தாவரங்களும் குழந்தைகளும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தாவரவியல் துறையில் ஆசிரியராக இருந்து வருகிறேன். இயற்கையைக் குறித்து அறிந்து கொள்ளுதலையும் அதை இளைஞர்களுக்குக் கற்பித்தலையும் பெரும் பாக்கியமாகக் கருதி,  ஒவ்வொரு நாளும் கற்பித்தலை அகமகிழ்ந்தே செய்கிறேன். எனினும் சமீபத்தில் தாவரவியல் அறிமுக வகுப்பைத் தாவரவியல் மாணவர்கள் அல்லாதவர்களுக்கு மூன்று நாட்கள் கற்பித்ததைப் போல அத்தனை மகிழ்ந்து இதுவரை செய்ததில்லை.

வகுப்புப் பற்றிய அறிவிப்பு வந்தபின்னர் தாவரவியலைக் குறித்து அறிந்துகொள்ள எத்தனை பேர் தயாராக இருப்பார்கள் என்னும் சந்தேகம்  எனக்கிருந்தது.  ஆனால் 40 பேர்வரை பங்கேற்பாளர்கள் இருந்ததும் அதில் பலர் குடும்பமாகக் குழந்தைகளுடன் வந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

வகுப்புகளுக்கு முந்தைய நாளே நான் அங்கு சென்று விட்டிருந்தேன். அன்று முழு நிலவு. அன்றே எனக்குப் பின்னர் வந்திருந்த ஒரு சில பங்கேற்பாளர்களுடன்  பின்னிரவில் திறந்தவெளியில்  வட்டமாக அமர்ந்து கைநீட்டினால் தொட்டுவிடலாம்போல அண்மையில் தெரிந்த விண்மீன்களையும் தங்கத்தாம்பாளமாகக் காய்ந்துகொண்டிருந்த நிலவையும் பார்த்தபடிக்கு சில மணி நேரம் பேசிக்கொண்டிருந்ததை வாழ்நாளில் மறக்கவே முடியாது.

தோளில் கைகளைப் போட்டுக்கொண்டு அத்தனை தோழமைடன் இருந்த பணி ஓய்வு பெற்ற தம்பதியினர், (அவர்களிருவரும் இணைந்து  அங்கே கலந்து கொள்ளும் 9 வது வகுப்பு அது) சிறு மகனுடன் வந்திருந்த இளம் தம்பதியினர்,  மருத்துவர்கள், பறவை ஆர்வலர்கள், ஆய்வு மாணவிகள், இல்லத்தரசிகள், பொறியாளர்கள்,  உள்ளிட்ட பல வயதில், பலவகையான பங்கேற்பாளர்களுக்குக் கற்பித்தது மகிழ்ச்சி என்றால் மூன்று சக்கர சைக்கிளுடன்  காரில் அழைத்து வந்திருந்த ஒரு சிறு குழந்தையிலிருந்து, இன்னும் சொல்திருந்தா சிறுகுழந்தை, அங்கு வகுப்புகள் நடக்கையில் தனது 7 வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஒரு பெண்குழந்தை, பறவை ஆர்வலர் விஜயபாரதியின் இரு சிறு மகள்கள் மற்றும் எழுத்தாளர் கா. சிவாவின் பதின்மவயது மகள் வரை எல்லாப்பருவத்திலும் குழந்தைகள் வந்திருந்தது மகிழ்ச்சியை மட்டுமல்ல பெரும் நம்பிக்கையையும் அளித்தது.அந்தக்குழந்தைகளின் இயற்கை குறித்தான ஆர்வம் நான் சற்றும் எதிர்பார்த்திருக்காத அளவில் இருந்தது.

மேலும் நாம் பொதுவெளியில் சர்வசாதாரணமாகப்  பார்த்திருக்கும், குடும்பத்தினரை தொல்லை செய்துகொண்டு, அநாகரீகமாகப் பேசி, கூச்சலிட்டு அடுத்தவர்களையும் தொல்லைசெய்துகொண்டு கத்திக்கூப்பாடு போட்டு, ஏதாவது கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளின் சாயல் கூட அவர்களிடம் இல்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக என்னை வியப்படையச் செய்தது அவர்களின் independency.  குழந்தைகளில் ஒருவர் கூட பெற்றொர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடக்கவில்லை, காட்டிற்குள் நடந்து.ஓடைகளில், மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி, மரம் தழுவி, மரத்தடியில் மண்ணில் அமர்ந்து என எல்லாச்சமயங்களிலும் அவர்கள் தனியே அல்லது ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு தான் இருந்தார்கள்.

’’தூக்கிக்கொள், பசிக்கிறது, தண்ணீர் வேண்டும், தூக்கம் வருகிறது, அறைக்குப் போகலாம், போன் வேண்டும் என்றெல்லாம்  ஒரு நாள் கூட, ஒரு குழந்தைகூட ஒரு சமயத்தில் கூடச் சொல்லவில்லை. அவரவர் பைகளை அழகாகத் தோளில் மாட்டிக்கொண்டு நடந்து ஆர்வமுடன் கவனித்து மலர்களையும் இலைகளையும் வேர்களையும், பெரியவர்களுக்கு இணையாக அல்லது ஒரு படி மேலாகச் சேகரித்து கொண்டு வந்தார்கள். விஜயபரதியின் சிறுமகளின் பெயரை நான் ’’மஞ்சரி மஞ்சரி’’ என்று பல முறை வகுப்பில் சொல்லிக்கொண்டிருந்ததில் அவள் மகிழ்ந்துபோனாள்.

ஒரு அமர்வில் முதல் கேள்வியாக  // பூஞ்சைகளும் தாவரங்களா? //  என்று பிஞ்சுக்கையை உயர்த்தி முதல்க்கேள்வியைக் கேட்டதுகூட ஒரு குழந்தைதான்.

காலையும் மாலையும் பொழிந்த பனியோ, பகலெல்லாம் எரித்த வெயிலோ எதுவும் அவர்களின் ஆர்வத்துக்கு தடையாக இருக்கவில்லை. ஒரு மதியம் நல்ல வெயிலில் ஒரு நீண்ட நடை சென்றபோது குழந்தைகள் இணைந்து கைகளைக் கோர்த்துக்கொண்டு  ” Row Row Row a Boat” என்று இனிமையாகப் பாடிக்கொண்டு எங்களுக்கு முன்னே சென்றார்கள்.

அவர்களின் மனமுதிர்ச்சியும், மொழியும் கூட அப்படித்தான் ஆச்சர்யப்படுத்தியது. உணவு இடைவேளையில் அவர்களுக்குள் இப்படி செல்லச்சண்டை நடந்தது

‘’ நீ ஏன் எனக்கு பேராசைன்னு சொன்னே? எனக்கு பேராசையெல்லாம் இல்லை  சின்ன ஆசைதான்’’

அமர்வில் கற்றுக்கொடுத்த ஒரு விஷயத்தைத் தேநீர் இடைவெளியில் அத்தனை சிரத்தையாக  அழகாக வரைந்து ஒரு குழந்தை என்னிடம் காட்டியது. என் மகிழ்ச்சியை முழுவதுமாக எழுதிச் சொல்லிவிட முடியாது.

 

நேரில் அவர்களை அணைத்து உச்சி முகர்ந்தது சில முறைகள் என்றால் மானசீகமாகப் பல்லாயிரம் முறை குழந்தைகளைத் தழுவிக்கொண்டேன்.சமயம் கிடைக்கையில் எல்லாம் அவர்களை அழுந்த முத்தமிட்டுக் கொண்டிருந்தேன்

இயற்கையை அறிந்துகொள்வதின் அவசியத்தை உணர்த்தி வளர்க்கையில் குழந்தைகளின் வளர்ச்சியில், உடல்மொழியில், வளரியல்பில், குணாதிசயங்களில் எத்தனை விரும்பத் தக்க மாற்றம் உண்டாகும் என்பதற்கு, என் குழந்தைகள் சரண், தருண், சாம்பவிக்கு அடுத்ததாக  இவர்களை மட்டும்தான் நான் பார்க்கிறேன்.

 

இயற்கையை அறிந்துகொண்டு வளரும் குழந்தைகளின் பிரகாசமான வாழ்க்கைக்கும் இவர்களே எடுத்துக்காட்டு.

எனக்கு இந்தத்துறையின் எதிர்காலம்குறித்து நம்பிக்கை உண்டாக்கியவர்கள் என்னும் வகையில் நான் இக்குழந்தைகளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

 

தாவரவியல்துறை தாழ்வானதாக, பயனற்றதாகப் பொதுவில் நினைக்கப்படுகிறது, பள்ளி கல்லூரிப் பாடங்களில் இந்தத்துறையை யாரும் தேர்ந்தெடுப்பதில்லை , இந்ததுறையின் எதிர்காலமும் தாவரவியல் துறையில் நடைபெற வேண்டிய ஆய்வுகளும் கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது  என்பதிலெல்லாம் எனக்குப் பெரும் மனக்குறை உண்டு.

அதன்பொருட்டே நான் தொடர்ந்து தமிழில் கட்டுரைகள் எழுதிக்கொண்டும் இந்ததுறையைக்குறித்து உரையாற்ற கிடைக்கும் அரிய வாய்ப்புக்களையெல்லாம் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, வார இறுதிநாட்களில்   ஓய்வு,  என்பதைப்பற்றிக்கூட நினைக்காமல் எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வகுப்பு என் மனக்குறையை பெரிதும் நீக்கி நம்பிக்கை அளித்திருக்கிறது.

 

field Botany, class room Botany, practical Botany, forest therapy, treasure hunt போன்ற அங்கங்களைக் கொண்டிருந்த   எல்லா வகுப்புகளிலும்  அனைவரும் மிக ஆர்வமுடன் மிக மகிழ்வுடன்  என்னுடன் இணைந்து கற்றுக்கொண்டார்கள்.

இறுதி வகுப்பில் பங்கேற்பாளர்கள் அனைவருமாக எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியதும், ஒவ்வொருவராகக் கட்டியணைத்து விடைபெற்றதும் லோகமாதேவி என்னும் தனி மனுஷிக்கும் ஒரு தாவரவியல் ஆசிரியைக்கும் அளிக்கப்பட்ட அங்கீகாரம்  அல்ல, மிக முக்கியமான அறிவியல் துறைகளில் ஒன்றான  தாவரவியல் துறைக்கான அங்கீகாரம்தான் அது.

 

நீங்கள் வழக்கமாக் குறிப்பிடுவீர்கள் இந்த வகுப்புகளில் ஒரு போதும் பாடத்திட்டம் முன் வைக்கப்படுவதில்லை ஆசிரியர்கள்தான் முன் வைக்கப்படுவார்கள் என்று.

அப்படித்தான் நான் அனைத்து வகுப்புகளிலும் தாவரவியல் துறையின் மீது பெரும் பெற்றுக்கொண்டிருக்கும் ஒருத்தியாக என்னை முன்வைக்கிறேன்.

இந்த வகுப்புகள் நிகழக் காரணமாயிருக்கும் உங்களுக்கு என் நன்றியும் வணக்கங்களும்

 

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைஉருது இலக்கிய அறிமுக வகுப்புகள்
அடுத்த கட்டுரைமோனியர் விலியம்ஸ் பற்றி…