஆசிரியரைக் கண்டடைய முடியவில்லை. இங்கே இசை கற்றவர்களும், கற்பிப்பவர்களும் மரபான முறையில் கற்று அதிலேயே நின்றிருக்கிறார்கள். அது ஆசிரியருடன் அமர்ந்து சரளிவரிசை எனப்படும் சுவரங்களை பாடிப்பாடி கற்றுக்கொள்ளும் முறை. அதற்குப் பல ஆண்டு தொடர் பயிற்சி தேவை.
நாங்கள் உத்தேசிப்பது இசை கேட்பதற்கான பயிற்சி, பாடுவதற்கானது அல்ல. இந்திய இசைக்குள் நுழைவதற்கான ஒரு தொடக்கம். அதை நவீனமுறையில் கற்பிக்கும் ஆசிரியர். நாங்கள் நடத்திவரும் எல்லா வகுப்புகளும் நவீன முறைப்படி அமைந்தவை. தீவிரமான, குறுகியகால நேரடிப் பயிற்சிகள் இவை. நவீன கல்விமுறையின் எல்லா முறைமைகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக்கொள்பவை. இசையையும் அவ்வாறே கற்பிக்க முடியும். மூன்றுநாட்களில் இசையின் அடிப்படைகளை பயிற்றுவித்து முதன்மையான சில ராகங்களையும் அடையாளம் காட்டமுடியும். அது ஒரு தொடக்கம். இசையைப் பொறுத்தவரை ‘காது திறப்பது’ தான் முக்கியம். அதன்பின் காதே இசையை கேட்கத் தொடங்கிவிடும்.
ஆலயக்கலை ஆசிரியரான ஜெயக்குமாரே இசையை அறிமுகம் செய்யும் வகுப்புகளையும் நடத்த முன்வந்தார். அவர் கலாக்ஷேத்ராவில் முறையாக இசைபயின்றவர், இசை ஆசிரியர், பாடகராகவும் பணிபுரிபவர். நம் நண்பர்களுக்கு நன்கு தெரிந்தவர்.
நாள்: ஏப்ரல் 18 19 20 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு
நான் இரண்டு மேடையுரைப் பயிற்சி வகுப்புகளை முன்பு நடத்தியிருக்கிறேன். போதிய அளவுக்கு பங்கேற்பாளர்கள் இல்லாததனால் அவை நிறுத்தப்பட்டன. அவை 7 நிமிடம் ஒரு மேடையில் சுருக்கமாகப் பேசுவதற்கான பயிற்சிகள். பேச்சை கட்டமைப்பது, பேசுவது ஆகியவற்றுக்கான வகுப்புகள். இந்த வகுப்புகள் பொதுவாக உரையாடுவதற்கான பயிற்சிகளும்கூட. ஒருவகையில் சிந்தனையை வடிவமைப்பவையும் ஆகும்.
மீண்டும் ஒரு வகுப்பை நடத்தும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்டனர், ஒரு குழு பணம் கட்டிவிட்டது. ஆகவே மேடையுரைப்பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்படுகின்றன.
நாள்: ஏப்ரல் 25, 26, 27 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு