அல்மோராவில் பிரம்மசூத்திர வகுப்புகள் முடிந்து வந்து ஒரு வாரமாகிறது. அங்கு சென்று வந்ததே ஒரு கனவென ஆகிவிட்டிருக்கிறது. அங்கே அந்த வகுப்புகளை நடத்த எண்ணியது முதன்மையாக எனக்காகத்தான். எனக்கு ஒரு தொடக்கம் தேவைப்பட்டது, அதற்குள் செல்ல. நான் பிரம்மசூத்திரத்தில் கற்பிப்பது மிகமிக அடிப்படையானவற்றை. மிகக்குறைந்தபட்ச புரிதலை. என் மரபில் கற்பிக்கப்படுவனவற்றை. ஆனாலும் நான் உள்ளே செல்லவேண்டியிருந்தது. என் மொழியில் அது திரும்ப வரவேண்டியிருந்தது.

அதற்குரிய இடம் இமையமலை என எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. பனிமலைகள் தெரியும் ஒரு மலையடிவாரம். நான் பிரம்மசூத்திரத்தில் இருந்து கண் எடுத்தால் பனிமலைகள் பார்வைமுன் நின்றிருக்கவேண்டும். அதற்காகவே மோக்ஷா ஓய்விடத்தை தெரிந்தெடுத்தேன், அல்மோராவில் கஸார்தேவி ஆலயத்தில் அருகே. என் எண்ணம் போலவே அமைந்தது. இப்போது எண்ணும்போது அந்த இடத்தை தொலைவில் தெரிந்த நந்ததேவி பனிமலையடுக்கு வேறொன்றாக ஆக்கிவிட்டிருப்பதை உணரமுடிகிறது.

பனிமலை என ஏன் எண்ணினேன்? குளிர்ந்த ஒரு மண்டைதான் எனக்குள் இருந்திருக்கவேண்டும். என் அகத்தில் இருந்த வெம்மையை தணிக்கும் ஒன்று. ஆனால் அவ்வாறல்ல என அங்கே வகுப்பை நடத்தியபோது உணர்ந்தேன். அங்கே நான் உணர்ந்தது பிறிதொன்று. அகால் என்று சீக்கியர்கள் சொல்லும் ஒன்றின் இருப்பு. நாம்,நமது , இங்கே, இன்று என நம்மில் சுழலும் மையங்கள் எல்லாம் அழிந்த ஒரு நிலை. பிரம்மசூத்திரம் அளித்தது அத்தகைய பெருநிலையை. அந்த பனிமலைகள் அதற்கு சாட்சி
ஜெ